Published:Updated:

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!
##~##

கருணாநிதி பிறந்த நாள் பொதுக் கூட்டம் கலைஞர் டி.வி-யில் லைவ் ஓடிக்கொண்டிருந்தபோது, கழுகார் வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''மூன்று நாட்களும் கொண்டாட்டத்தில் இருந்தார் கருணாநிதி. ஆனால், அவரது பேச்சில் ஏனோ உற்சாகமே இல்லாதது மாதிரி இருந்தது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தயாளு அம்மாளை நேரில் ஆஜராகச் சொல்லி வந்த உத்தரவுதான் கருணாநிதியின் கலக்கத்துக்குக் காரணம் என்கின்றனர். முந்தைய பிறந்த நாள் வரை தயாளுவுடன்தான் விழாக்களில் பங்கேற்பார். ஆனால், அவர் உடல்நலன் இன்றி இருப்பதும் அவரை வலுக்கட்டாயமாக டெல்லிக்கு வரச் சொல்வதும் கருணாநிதியை வருத்தம் அடையவைத்தது. 'என்னைப் பொறுத்தவரை இன்றைக்கு நான் முழு நிம்மதியாக இல்லை. நான் அப்படிச் சொல்வதற்குக் காரணம் எனக்குப் பல்வேறுவிதமான இடையூறுகள், இடைஞ்சல்கள் எங்கிருந்தோ வருகின்றன’ என்று, வைரமுத்து நடத்திய கவிஞர்கள் சங்கமத்தில் வருத்தப்பட்டார் கருணாநிதி.''

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

''சொல்லும்!''

''ஜூன் 1-ம் தேதி மகளிர் அணி நடத்திய கருத்தரங்கில் துணைவி ராஜாத்தி அம்மாளுடன் கலந்துகொண்டார் கருணாநிதி. அவருக்கும் உடல்நிலை சரியில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவரது வலது கையில் அடிபட்டது. அதில் இருந்தே வலது கையைத் தூக்க முடியாத நிலையில் இருக்கிறார் அவர். ஆனாலும், அவரைக் கட்டாயப்படுத்திதான் கருணாநிதி வரவைத்துள்ளார். இருவருக்கும் மாலை மாற்றவைத்து மகளிர் அணியினர் உற்சாகமாக கருத்தரங்கத்தை நடத்தி முடித்தனர்.

மறுநாள் ஜூன் 2-ம் தேதி காலையில் இளைஞர் அணி நடத்திய கருத்தரங்குக்கும் சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் சென்று ராஜாத்தியை அழைத்துவந்தார் கருணாநிதி. மாலையில் நடந்த 'நெஞ்சுக்கு நீதி’ வெளியீட்டு விழாவுக்கும் ராஜாத்தி வந்தார். முன் வரிசையில் பிளாஸ்டிக் சேர் போட்டு இருந்தனர். ராஜாத்தி அம்மாள் உட்கார்ந்ததும் சேர் வளைந்து கீழே விழுந்துவிட்டார். மேடையில் இருந்த கருணாநிதி இதைப் பார்த்து கையைக் காட்டி உணர்ச்சிவசப்பட்டார். ராஜாத்தி அருகில் இருந்த கனிமொழி, தனது தாயைத் தூக்க... அதன் பிறகு மர நாற்காலி கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே அடிபட்ட கையில் மறுபடியும் அடிபட... வலி தாங்காமல் அழுதுவிட்டார் ராஜாத்தி. அதற்காக இடையில் எழுந்து சென்றால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படும் என்பதால், வலியைத் தாங்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தார் ராஜாத்தி. அதனால்தான் இந்தக் கூட்டத்திலும் அதிக நேரம் கருணாநிதி பேசவில்லையாம்.''

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

''ஓஹோ!''

'' 'நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தின் ஐந்தாம் பாகம் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் நன்னன் பேச்சு, கருணாநிதியின் உணர்ச்சியை அதிகமாகத் தூண்டிவிட்டது. 'கருணாநிதியை, தி.மு.க-வை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அணிகள் சேர்த்து பிணி செய்யாமல் இருந்தால் போதும். கட்சியில் அணிகள் இருந்தால், கட்சி அழிந்துவிடும். நம்முடைய எலும்பை எறும்பு இழுத்துச் சென்றுவிடும்’ என்று நன்னன் சொன்னபோது, கருணாநிதி மனம் வெம்பிச் சிரித்துவைத்தார். 'நான் பேச வேண்டியதை நன்னன் பேசிவிட்டார். அதற்காக நான் சொல்லித்தான் நன்னன் பேசினார் என்று நினைக்க வேண்டாம்’ என்றும் கருணாநிதி சொன்னார்.''

''அணி - பிணி பற்றி திரும்பத் திரும்பச் சொல்வதற்கு என்ன காரணம்?''

''பிறந்த நாள் காட்சிகளை முடித்துவிட்டு அந்த விஷயத்துக்கு வருகிறேன். 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கெல்லாம் கட்சித் தொண்டர்கள் சி.ஐ.டி காலனி வீட்டுக்கு வரத் தொடங்கினர். கருணாநிதி எழுந்துவிட்டார் என்று தெரிந்ததும் 4.15 மணிக்கு மேள தாளத்துடன் 'தலைவர் வாழ்க’ என்று கோஷமிட்டனர். அந்தப் பகுதியையேக் களேபரமாக்கினர். அப்போது, கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடோடி வந்து, 'பக்கத்து வீட்டுக்காரர்கள் தூங்க வேண்டாமா? மேளச் சத்தத்தை நிறுத்துங்கள். வாழ்த்துச் சொல்ல வேண்டிய நேரத்தில் திட்டவைத்துவிடாதீர்கள்’ என்று கண்டித்தனர். குளித்து முடித்த கருணாநிதி, புத்தாடை அணிந்து அவரது அம்மா - அப்பா படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். அவர்கள் படத்துக்கு முன்னாலேயே கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர், 5.30 மணிக்கு வீட்டுக்கு வெளியே சி.ஐ.டி. காலனியில் மரக்கன்று நட்டார். தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு 5.45 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். இங்கும் அதேபோன்ற வைபோகம் நடந்தது. தயாளு அம்மாள் உடல்நிலை காரணமாக ஃபோட்டோ வைபோகத்துக்கு மட்டும் தடை. முந்தைய நாள் விழாக்களுக்கு எல்லாம் வராத அழகிரி, இங்கு மட்டும் வந்திருந்தார். அந்த நேரத்தில்...''

''அந்த நேரத்தில்..?''

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

''குஷ்புவும் வந்தார்!''

''பொதுவாக கருணாநிதியின் பிறந்த நாள் அன்று, குஷ்பு சி.ஐ.டி. காலனி வீட்டுக்குத்தானே போவார்?''

''ஆமாம். கடந்த பல மாதங்களாக அவர் சி.ஐ.டி. காலனி வீட்டுக்குச் செல்வது இல்லை. அங்கு வரக் கூடாது என்று தடை போட்டுவிட்டனர். அதிகாலை 5 மணிக்கே அங்கு சென்று மரம் நடும்போது வாழ்த்துச் சொல்பவர் ஆச்சே அவர். ஆனால், இந்த ஆண்டு அதிசயமாக, அதுவும் தைரியமாக கோபாலபுரம் வீட்டுக்கு வந்தார். மெயின் கேட் வழியாக இல்லாமல், பின்புற வாசல் வழியாக (அதாவது, செல்வி வீட்டுக்கு முன்புறம் உள்ள வாசல்) உள்ளே போனார். பத்து, பதினைந்து நிமிடங்களில் வெளியே வந்தார். வந்தவர் உடனடியாக கார் ஏறாமல் ரோட்டிலேயே நின்று, நடந்து, போன் பேசிக்கொண்டே இருந்தார். அதன் பிறகுதான் கார் ஏறிப் போனார். 'குஷ்பு கோபாலபுரம் வீட்டுக்கு வந்ததை குடும்பத்தினர் யாரும் ரசிக்கவில்லை. உள்ளே இவர் போனதும், யாரும் அவ்வளவாக மதிக்கவில்லை’ என்கின்றனர். கேக் வெட்டுவதிலும் சில நிமிடங்கள் தாமதம் ஆகியிருக்கின்றன.' எல்லோரும் வாழ்த்துச் சொல்றதுக்குத்தான் அறிவாலயத்தில் நேரம் ஒதுக்கி இருக்கே. இங்கே எதுக்கு வர்றாங்க? இது ஃபேமிலி மெம்பர்ஸ் மட்டும் கலந்துக்கிற நிகழ்ச்சிதானே’ என்று குடும்ப வாரிசு ஒருவர் மையமாகச் சொல்லிக்கொண்டு இருந்தாராம். அதில் மனம் உடைந்துதான் குஷ்பு வெளியே வந்ததாகச் சொல்கின்றனர்.''

''பிறந்த நாள் நேரத்து பிரஷரா?''

''காலையில் கனிமொழியிடம் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சோனியா காந்தி, மதியம் ஒரு மணி அளவில் கருணாநிதிடமே போன் மூலம் பேசி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் பேசியிருக்கிறார். மத்திய அமைச்சர் நாராயணசாமி மதிய நேரத்தில் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துள்ளார். சோனியாவின் ஆர்வத்தைப்பார்க்கும்​போது, கருணாநிதியிடம் நட்பு பாராட்ட காங்கிரஸ் விரும்புவதுபோலவே தெரிகிறது.''

''பொறுத்திருந்து பார்ப்போம்!''

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

''எப்போதும் கருணாநிதியைத் தேடிவந்து பேராசிரியர் அன்பழகன் வாழ்த்துச் சொல்வது வழக்கம். இந்த முறை அன்பழகனுக்கு உடல்நிலை சரியில்லாததால், கருணாநிதியே அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்துப் பெற்றார்.''

''ம்!''

''அணி - பிணி பற்றி கருணாநிதி அதிகம் பேசுவதற்கு அர்த்தம் சொல்கிறேன்.

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

வரும் 5-ம் தேதி மதுரை ஐயர் பங்களா பகுதியில் மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் நிதியளிப்பு பொதுக் கூட்டம் நடக்கிறது. மாவட்டச் செயலாளர் மூர்த்தி இதற்கான ஏற்பாடுகளை பலமாகச் செய்துவருகிறார். மூன்று கோடி கொடுக்கத் திட்டமிட்டதாகவும் ஐந்து கோடி கொடுப்பார்கள் என்றும் சொல்கின்றனர். மதுரையில் நடக்கும் இந்தக் கூட்டத்துக்கு ஸ்டாலினையும் அழகிரியையும் ஒரே மேடையில் ஏற்றுவதுதான் மூர்த்தியின் திட்டம். ஆரம்பத்திலேயே, 'நான் வரவில்லை’ என்று சொல்லிவிட்டாராம் அழகிரி. அவரை அழையுங்கள் என்று ஸ்டாலினும் சொல்லவில்லையாம். இதற்கிடையில், '5-ம் தேதி நான் மதுரையில் இருப்பேன். ஆனால், கூட்டத்துக்கு வர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டாராம் அழகிரி. அதாவது, நான் மதுரையில் இருப்பேன்; ஸ்டாலின் என்னை மதித்து அழைத்தால் வருவேன் என்று இதற்கு அர்த்தம்!''

''ஸ்டாலின் அழைத்தாரா?''

''இதுவரை இல்லை. ஒருவேளை 5-ம் தேதி காலையில் அவர் அழைக்கலாம். இந்த இதழை வாசகர்கள் வாசித்துக்கொண்டு இருக்கும்போதுதான் அணியும் பிணியும் விலகியதா எனத் தெரியும்!''

''காத்திருப்போம்!''

''முன்பெல்லாம் தி.மு.க. தலைமையில் இருந்து யாருக்காவது எச்சரிக்கை நோட்டீஸ் போகிறது என்றால், அது போலீஸ் குற்றப்பத்திரிகை மாதிரிதான். கட்சியில் இருந்து ஒருவரை நீக்கிவைத்தால், மீண்டும் அந்த நபரைக் கட்சிக்குள் சேர்ப்பது குதிரை கொம்புதான். ஆனால், இப்போது பிட் நோட்டீஸ் போல எச்சரிக்கை நோட்டீஸ்கள் பறக்கின்றன. 'எங்களைக் கேள்வி கேட்க, தென் மண்டல அமைப்புச் செயலாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. உங்களுக்கு இல்லை’ என்று கட்சியின் அமைப்புச் செயலாளருக்கே பதில் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். மதுரையில் தொடங்கிய இந்தக் கலாசாரம் இப்போது மற்ற மாவட்டங்களிலும் பரவியிருக்கிறது. இதனால், பல மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களின் சொல்லுக்கு மரியாதை இல்லை. 'தா.கி. கொலைசெய்யப்பட்ட பிறகாவது அண்ணன் - தம்பி கோஷ்டி அரசியலை கருணாநிதி அடக்கியிருக்க வேண்டும்.’ என்கின்றனர். அது முடியாததால்தான் இப்போது அனைத்துக் கூட்டங்களிலும் அதைப் பற்றியே பேசுகிறார் எனச் சொல்கிறார்கள்'' என்றபடி அடுத்த சப்ஜெக்ட் மாறினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

''கருணாநிதி பிறந்த நாளை ஒட்டிய காமெடி செய்திதான் இது.

கடந்த 2-ம் தேதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 10 இடங்களில் மலிவு விலை அம்மா உணவகங்கள் திறந்து அ.தி.மு.க-வினர் கொண்டாடினர். இந்த நிலையில், மறுநாள் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த நாள் விழாவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அம்மா உணவகத்தில் கொண்டாடிப் பிரச்னையைக் கிளப்பியுள்ளார் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.பி.ஏழுமலையின் மகனும் மாநகராட்சி கவுன்சிலருமான ஏ.சசிகுமார்.''

''அம்மா உணவகத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவா?''

''கடந்த 3-ம் தேதி காலையில் கட்சிக்காரர்களோடு வந்த தி.மு.க. 20-வது வார்டு கவுன்சிலர் சசிகுமார், அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் 3,000 ரூபாயை கொடுத்து டோக்கன் கேட்டிருக்கிறார். 'ஒட்டுமொத்தமா டோக்கன் தர முடியாதுங்க!’ என்று ஊழியர்கள் பிடிவாதம் செய்ய... 'என்னங்க நான் என்ன என் வீட்டுக்கு வாங்கிட்டுப் போறதுக்கா கேட்கிறேன். எங்க தலைவர் பிறந்த நாளு அன்னைக்கு நாலு ஏழை ஜனம் வயிறார சாப்பிட்டு அவரை வாழ்த்தணுங்க. தயவுசெய்து கொடுங்க!’ என்று விடாப்பிடியாக கெஞ்ச... வேறு வழியில்லாமல் டோக்கனைக் கொடுத்திருக்கிறார்கள். பிறகு, அவரது வார்டு பகுதி மக்களை அழைத்துவந்து 'இன்னைக்கு நம்ம தலைவரோட பிறந்த நாளு. அதனால உங்களுக்கு அன்னதானம். அம்மா உணவகத்தில் போய் நல்லா சாப்பிடுங்க’ என்று கொடுக்க, மகிழ்ச்சியில் டோக்கனை வாங்கிச் சென்று இருக்கிறார்கள். அம்மா உணவகத்தில் எப்படி தி.மு.க. தலைவர் பிறந்த நாளைக் கொண்டாடலாம் என்று கொதித்துபோன ரத்தத்தின் ரத்தங்கள் அவசர அவசரமாக தலைமைக்கு ஃபேக்ஸ் அனுப்பியிருக்கிறார்கள்.''

''எதுவாக இருந்தாலும் வியாபாரம்தானே?''

''விஜயகாந்தின் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்து வருகிறது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ-வான சாந்தி வெளியேறப்போகிறார் என்பது கட்சியினருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. கடந்த அக்டோபர் 29-ம் தேதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் ஐந்து பேர் முதல்வரைச் சந்திக்க அனுமதி கேட்டு சபாநாயகரிடம் மனு அளித்தனர். அந்த ஐவரில் ஒருவர்தான் சாந்தி. கேபிளில் கேப்டன் டி.வி. சரியாகத் தெரிவது இல்லை; இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்று, கடந்த மாதம் சட்டசபையைப் புறக்கணித்துவிட்டு, கேபிள் இயக்குனரிடம் மனு கொடுத்தனர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள். அப்போதும் சாந்தி மிஸ் ஆகிவிட்டார். இதை உஷாராகக் கண்டுபிடித்துத் தடுக்க முடியாததால், விஜயகாந்த் அவஸ்தையில் இருக்கிறார்.''

''சொல்லும்!''

''இப்போதைய நிலவரப்படி தே.மு.தி.க., தி.மு.க. இரு கட்சிகளுக்குமான பலமும் 23 எம்.எல்.ஏ-க்கள்தான். ஆனால், அ.தி.மு.க. ஆதரவுக்கு மாறிய ஆறு பேரும் இன்று வரை தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களாகவே இருப்பதால், விஜயகாந்தின் பதவி தப்பித்திருக்கிறது. இதுவரை கட்சித் தலைமை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்கள் கட்சியைவிட்டு விலக்கிவைக்க வேண்டும். அப்படி விலக்கிவிட்டால் விஜயகாந்தின் பதவி பறிபோகும். அப்படி விலக்கப்படுவதால், சம்பந்தப்பட்ட ஆறு எம்.எல்.ஏ-க்களுக்கும் எந்தவிதப் பயனும் இல்லை. கட்சி எம்.எல்.ஏ-க்களில் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ-க்கள் தனித்து வந்தால்தான், போட்டி தே.மு.தி.க-வை உருவாக்க முடியும். அவர்களது எம்.எல்.ஏ. பதவியும் நீடிக்கும். இல்லாவிட்டால் கட்சியைவிட்டு விலகியவுடன், அவர்களது பதவியும் பறிபோய்விடும்.  தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால்தான் ஆறு எம்.எல்.ஏ-க்கள் விஷயத்தில், இரு தரப்பினருமே அமைதி காத்து வருகின்றனர். ஆனால், இந்த அமைதியை வெகு காலம் நீடிக்கவிட மாட்டார் ஜெயலலிதா என்கின்றனர்.

தே.மு.தி.க-வைச் சேர்ந்த மேலும் 11 எம்.எல்.ஏ-க்கள் முதல்வரைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இன்னும் நான்கு எம்.எல்.ஏ-க்கள் வெளியேறினாலே, போட்டி தே.மு.தி.க. உருவாகிவிடும். தே.மு.தி.க-வை எதிர்த்து போட்டியிடத் தகுதி வந்துவிடும். ஆக, விஜயகாந்தின் பதவியும் இப்போது ஜெயலலிதா கையில்தான் இருக்கிறது என்கின்றனர்'' என்றவர், ''தி.மு.க-வில் உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறதா என்று அறிவாலயத்துக்கு ஃபேக்ஸ் அனுப்பி கேள்வி கேட்ட முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, அ.தி.மு.க-வுக்குத் தாவ தயாராகிவிட்டார்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.

அட்டைப்படம்:  சொ.பாலசுப்ரமணியன் படங்கள்: சு.குமரேசன், 'ப்ரீத்தி’ கார்த்திக் வீ.நாகமணி, ஜெ.வேங்கடராஜ்

 தா.பாண்டியனுக்கு எதிர்ப்பு!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. தா.பாண்டியன் பேசும்போது, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தான் இருப்பதாகவும், தனக்கு ஆளும் கட்சி ஆதரவு இருப்பதாகவும் பேசியிருக்கிறார். தனக்கு ராஜ்யசபா ஸீட் கொடுக்க வேண்டும் என்று முதல்வரே விரும்புவதாக அழுத்திச் சொல்லியிருக்கிறார். பாண்டியனின் பேச்சுக்கு செயற்குழுவில் கடும் எதிர்ப்பு. 'ராஜாதான் மீண்டும் எம்.பி-யாக வேண்டும்’ என்ற தொனியில் மூத்த தலைவர்கள் அனைவரும் பேசியிருக்கின்றனர். 'வேட்பாளரை இப்போது முடிவு செய்ய வேண்டாம். முதல்வரைச் சந்தித்து ஆதரவு கேட்போம். பிறகு பார்த்துக்கொள்வோம்’ என்று முடிவுசெய்திருக்கிறார்கள். இந்தக் குழுவில், தா.பாண்டியன் அனேகமாக இடம்பெற மாட்டார் என்கின்றனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

 ''அமைச்சரிடம் புகார் தந்தால், உருட்டுக்கட்டையால் அடிக்கிறாங்க!''

தேனி களேபரம்

 அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கண் முன்னே ரத்தம் சொட்டச் சொட்ட நடந்த களேபரத்தால் மிரண்டுகிடக்கிறது தேனி அ.தி.மு.க.மாவட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்,  தேனி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த 1-ம் தேதி காலை  நடைபெற்றது. அப்போது, தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட மகாராஜன் என்பவர் திடீரென ஓடிவந்து, ''ஐயா காப்பாத்துங்க... ஐயா, காப்பாத்துங்க...'' என அமைச்சரிடம் கதற... திக்கித்துப்போனார்கள் கூட்டத்தில் இருந்தவர்கள். 'உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்கப்பா’ என ஓ.பி.எஸ். உத்தரவிட, 'என்னை அடித்தவரைக் கைதுசெய்தால்தான் ஆஸ்பத்திரிக்குப் போவேன்’ என முரண்டுபிடித்தார் மகாராஜன். அமைச்சரும் கட்சியினரும் சமாதானம் பேசியும், எவ்விதப் பலனும் இல்லை. 'உங்க ஆளுங்கதான் என்னை அடிச்சாங்க. எனக்கு நியாயம் கிடைக்கலைனா, அம்மாவிடம் சென்று நியாயம் கேட்பேன்!’ என்று ஆவேசம் காட்டினார் மகாராஜன். அதிகாரிகள் புடைசூழ இருந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல் ஓ.பி.எஸ். தவிக்க, அரை மணி நேரம் கடந்தும் அடித்தவர்களைக் கைதுசெய்வது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஒருவழியாக, மகாராஜனை அலேக்காகத் தூக்கி 108 ஆம்புலன்ஸில் திணித்தனர் அ.தி.மு.க-வினர்.

தேனி அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவந்த மகாராஜன், 'நான் கடந்த 25 வருடங்களாக தேனி நகர எம்.ஜி.ஆர். அணிச் செயலாளராக இருக்கிறேன். நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சிக்காக உழைத்த அ.தி.மு.க-வினரை விட்டுவிட்டு தி.மு.க-காரர்களுக்குப் பதவியைத் தந்துள்ளனர். அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர்தி.மு.க-வுக்குப் போய்வந்த சின்னசாமி என்பவருக்கு தேனி வீட்டு வசதி வாரிய சங்கத் தலைவர் பதவியைத் தந்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்களில் கட்சிக்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிட்டவர் அந்த சின்னசாமி. இடையில் தி.மு.க-வுக்கும் போய் வந்தவர். இவருக்கு எப்படி ஸீட் கொடுத்தீர்கள் என அமைச்சரிடம் புகார் கொடுத்தால், என்னை விரட்டி விரட்டி உருட்டுக்கட்டையாலும் கம்பியாலும் தாக்கினர். உயிருக்குப் பயந்து கலெக்டர் அலுவலகம் வந்து அமைச்சரிடம் முறையிட்டேன். ஆனால், அமைச்சர் கண்டுகொள்ளவே இல்லை தேனி அ.தி.மு.க-வில் ஒரு சிலர் நடத்தும் அராஜகங்களை அம்மாவிடம் கொண்டுசெல்லப்போகிறேன்’ என்று சொல்லிவருகிறாராம்.

 காற்று வாங்கினாரா? வறட்சியைப் பார்வையிட்டாரா?

 தனிப்பட்ட பயணமாக  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு கடந்த வாரம் வந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 3-ம் தேதி  அரசு முறை பயணமாக ஸ்ரீரங்கத்துக்கு மீண்டும் வந்தார். அங்கு நடைபெற்ற அரசு விழாவில், சுமார் 1,855 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 5.30 மணிக்கு தொடங்குவதாக இருந்த விழா, மேக மூட்டம் காரணமாக முன்கூட்டியே தொடங்கியது. ஒரு மணி நேரம் மேடையை அலங்கரித்தார் ஜெயலலிதா.  

மிஸ்டர் கழுகு: பிறந்தநாள் பிரஷர்!

மணப்பாறை அருகே 1,200 கோடி ரூபாய் மதிப்பில் காகித அட்டை தயாரிக்கும் ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை தொடர்பாக அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து போராடிவருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன், அந்த விவசாயிகளை தனது வீட்டுக்கு அழைத்த திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், 'உங்களது விளைநிலங்களை பாதிக்காதவாறு புதிய திட்டம் தயாரித்துள்ளோம். அதனால், நீங்கள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை’ என சமாதானம் செய்து  இருக்கிறார். பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த மக்கள், கலெக்டரின் பேச்சை நம்பி எதிர்ப்பைக் கைவிட்டனர்.

வழிநெடுக காணப்பட்ட தொண்டர்களுக்கு கையை அசைத்தபடியே விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்ட முதல்வர், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காவிரிப் பாலத்தில் காரை நிறுத்தினார். அங்கு காற்று வாங்கியதாக சிலரும், வறண்டு கிடக்கும் காவிரியைப் பார்வையிட்டதாக சிலரும் சொல்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism