##~## |
'நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளரான குமார் பாண்டியன், அந்தப் பொறுப்பில் இருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார். அந்தப் பொறுப்புக்கு ஒருவர் நியமனம் செய்யப்படும் வரை புறநகர் மாவட்டச் செயலாளரான முருகையா பாண்டியன் கூடுதலாகக் கவனிப்பார்’- இப்படி ஓர் அறிவிப்பு வெளியானதும் அ.தி.மு.க. வட்டாரம் அதிர்ந்துபோனது. காரணம், கடந்த எட்டு நாட்களுக்கு முன்புதான் நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார் குமார் பாண்டியன்.
ஜெயலலிதா அறிக்கை வெளியான அடுத்த சில நிமிடங்களில், செங்கோட்டை அருகே உள்ள இலஞ்சியில் இருந்த குமார் பாண்டியனை போலீஸார் நெல்லைக்கு அழைத்துவந்து, நில மோசடி வழக்குத் தொடர்பாக விடிய விடிய விசாரணை நடத்தினர். அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் இதுதொடர்பாகப் பேசினோம். ''நெல்லை மாவட்ட அ.தி.மு.க-வில் கோஷ்டிகள் அதிகம். எந்தக் கோஷ்டியையும் சேராத குமார் பாண்டியனை மாவட்டச் செயலாளர் ஆக்கினர். ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையில்தான் அவருக்குப் பொறுப்புக் கொடுத்தாங்க. பொறுப்புக்கு வந்த சில நாட்களிலேயே அவர் மீது நிறையப் புகார்கள் அம்மாவின் கவனத்துக்குப் போனது. உடனே நடவடிக்கை எடுத்துட்டாங்க. இதில் ஓ.பி.எஸ்.தான் அரண்டுபோய்ட்டார்'' என்று சொல்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்னொரு தரப்பினரோ, ''குமார் பாண்டியன் அ.தி.மு.க-வில் குற்றாலம் நகரச் செயலாளராக இருந்தவர். கடந்த ஆட்சிக் காலத்தில் குற்றாலம் பேரூராட்சித் தலைவராகவும் இருந்தார். அந்த சமயத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளரான கருப்பசாமி பாண்டியனுடன் நெருக்கத்தில் இருந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்பட ஆதாரங்களை அம்மாவுக்கு அனுப்பிவிட்டனர். அதற்குப் பிறகுதான் அம்மா நடவடிக்கை எடுத்தாங்க.
இதுதவிர, கடந்த வாரத்தில் சங்கரன்கோவில் பயணியர் விடுதியில் குமார் பாண்டியன் இருந்தபோது, முத்துச்செல்வி எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்களுக்கும், மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்மன் முருகையா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் முத்துச்செல்வி தரப்பைச் சேர்ந்த மதுரம் என்பவரும் முருகையா ஆதரவாளரான சண்முகையா என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
முத்துச்செல்வியை ஒன்றியச் செயலாளரான முருகையா அசிங்கமாகத் திட்டினார். இதையெல்லாம் தடுக்கவேண்டிய குமார்

பாண்டியன், அத்தனையையும் வேடிக்கை பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார். முத்துச்செல்வி கட்சி மேலிடத்தில் புகார் செய்தார். விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நடத்திய விசாரணையில், ஒன்றியச் செயலாளர் முருகையா மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டது. நடந்ததை வேடிக்கை பார்த்த மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றது அந்தக் குழு. இருவரின் பொறுப்புகளையுமே அம்மா பறிச்சிட்டாங்க'' என்கிறார்கள்.
முத்துச்செல்வியிடம் பேசினோம். ''ஒரு பெண் என்றும் பாராமல் சிலர் என்னை அவதூறாகத் திட்டி

அசிங்கப்படுத்தினாங்க. அந்தச் சம்பவம் பற்றி அம்மாவின் கவனத்துக்குக் கொண்டுசென்றேன். அவர்கள் விசாரிச்சு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்'' என்று மட்டும் சொன்னார்.
போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, ''குமார் பாண்டியன் மீது நில மோசடி புகார் வந்திருக்கிறது. இலஞ்சியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். அவருக்குச் சொந்தமான 72 சென்ட் நிலத்தை குமார் பாண்டியனிடம் இரண்டு லட்சத்துக்கு அடமானம் வைத்திருக்கிறார். அந்தப் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டு நிலத்தைக் கேட்டதற்கு, தர மறுத்துள்ளார். இதுபற்றி சுப்பையா முதல்வரின் தனிப் பிரிவில் புகார் செய்துள்ளார். அங்கிருந்து எங்களுக்கு விசாரிக்கச் சொல்லி உத்தரவு வந்தது. அவரை அழைத்து விசாரித்தோம். அவர் கைதுசெய்யப்படுவாரா என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும்'' என்றார்கள்.
குமார் பாண்டியன் தரப்பில் பேசுபவர்களோ, ''கோஷ்டிகளே இருக்கக் கூடாது என்று நினைப்பவர்தான் குமார் பாண்டியன். அதனால்தான் மாவட்டச் செயலாளர் பொறுப்பு அவரைத் தேடி வந்தது. தி.மு.க-வில் உள்ளவர்களுடன் மரியாதை நிமிர்த்தமாகப் பேசுவாரே தவிர, கட்சிக்குக் கனவிலும் துரோகம் நினைக்காதவர். 'அம்மா கொடுத்தாங்க. அம்மா எடுத்துக்கிட்டாங்க. அம்மா எது செஞ்சாலும், அது சரியாதான் இருக்கும்’ என்றுதான் இப்போதும் சொல்லிவருகிறார். அவர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை விரைவில் நிரூபிப்பார்'' என்கிறார்கள்.
தென் மாவட்டத்தில் கோஷ்டிப்பூசல்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிவரும் சில அமைச்சர்களின் பட்டியலும் ஜெயலலிதா கைகளில் இருக்கிறதாம். விரைவில் அவர்கள் மீதும் நடவடிக்கை பாயலாம். அத்துடன் குமார் பாண்டியனைப் பரிந்துரைத்த ஓ.பன்னீர் செல்வமும் கொஞ்சம் நடுக்கத்தில் இருக்கிறாராம்.
- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்