Published:Updated:

மதுரையை மீட்ட ஸ்டாலின்...

'காது குத்திய' அழகிரி!

மதுரையை மீட்ட ஸ்டாலின்...

'காது குத்திய' அழகிரி!

Published:Updated:
##~##

மதுரை எப்போது அழகிரியின் கோட்டை​யானதோ, அன்று முதல் ஸ்டாலினின் மதுரை விஜயம் எல்லாமே வேதனை விஜயமாகத்தான் அமைந்தது. துணை முதல்வராக சுழல் விளக்குக் காரில் வந்தபோதுகூட அவரைப் புறக்கணித்தனர் அழகிரி ஆதரவாளர்கள். அந்தப் புறக்கணிப்புகளுக்கு எல்லாம் மருந்திட்டதுபோல அமைந்தது, 5-ம் தேதி மதுரையில் நடந்த நிதியளிப்புக் கூட்டம். 

உற்சாக வரவேற்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்டாலினின் வருகையை எதிர்பார்த்து மதுரை விமான நிலையத்தில் எக்கச்சக்கக் கூட்டம். காலை 11 மணியில் இருந்து அணிவகுத்த வாகனங்களால் கடுமையான நெரிசல். செண்டை வாத்தியமும் வாடிப்பட்டி மேளமும் உசுப்பேத்த, கரகாட்டக்​காரர்களோடு குத்தாட்டம் போட்டனர் உடன்பிறப்புக்கள்.

வழக்கமாக அழகிரியின் காரில் பயணிக்கும் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, ஸ்டாலின் காரில் ஏறுவதை தொண்டர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அழகிரி வீட்டுக்குப் போகிறாரா, சங்கம் ஹோட்​டலுக்குப் போகிறாரா என்ற தடுமாற்றத்துடன் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஸ்டாலின் காரைப் பின்தொடர... நுழைந்தது சங்கம் ஹோட்டலுக்குள்தான்.

மதுரையை மீட்ட ஸ்டாலின்...

அழகிரி போட்ட உத்தரவு!

மதுரையை மீட்ட ஸ்டாலின்...

அமைச்சராக இருக்கும்போதே கட்சிக் கூட்டங்களில் ஆர்வம் காட்டாதவர் அழகிரி. கடைசியாக அவர் கட்சிக் கூட்டத்தில் மேடையேறி ஒரு வருடம் ஆகிறது. ஆனால், அவரது சொந்தத் தொகுதியில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருந்தார் கருணாநிதி.

ஆனால், அழகிரி கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பே உறுதியாகச் சொன்னார்கள். அதுமட்டுமின்றி, ''புறநகர் மாவட்ட நிர்வாகிகள் வேணா போகட்டும். சிட்டியில இருந்து யாரும் போக வேண்டாம்'' என்று உத்தரவிட்டாராம் அழகிரி.

காதுகுத்து விழாக்கள்!

ஸ்டாலின் மதுரைக்கு வந்ததில் இருந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த அழகிரி, திடீரென தன் காரை எடுத்து வெளியே நிறுத்தச் சொன்னார். மனம் மாறிவிட்டார் என்று பார்த்தால், அண்ணன் கலந்துகொண்டது உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் அன்புமாறன் இல்லக் காதணி நிகழ்ச்சியில்.

ஸ்டாலின் பொதுக் கூட்டத்துக்குப் புறப்படும்போது, அழகிரி வீட்டுக்குச் செல்வார் என்றும் அங்கிருந்து இருவரும் ஒரே காரில் வருவார்கள் என்றும் சிலர் நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கை பலிக்கவில்லை.

6-ம் தேதி செல்லூரில் இன்னுமொரு காதுகுத்து விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார் அழகிரி. மொத்தத்தில் 'கருணாநிதிக்கே காதுகுத்திவிட்டார் அண்ணன்’ என்கிறார்கள் தி.மு.க-வினர்.

மேடையில் அழகிரி பெயர்!

விழாவில் அழகிரி பங்கேற்பது சந்தேகம் என்று தெரிந்தாலும், ஸ்டாலினுக்கு நிகராக அழகிரியின் பெயரைப் போட்டுத்தான் விளம்பரங்கள் செய்யப்​பட்டிருந்தன. மாவட்டச் செயலாளர் மூர்த்தி முதல் கிளைச் செயலாளர்கள் வரை அனைவருமே இருவருக்கும் சம மதிப்பு கொடுத்து போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

மாநாடு போல கூடியிருந்தது கூட்டம். அண்டை மாவட்டச் செய​லாளர்கள் எல்லாம் மேடையில் வீற்றிருக்க, தேனி மாவட்டச் செயலாளர் மூக்கையா வராததைக் கவனித்தார் ஸ்டாலின். அழகிரி வராதபோதும்கூட, வரவேற்புரை நிகழ்த்தியவர்கள் முதல் மூர்த்தி வரை அழகிரியின் பெயரை பலமுறை உச்சரித்தனர். ஆனால், ஸ்டாலின் தன் பேச்சில் அழகிரியின் பெயரைச் சொல்லவில்லை.

மூர்த்திக்குப் பாராட்டு!

தமிழரசியும் சேடப்பட்டி முத்தையாவும் கருணாநிதியின் புகழ் பாடி, ஜெயலலிதாவை வசை பாடிவிட்டு உட்கார, மாவட்டச் செயலாளர் மூர்த்தி, ''234 சட்டசபைத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதைக் குறிக்கும்விதமாக 234 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாகத் தருகிறோம்'' என்றார்.

கூட்டத்தைப் பார்த்து உற்சாகமடைந்த ஸ்டாலின், ''இது பொதுக் கூட்டம் அல்ல; மாநில மாநாடு. இதற்காக உழைத்த மாவட்டச் செயலாளர் மூர்த்தியை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். மூர்த்தி பெரிதா? கீர்த்தி பெரிதா என்று கேட்பார்கள். நமக்கு கீர்த்தியைவிட இந்த மூர்த்திதான் பெரிது'' என்று பாராட்டி மகிழ்ந்தார். இதன் மூலம் ஸ்டாலின் இதயத்தில் இடம்பிடித்துவிட்ட மூர்த்தி, அழகிரியின் கோபத்துக்கும் ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பொதுவாகவே, தலைமைக்கான தகுதியுடன்​தான் ஸ்டாலின் பேசுவார். ஆனால், இந்தக் கூட்டத்தில் குட்டி, கழுதை என்று கொஞ்சம் கீழே இறங்கிப் பேசியது தேவையா?

- கே.கே.மகேஷ், செ.சல்மான்

படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism