Published:Updated:

கலைக்கப்பட்ட மாணவர் காங்கிரஸ்... கொதிக்கும் கோஷ்டிகள்!

''ஒழுங்காக தேர்தல் நடத்தத் தெரியவில்லை!''

கலைக்கப்பட்ட மாணவர் காங்கிரஸ்... கொதிக்கும் கோஷ்டிகள்!

''ஒழுங்காக தேர்தல் நடத்தத் தெரியவில்லை!''

Published:Updated:
##~##

தமிழக காங்கிரஸின் புகழ், கொடிகட்டிப் பறக்கிறது. தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இரண்டு ஆண்டுகளாக நிர்வாகிகளை நியமிக்க​வில்லை. இளைஞர் காங்கிரஸ் தலைவரை அதிரடியாக நீக்கிவிட்​டனர். இதைத் தொடர்ந்து, மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் ஒட்டு​மொத்தமாக நீக்கிவிட்டனர். இனி நீக்குவதற்கு என்ன இருக்கிறது என்று யோசித்துக்கொண்டு இருப்பார்கள் போல! 

தமிழக மாணவர் காங்கிரஸ் மற்றும் மாநில, தேசியப் பிரதிநிதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரலில் நடந்தது. மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், சிதம்பரம் ஆதரவாளர்களான கலையரசன், ராமநாதன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதின. சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போதே, 'கலையரசன் கல்லூரி மாணவரே அல்ல. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்’ என்று சிதம்பரம் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனாலும் வாக்குகள் எண்ணப்பட்டன. கலையரசன் 817 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலைக்கப்பட்ட மாணவர் காங்கிரஸ்... கொதிக்கும் கோஷ்டிகள்!
கலைக்கப்பட்ட மாணவர் காங்கிரஸ்... கொதிக்கும் கோஷ்டிகள்!

இதையடுத்து, தேர்தல் அதிகாரி ரோஜி எம்.ஜான், மஜூம்தார் ஆகியோர் கலையரசன் படிப்பதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருந்த கடலூர் பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சென்று ஆய்வு செய்தனர். அட்மிஷன் விவரம், வருகைப்பதிவேடு ஆகியவற்றை சரிபார்த்து, அவர் கல்லூரி மாணவர்தான் என்பது உறுதி ஆனதால், அவரது வெற்றி செல்லும் என்று மே 7-ம் தேதி அறிவித்தனர். அதே நேரத்தில், கள்ள ஓட்டுக்கள், போலி அடையாள அட்டை பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த ராமநாதன் உட்பட ஒன்பது பேரை சஸ்பெண்ட் செய்து, 'அவர்கள் மூன்று மாதங்களுக்குக் கட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடாது. நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதம் கொடுத்தே அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியது.

மாணவர் காங்கிரஸ் மேலிடத்தின் இந்த அறிவிப்பு, சிதம்பரம் கோஷ்டியை அதிர்ச்சி அடையவைத்தது. இதையடுத்து, கலையரசன் குறித்த விசாரணையில் தீவிரமாக இறங்கினர். சிதம்பரம் அணியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவர் பிரபுதாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், கலையரசன் பற்றி விவரம் பெற்று, மாணவர் காங்கிரஸுக்கும் ராகுல் காந்திக்கும் அனுப்பிவைத்தார்.

இந்த உச்சகட்டக் குழப்பம் காரணமாக, கடந்த 3-ம் தேதி, தமிழக மாணவர் காங்கிரஸைக் கலைத்து​விட்டதாக டெல்லி தலைமை அதிரடியாக உத்தரவிட்டது. மாணவர் காங்கிரஸ் தேசியத் துணைத் தலைவரும், மாணவர் தேர்தலுக்கான அதிகாரியுமான ரோஜி எம்.ஜான், ''கலையரசன், ராமநாதன்,

கலைக்கப்பட்ட மாணவர் காங்கிரஸ்... கொதிக்கும் கோஷ்டிகள்!

ஜோஸ்வா, ரெகுல் கிருஷ்ணா, இனியன் ராபர்ட், ஜனனி சங்கீதா, பிரசாந்த், பர்வேஷ் அகமது, ஷபி முகமது, செவ்வேல் ஆகியோரின் வெற்றி செல்லாது. விரைவில் மாணவர் காங்கிரஸுக்கு மறுதேர்தல் நடத்தப்படும். தேர்தலில் தில்லுமுல்லு செய்த 10 பேரும் இதில் போட்டியிட முடியாது'' என்றார்.

இந்த முடிவுகுறித்து சிதம்பரம் அணியைச் சேர்ந்த பிரபுதாஸ், ''கலை​யரசனை டிஸ்மிஸ் செய்துவிட்டு அவருக்கு அடுத்தபடியாக ஓட்டு வாங்கிய ராமநாதனைத் தலைவராக்கி இருக்க வேண்டும். ஆனால், எங்கள் அணியைச் சேர்ந்த ஒன்பது பேரையும் டிஸ்மிஸ் செய்துள்ளது ஒருதலைப்​பட்சமான நடவடிக்கை. இது யாரைத் திருப்திப்படுத்துவதற்காக என்பது தெரியவில்லை. தேர்தல் முறைகேடு என்று எங்கள் மீது குற்றம்சாட்டுகிறார்கள். தேர்தலை ஒழுங்காக நடத்தத் தெரியாதவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து, தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்ன நியாயம்? ஆதாரமற்ற குற்றச்​சாட்டைவைத்து, கட்சி வளர்ச்சிக்குப் பாடுபடுவோரைக் களங்கப்​படுத்த வேண்டாம். மாணவர் காங்கிரஸ் கலைப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று டெல்லிக்குக் கோரிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.

கலையரசன் கூறுகையில், ''தமிழக மாணவர் காங்கிரஸில் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம் பேரை நாங்கள்தான் சேர்த்தோம். மாணவர் காங்கிரஸில் தொடர வேண்டும் என்றுதான் டிகிரி முடித்த பிறகு பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். ஜூன் மாதம் அட்மிஷன் போட்டுவிட்டேன். கல்லூரிக்கு முறையாகச் சென்று வந்துள்ளேன். மாணவர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை, கல்லூரி நிர்வாகிகள் தேர்தல் என்று கட்சிப் பணியில் மும்முரமாக ஈடுபட்டதால், பரீட்சை எழுத முடியவில்லை. இந்த வருஷம் எழுதாவிட்டாலும், அடுத்த வருடம் தேர்வு எழுதலாம். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அதற்காக நான் கல்லூரி மாணவரே இல்லை என்று அபாண்டமான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றனர். கல்லூரி ஆவணங்களின்படி நான் அந்தக் கல்லூரி மாணவன்தான். அதைத் தேர்தல் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஏற்றுக்கொண்டுள்ளனர். மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று பணிபுரிந்து வரும் நிலையில், என்னை டிஸ்மிஸ் செய்துள்ளனர். இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. மாணவர் காங்கிரஸ் கலைப்பை ரத்துசெய்து, எங்களைக் கட்சிப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

மாணவர் காங்கிரஸைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது வாசன், சிதம்பரம் கோஷ்டிகளைக் கொதிப்படைய வைத்துள்ளது.  இத்தனை களேபரத்திலும் 'ஆளே இல்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆத்துறாங்களோ?’ என்று கமென்ட் அடிக்கிறார் ஒரு காங் கிரஸ்காரர்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism