Published:Updated:

மார்க்சிஸ்ட்களை ராஜபக்ஷேவின் நண்பனாகக் காட்டுவது தர்க்கரீதியானது அல்ல!

மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார் உ.வாசுகி

மார்க்சிஸ்ட்களை ராஜபக்ஷேவின் நண்பனாகக் காட்டுவது தர்க்கரீதியானது அல்ல!

மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார் உ.வாசுகி

Published:Updated:
##~##

'மார்க்சிஸ்ட்கள் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரைகளின் சாராம்சம் எழுப்பியுள்ள சில முக்கியக் கேள்விகளுக்கு, மார்க்​சிஸ்ட் கட்சியின் சார்பில், சில விளக்கங்களைக் கொடுக்க விரும்புகிறோம். 

இலங்கைப் பிரச்னை குறித்து சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை எடுக்கிற 'திராவிடக் கட்சிகளின் சிந்தனைக்கு’ என்று எழுத, கட்டுரையாளருக்குத் தோன்றவில்லை. அகில இந்திய அளவில் ஒரு நிலையும் மாநிலத்தில் ஒரு நிலையும் எடுக்கிற 'இரு பெரும் தேசியக் கட்சிகளின் சிந்தனைக்கு' என்று எழுதத் தோன்றவில்லை. ஆனால், 'மார்க்சிஸ்ட்களின் சிந்தனைக்கு' எழுதியிருக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1920-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை, பல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பறிகொடுத்து, தேச விடுதலைக்காகவும் மக்கள் ஒற்றுமைக்காகவும் வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தீண்டாமை, பெண்ணடிமைத்​தனம் போன்ற சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஓய்வறியா உழைப்பை, அர்ப்பணிப்பு உணர்வுடன் செலுத்திவருகிறது மார்க்சிய இயக்கம். இந்தியாவிலும் உலகெங்கிலும் மக்களின் நலனுக்காக சமரசம் இன்றிக் குரல் கொடுக்கிற, போராடுகிற மார்க்சிஸ்ட் கட்சி, இலங்கையில் மட்டும் மக்களுக்கு எதிராக எப்படி நிலைப்பாடு எடுக்கும்? இலங்கை இனப் பிரச்னையில் பல்லாயிரக்கணக்கில் பூர்வகுடி தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் படுகொலை செய்யப்பட்டதையும் அவர்கள் அடைந்த துன்பங்​களையும் குறித்து யாராலும் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்களாக மார்க்​சிஸ்ட்டுகளைக் கட்டம் கட்டுவது ஒரு சிலரின் அரசியலுக்குத் தேவைப்படலாம். ஆனால், கட்டுரையாளருக்கு என்ன தேவை என்பது புரியவில்லை.

மார்க்சிஸ்ட்களை ராஜபக்ஷேவின் நண்பனாகக் காட்டுவது தர்க்கரீதியானது அல்ல!

இப்படிக் கூறுவதால் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சிக்கக் கூடாது என்பதல்ல. யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், 'தனி ஈழம் தீர்வல்ல’ என்ற நிலைப்பாடு எடுக்கும் ஒரே காரணத்துக்காக, மார்க்சிஸ்ட் கட்சியை இலங்கைத் தமிழர்களின் எதிரி, ராஜபக்சேவின் நண்பன் என்று வரையறைகள் செய்வது தர்க்கரீதியானது அல்ல.  

மார்க்சிஸ்ட்களை ராஜபக்ஷேவின் நண்பனாகக் காட்டுவது தர்க்கரீதியானது அல்ல!

முதல் ஐந்து கட்டுரைகளின் அடிநாதமாக ஏகாதிபத்தியம் குறித்த கருத்துக்களே இடம்பெறுகின்றன. மார்க்ஸ், லெனின் மேற்கோள்களும் அதிகம் எடுத்தாளப்பட்டுள்ளன. பிரச்னை என்னவென்றால், அதில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலே இல்லை.

முதலாளித்துவத்தின் உச்ச கட்டப் படிநிலையே ஏகாதி​பத்தியம் என்று கூறும் லெனின், அதன் அடிப்படையாக ஐந்து முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறார். லெனினுக்குப் பின் பல்லாண்டுகள் கடந்துவிட்டபோதும், ஏகாதிபத்தியத்தின் இந்தப் பொதுவான அம்சங்களை இன்றும் பார்க்க முடிகிறது. அதாவது, 'இது முதலாளித்துவ அமைப்பின் ஏகாதிபத்தியக் கட்டம்’ என்பதைப் புரிந்துகொள்ள வேண்டி​யிருக்கிறது.

ஏகாதிபத்திய நாடுகள் நேரடி​யாக காலனி ஆதிக்கம் செலுத்திய நிலையை, கடந்த காலத்தில் பார்த்தோம். இப்போது சர்வதேச நிதி மூலதனம் ராட்சஷத்தனமாக வளர்ந்து, ஒரு சில நிறுவனங்களின் கைகளில் குவிந்து, கொள்ளை லாபம் தேடி அனைத்து நாடுகளின் பாதுகாப்புத் தடைகளையும் மீறிப் பயணிக்கிற நிலையில், ஏகாதி​பத்தியத்தின் இன்றைய முகத்தை நிதி மூலதன உலகமயம் என்று மார்க்சிஸ்ட் கட்சி வரையறுக்கிறது.

இந்தப் பின்னணியில் இதர நாடுகள் மீது எல்லை தாண்டி ராணுவரீதியாகவோ, அரசியல் பொருளாதாரரீதியாகவோ ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ வல்லரசு நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் என்கிறோம். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை உதாரணமாகக் கூறலாம். உலக வளம் முழுமையும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள, தம் ஆளுகைக்குள் கொண்டுவர இவை முயற்சிக்கின்றன. ராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பலம் பொருந்திய நாடு என்ற அடிப்​படை​யில், அமெரிக்கா இந்த ஏகாதி​பத்திய முகாமின் தலைவனாக இருக்​கிறது. ஏகாதிபத்தியம், உலகத்தின் பொது எதிரி. அமெரிக்கா, அந்த எதிரிகள் குழாமின் தலைவன். இவற்றின் நடவடிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, உலக நிகழ்வுகளைப் பரிசீலிக்க முடியாது. எனவே, எது ஏகாதிபத்திய நாடு என்பதில் குழப்பம் வரக் கூடாது.

இலங்கை ஏகாதிபத்திய நாடு என்ற தொனி அந்தக் கட்டுரையில் பல இடங்களில் வருகிறது. இலங்கை, ஒரு முதலாளித்துவ வல்லரசு அல்ல. வேறு நாடுகளின் மீது ராணுவரீதியாகவோ, அரசியல் பொருளாதார ரீதியாகவோ அது ஆதிக்கம் செலுத்தவில்லை. இதர நாடுகளின் வளங்களைச் சுரண்டவில்லை. இலங்கை ஏகாதிபத்திய நாடு இல்லை என்றால், சோஷலிச நாடா என்றும் கட்டுரையாளர் கேள்வி எழுப்புகிறார். உலகில் பல நாடுகள் இன்று முதலாளித்துவ நாடுகளாக உள்ளன. அதனாலேயே அவை ஏகாதிபத்திய நாடு​களாகிவிடாது. இலங்கை, பின்தங்கிய வளர்முக முதலாளித்துவ நாடு. இத்தகைய நாட்டில் எழும் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க இயலாத அந்நாட்டு அரசு, மக்கள் மத்தியில் எழும் அதிருப்​தியை ஒடுக்குகிறது; திசை திருப்புகிறது. இந்த முயற்சியில் பெரும்பான்மை தேசிய இனவெறி, புத்த மத வெறி உள்ளிட்ட பல பிற்போக்கு சக்திகளை அது பயன்படுத்துகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்திலிருந்து, பல நாடுகள் விடுதலை அடைந்தன. இந்த முன்னாள் காலனி நாடுகளில், சுதந்திரத்துக்குப் பிறகு பொது​வாக முதலாளித்துவப் பாதை​யில் செல்லும் அரசுகளே ஆட்சி அமைத்தன. இவை, அடிப்படையில் மக்கள் நலனுக்கு எதிரானவையே. ஒரு நாட்டின் அரசு அங்குள்ள ஏழை உழைப்பாளி மக்களுக்கு எதிரானது என்பதாலேயே, அந்த நாட்டின் இறையாண்மையை மீறலாம் என்பதை வாதத்துக்காக ஏற்றுக்கொண்டால், இந்தியா உட்பட யாரும் யார் மீதும் போர் தொடுக்கலாம். ராணுவ பலம் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு நியாயம் கற்பித்துக்​கொள்ளலாம்.

தற்போது சிரிய அரசின் மீதும் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, சிரிய அரசைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற ’நியாயம்’ பேச அமெரிக்கா ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்கா தலையிடக் கூடாது என்று கூறினால், உடனே சிரிய அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கு​வதாகப் பொருள்கொள்ளக் கூடாது. உள்ளூர் மக்களின் இயல்பான போராட்டங்களாலும், சர்வதேச நிர்ப்பந்தத்தாலும்தான் சம்பந்தப்பட்ட நாடுகளில் மாற்​றத்தைக் கொண்டுவர முடியும்.

- விளக்கம் தொடர்கிறது

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism