Published:Updated:

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக டி.ஐ.ஜி.

விகடன் விமர்சனக்குழு
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக  டி.ஐ.ஜி.
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக டி.ஐ.ஜி.
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக  டி.ஐ.ஜி.
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை: கர்நாடக  டி.ஐ.ஜி.

பெங்களூரு: ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என்றும், இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை என்றும் கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசின்ஹா தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இன்றுடன் 17வது நாளாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனிடையே, தமிழக சிறைக்கு ஜெயலலிதாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசின்ஹா கூறுகையில், கடந்த மாதம் 27ஆம் தேதி சிறைக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஜெயலலிதா ஒருவரை கூட சந்தித்து பேசவில்லை. அவருடன் சசிகலா, இளவரசி ஆகியோரும் உள்ளனர்.

சிறையில் அவரை பார்த்து பேசும்போது "எனக்கு எந்த தொந்தரவும் இல்லை. நான் நலமாக உள்ளேன்" என்று ஜெயலலிதா கூறுகிறார். சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டும் ஒரு சில பார்வையாளர்களை சந்தித்து பேசுகிறார்கள்.

கடந்த 7ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தபோது அவர் மவுனமாகவே இருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது தீர்ப்பு கூறப்பட்ட பிறகு கர்நாடக சிறையில் இருந்து ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஜெயலலிதா இதுவரை தன்னை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க முடியும். இதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவை இல்லை. ஒரு கைதியை ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

ஆனால் ஜெயலலிதாவை கேட்காமல் இதில் முடிவு எடுக்க முடியாது. அவரை தமிழ்நாடு சிறைக்கு இடமாற்றம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். அவர் தன்னை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தால் அதை நாங்கள் அரசுக்கு அனுப்பி வைப்போம். அவற்றின் மீது மாநில அரசு முடிவு எடுக்கும். உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது தீர்ப்பு வந்த பிறகு ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் இந்த பிரச்னை எழாது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நான் ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். சிறையில் ஜெயலலிதா உடல் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. அவரது உடல் நிலையை பற்றி யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஜெயலலிதாவை கவனிப்பதற்கு ஒரு பெண் அதிகாரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அதனால் மைசூர் சிறையில் இருந்த பெண் சிறை அதிகாரி திவ்யஸ்ரீயை இங்கே அழைத்து வந்தோம். அவர் ஜெயலலிதாவை கவனித்துக் கொள்கிறார். அவர் அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசுகிறார்" என்றார்.