Published:Updated:

எதையுமே வாங்கமாட்டேன்...!

எதையுமே வாங்கமாட்டேன்...!
எதையுமே வாங்கமாட்டேன்...!
எதையுமே வாங்கமாட்டேன்...!

ஒரேநாளில் பில்லியன் கணக்கில் வணிகம் நடத்தி வருகின்றன இணைய சந்தைகள். ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு சலுகைகளை அள்ளி அள்ளி தந்து கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் நமக்குத்தானே லாபம் என நினைத்தால், அதுதான் இல்லை. குளிர்காய்வது வழக்கம் போல வணிக நிறுவனங்களே..!

ஆளாளுக்கு போட்டி போட்டிக்கொண்டு தீபாவளிக்கு பர்சேஸ் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால், உலகில் 65 நாடுகளுக்கும் மேலாக இந்த நுகர்வோர் கலாசாரத்திற்கு எதிராக 'Buy Nothing Day' என்னும் ஒரு நாளை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக கொண்டாடி வருகின்றன. இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான், அன்று ஒரு நாள் மட்டும் உங்கள் ஷாப்பிங் கனவை மூட்டை கட்டுங்கள் என்பதுதான் அது..! வருடந்தோறும் நவம்பரின் கடைசி வெள்ளிக்கிழமை அமெரிக்கா சார்ந்த பெரும்பாலான நாடுகளிலும், கடைசி சனிக்கிழமைகளில் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நோ ஷாப்பிங் டே கொண்டாடப்படுகிறது.

1992ல் கனடாவில் இருந்து வெளிவரும் அட்பஸ்டர் என்னும் நாளிதழ் தனது வாசகர்களிடம் அதிகரிக்கும் நுகர்வோர் கலாசாரம் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த  அமெரிக்காவின் ரங்கநாதன் தெருவான 'வால்ஸ்ட்ரீட்'ஐ ஆக்கிரமிக்க அழைப்பு விடுத்தது. மக்களும் அங்கு குவியவே அது வணிகர்களுக்கு கருப்பு வெள்ளியாக அன்றைய நாள் மாறியது. அடுத்த ஆண்டு முதல் போராட்டத்தை அமைதியாக நடத்த எண்ணி தொடங்கியதுதான் இந்த தினம்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு டிசம்பர் என்றாலே கொண்டாட்டம்தான். கிறிஸ்துமஸ் கேளிக்கைகள், கொண்டாட்டங்கள் என நம்மூர் தீபாவளி போன்று பரபரப்பு இருக்கும். அப்போதுதான் இங்கு தள்ளுபடி சமாச்சாரம் போல அங்கும் கடைகள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை இழுக்கும். அந்த சமயத்தில்  மக்கள் தேவையற்ற பொருளாக இருந்தாலும் கூட, விலை குறைத்து காண்பிக்கும் உத்தியினாலும், ஆசையிலும் வாங்கி குவிப்பார்கள். அதை தடுக்கவே இந்த நவம்பர் கடைசி ஏற்பாடு. 'shop less, live more' என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமே.

மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கு தேவைப்படும் பொருட்கள் 20 சதவிகிதம்தான். ஆனால் வாங்கி குவிப்பதோ 80% .இந்த தேவையில்லாத பொருள் குவிப்பின் விளைவு என்ன? நாம் வாங்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையின் கொடை. ஒவ்வொன்றுமே இயற்கை வளம். அதை நாம் பணமாக கொடுத்து ஈடு செய்கிறோமே தவிர, மாறாக அந்த வளத்தை புதுப்பிப்பது இல்லை. நாம் பொருட்களை வாங்க வாங்க தேவை அதிகரிக்கும். தேவை அதிகமானால் இயற்கை இன்னும் சுரண்டப்படும். பூமியின் வளம் குறையும்.

எதையுமே வாங்கமாட்டேன்...!

ஒரு வாரத்திற்கான மொத்த உணவையும், ஒரே நாள் 'பிரேக் பாஸ்ட்'டில் முடிப்பது போன்றுதான்,  நமது மூன்று எதிர்கால தலைமுறையினர் அனுபவிக்க வேண்டியதை நாம் ஒரு தலைமுறையினரே எடுத்து கொள்கிறோம். அதுவும் தேவையினால் அல்ல, ஆசையினால். இந்த அதிநுகர்வு கலாச்சாரம் உலகமயமாதலுக்கு பின் இன்னும் தலை விரித்தாடுகின்றது. இரவு ரிலீஸ் ஆன ஐபோனை அடுத்த நாளே நாம் இங்கு பெற முடிகிறது. இந்த வசதி எளிமையாக இருப்பது, வாங்குபவர் எளிமையாக பயன்படுத்த மட்டுமல்ல, இன்று இரவு ஐபோன் வாங்க முடிவெடுத்து நாளை காலை முடிவை மாற்றி விட்டால்? அல்லது வேறு ஒரு மாடல் வாங்கி விட்டால்? இப்படி உங்களை யோசிக்கவே விடாமல் வலைக்குள் அமிழ்த்தவும் இந்த முறையே பயன்படுகிறது. இந்த தினத்தில் என்ன செய்கிறார்கள்?

அன்று ஒரு நாள் இந்த தினம் கொண்டாடும் நாடுகளின் பெரும்பாலான மீடியாக்கள், வணிக விளம்பரங்களை வெளியிடாது. மக்கள் இணையம் மூலம் திட்டமிட்டு ஆங்காங்கே கூட்டமாக ஷாப்பிங் மால்களில் 'buy nothing day' போஸ்டர்களோடு உள்ளே நுழைவார்கள். அமைதியாக அனைவரின் கண்ணில் படும்படி அமர்ந்துவிட்டு ஷாப்பிங் கார்டுகளை எடுத்து கொண்டு கடை முழுக்க எதுவும் வாங்காமல் சுற்றி வந்து காலி கார்டுடன் பில் போட செல்வார்கள். ஏதேனும் நிறுவன தள்ளுபடி போஸ்டர்கள் சிக்கினால் அது டார் டார். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என அத்தனை ஷாப்பிங் சமாச்சாரமும் வெட்டி, கிழித்து குப்பையில் வீசப்படும். எதுவுமே வாங்க கூடாதெனில் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வது? கார் ஓட்டினால்தானே டீசல் வேண்டும். அன்று மட்டும் சைக்கிள் உலா. டி.வி., கணினி, இணையம், செல்போன் என அனைத்தையும் தூங்க வைத்து இந்த தினத்தை கொண்டாடினார்கள் சென்ற வருடம்.

இது, பெரும்முதலாளிகளுக்கு வேண்டுமானால் சரியான எதிர்ப்பாக இருக்கும். சிறிய அளவில் பெட்டிக்கடை வைத்திருக்கும் அண்ணாச்சிகளை என்ன செய்ய? இது அவர்களுக்கு எதிரானது கிடையாது. நீங்கள் உள்ளூர் கடையில் பொருள் வாங்கினால் அதன் நியாய விலை தவிர மீத லாபம் அந்த நாட்டு அரசுக்கும், அந்த கடைக்காரருக்கும் செல்கிறது. அது நாட்டிற்கும் சரி, அந்த நாட்டு குடிமக்களுக்கும் நல்லது. ஆனால் எங்கோ ஒரு மூலையில் இருந்து வணிகம் என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் பொருட்களை நாம் ஏன் வாங்க வேண்டும்? என சுதேசி கொள்கையும் இதன் நோக்கம்தான். ஆற்றலை அழிக்கவோ, ஆக்கவோ முடியாது என்ற ஆற்றல் அழிவின்மை விதி போலதான் இதுவும். உங்கள் உழைப்பை பணமாக மாற்றுகிறீர்கள். அந்த உழைப்பை உங்கள் தேவைகளுக்கு தருகிறீர்கள் என்றால் அது சரி. அதை திருடினால், தவறு நம் மீதே. வாழ்க்கை முழுதும் நீங்கள் இதை சேமித்தால் அந்த உழைப்பை நீங்கள் வேறு வழிகளில் பயன்படுத்த முடியுமல்லவா? அந்த ஒரு நாள் அவர்களுக்கு எந்தவொரு பெருத்த நஷ்டத்தையும் தர போவதில்லை. ஆனால் அன்று மட்டுமாவது உங்கள் உழைப்பை நீங்கள் காப்பாற்றிக் கொள்கிறீர்கள்.

முதலில் ஆங்காங்கே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிகள் தற்போது சூடாகி நாடு விட்டு நாடாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த வருடமும் நவம்பர் 28, 29 ஆகிய தினங்களை நோ ஷாப்பிங் தினங்களாகக் கொண்டாட எல்லா ஏற்பாடும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. நம்மூரிலும் தீபாவளி கொண்டாட்டங்கள், ஷாப்பிங்குகள் ஆரம்பித்து விட்டது. நீங்கள் சுதாரிக்கும் முன்பே இணையம், நிஜ உலகம் என உங்களை சுற்றி வலை பின்னப்பட்டு விட்டது. நீங்கள் எந்தவொரு பொருளை வாங்க நினைக்கும் முன்பு உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. ''இது இன்றி நமது பண்டிகை அமைய முடியாதா?'' என.

- ஞா.சுதாகர்