Published:Updated:

என் தகவல்... என் உரிமை!

கலக்கத்தில் கட்சிகள்டி.அருள் எழிலன், ஓவியம்: கண்ணா

என் தகவல்... என் உரிமை!

கலக்கத்தில் கட்சிகள்டி.அருள் எழிலன், ஓவியம்: கண்ணா

Published:Updated:
##~##

தர்ஷ் அடுக்குமாடி ஊழல் தொடங்கி அதிராம்பட்டினத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தது வரை அரசுத் துறையின் அவலட்சணங்களைப் பொதுமக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டும் கண்ணாடியாக இருக்கிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், செயல்பாட்டுக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் இப்போது முக்கியமானதொரு திருப்பத்தைச் சந்தித்திருக்கிறது. காங¢க¤ரஸ¢, பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட ஆறு கட்சி களிடம் அவர்கள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான விவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (Right to Information Act-RTI)  மூலம் கேட்கப்பட, 'ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் நாங்கள் வர மாட்டோம்’ என்று தகவல் அளிக்க மறுத்திருக்கின்றன அந்த தேசியக் கட்சிகள். ஆனால், அரசியல் கட்சிகள் வருமான வரியில் இருந்து விலக்குப் பெறுவதையும், தேர்தல் பிரசாரங்களுக்கு அரசு வானொலி, தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதையும் சுட்டிக்காட்டிய மத்திய தகவல் ஆணையம், ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகளுக்கு உள்ளது என்று பொட்டில் அறைந்தாற் போல பதிலளித்திருக்கிறது.

தகவல் ஆணையத்தின் இந்த அறிவிப்பை காங்கிரஸ், சி.பி.எம், ஐக்கிய ஜனதா தளம் முதலிய கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்த்திருக்கின்றன. தேசிய அளவிலேயே நிலவரம் இப்படி இருக்க, தமிழகத்தில் 'அரசியல் கட்சிகளை விடுங்கள்... அடிப்படைத் தகவல் அறியும் உரிமைச் சட்டமே கவலைக்கிடமான நிலையில் உள்ளது’ என்கி றார் சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் தகவல்... என் உரிமை!

''அந்தச் சட்டத்தின் கீழ் கேட்டால், எந்தக் கோரிக்கைக்கும் தகவல் இல்லை என்று சொல்கிறார்கள். பொதுத் தகவல் அதிகாரியிடம் மேல் முறையீடு செய்தாலும் நடவடிக்கை இல்லை. 2011-ம் ஆண்டே தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க, அ.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் வருமான வரிக் கணக்கைக் கேட்டேன். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மறுப்புத் தெரிவிக்க, மற்ற கட்சிகளிடமிருந்து பதிலே இல்லை. அரசின் திட்டங்களை ஒப்பந்த அடிப்படையில் பெறுவோர், அரசியல் செல்வாக்கு அல்லது பின்புலம்உள்ள மனிதர்கள்தான் என்கிற நிலையில், 100 நாள் வேலைத் திட்டம், ஆற்று மணல் குவாரிகள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றில் பங்குபெறுகிறவர்கள் தொடர்பாகத் தகவல் கேட்டால், கேட்பவர் உயிருக்கே ஆபத்து நேரும் நிலைதான் இங்கு உள்ளது. மணல் கொள்ளை யைத் தடுக்கச் சென்ற அலுவலர்களும் காவலர் களுமே லாரி ஏற்றிக் கொல்லப்படும் நிலையில், தகவலாளிகளுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? மின்ட் தெருவில் உள்ள ஒரு முகவரியிலிருந்து ஒரு கட்சிக்கு ஒருவர் 95 லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்த தகவலை ஊர்ஜிதப்படுத்த அங்கு சென்றேன். ஆனால், அங்கு அப்படி ஒரு நபரே இல்லை. உண்டியலேந்தி பொதுமக்களிடம் அரசியல் கட்சிகள் வசூலித்த காலம் மலையேறி, இப்போது கூப்பன் கலெக்ஷன் என்றொரு புதிய வசூல் முறையை வைத்துச் செயல்படுகிறார்கள். இந்த முறையில், இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சி ஒரு நாள் வசூலிக்கும் தொகை, சுமார் 495 கோடியை நெருங்கும். இதுதான் கிரிமினல் அரசியலின் ஆணிவேர். இப்போது ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும் என்று மத்தியத் தகவல் ஆணையம் வலியுறுத்துவதால், இதுவரை பணத்தை வங்கி யில் செலுத்தி, வருமான வரித் துறைக்குக் கணக் குக் காட்டி விலக்குப் பெற்ற கட்சிகள், இனி அந்த நன்கொடைகளைக் கறுப்புப் பணமாக வைத்துக்கொள்ளும் நிலை உருவாகும்!'' என்று நிதர்சன நிலை தெரிவித்தார் கோபாலகிருஷணன்.

இந்தச் சட்டத்தை அரசு நிர்வாகமும் அரசியல் கட்சிகளும் கையாளும் போக்குகுறித்துக் கவலை தெரிவித்துவிட்டுத் தன் கருத்துக்களைப் பதிந்தார் சமூகச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

''ஊழலில் உலக சாதனை புரிந்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த ஆணையை எதிர்ப்பதில் வியப்பு இல்லை. ஆனால், கம்யூனிஸ்ட்களான சி.பி.எம். ஏன் இவ்வளவு பதற்றம் அடைகிறது? காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டு கட்சிகளுக்கு மாத்திரம் 255 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. அரசுக் கட்டடங்கள் வழங்கப்படுகின்றன. கார்ப்பரேட்களிடம் இருந்து பெருமள வில் அவை நிதி பெறுகின்றன. இதில் கறுப்பு மற்றும் ஊழல் பணமும் அடக்கம். இந்த ஊழல் பணத்தில் தொலைக் காட்சிகள் தொடங்கி நடத்தப் படுகிற கதைகளும் நமக்குத் தெரியும்.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மூலமாகவும் அரசியல் கட்சிகளுக்குப் பெரிய அளவில் நிதி வருகிறது. அவ்வாறு நிதி பெறும் கட்சிகளில் முன்னணியில் இருப்பது பா.ஜ.க. குஜராத் பூகம்ப நிவாரணத்துக்கு என அமெரிக்காவிலிருந்து வசூலித்து அனுப்பப்பட்ட நிதி, 2002-ம் ஆண்டுக் கலவரத்தில் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறை வெறிச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்கிற குற்றச்சாட்டை அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் ஆதாரங்களுடன் முன்வைத்ததை இந்தச் சமயத்தில் மறந்துவிட வேண்டாம். இந்த நிலையில் இப்படியான தகவல்களை அளிக்க அவர்கள் மறுப்பதில் வியப்பேதும் இல்லை.

சமீபத்தில் தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ள கணக்குகளின்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் (2007-08 முதல் 2011-12 வரை) காங்கிரஸ் சேர்த்துள்ள சொத்து 1,662 கோடி. பகுஜன் சமாஜ் 1,226 கோடி. பா.ஜ.க. 852 கோடி. சி.பி.எம்மின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 355 கோடி. கார்ப்பரேட்களுக்கு  நெருக்கமாகச் செயல்படும் சமாஜ்வாடி, தேசியவாதக் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைவிட சி.பி.எம்மின் சொத்து மதிப்பு அதிகம்!

'எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தீர்கள்?’ என்று கேட்டால், 'நாங்கள் தேர்தல் ஆணையத் துக்கும், வருமான வரித் துறைக்கும் கணக்குக் கொடுத்துவிட்டோம்’ என்பதோடு முடித்துக்கொள்கிறார்கள். ஏன் அந்தக் கணக்கைப் பொது மக்களுடனும் பகிர்ந்துகொள்வதில் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது? இதில் உச்சகட்டக் கொடுமையாகப் பாட்டாளிகளின் தோழர்கள் என்று பறைசாற்றிக்கொள்ளும் சி.பி.எம். கட்சி, 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி நாங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே பொறுப்பானவர்கள்... மக்களுக்கல்ல!’ என்றரீதியில் திமிராகப் பதில் சொல்லியிருப்பது ஆரோக்கிய அரசியல் அல்ல. கேரளத்தில் பினராய் விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டு, தமிழ்நாட்டில் திருப்பூர் எம்.எல்.ஏ-வான கோவிந்த சாமி, முதலாளிகளிடமிருந்து லஞ்சப் பணம் குவித்துச் சொத்து சேர்த்த விவகாரம், மேற்கு வங்கத்தில் அனுஜ் பாண்டே என்கிற சி.பி.எம். தலைவரின் சொகுசு பங்க ளாவை மக்களே உடைத்துஎறிந்த சம்பவம்... இப்படி யான கேலிக்கூத்துச் சம்ப வங்களுக்கு இடையேதான், 'வேட்பாளர் தேர்வுக்கான காரணங்களை எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா?’ என்று கேட்கிறது சி.பி.எம். கட்சி. உண்மைதான். தொழிலாளிகளுக்குத் துரோகம் செய்து சொத்து சேர்த்த திருப்பூர் கோவிந்தசாமி, கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றப் படிகள் ஏறி இறங்கும் சி.பி.ஐ-யின் தளி ராமச்சந்திரன் போன்றோர் எவ்வாறு தேர்வுசெய்யப்பட்டனர் என்று வெளியே சொல்ல முடியுமா என்ன?''- கேள்வியுடன் முடிக்கிறார் அ.மார்க்ஸ்.

சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சியினரின் குற்றப் பின்னணியே திகிலடைய வைக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி பற்றிச் சொல்லவே வேண்டாம். தனது ஒவ்வொரு காலகட்ட ஆட்சி பரிபாலனத்திலும் ஒன்றை ஒன்று முந்திச் செல்லும் வகையில் ஊழல் சாதனைகளை அடுக்கிவருகிறது காங்கிரஸ். போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் வாய்பிளந்த மக்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிப்பட்ட பின்னர் வாயடைத்துப்போனார்கள்.

ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவசகாயம், ''மக்களிடமிருந்து ஓட்டு மட்டும் வாங்குவோம். ஆனால், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல மாட்டோம் என்பதுதான் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நிலையாக உள்ளது. உண்மையில், அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் நேரடியாக மக்களுக்குப் பதில் சொல்லும் ஒரு துருப்புச் சீட்டுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

என் தகவல்... என் உரிமை!

நன்கொடை பெறும் பணத்துக்கு 100 சதவிகித வரிவிலக்கு பெறும் கட்சிகள் தங்களைத் தனியார் நிறுவனங்கள் என்று கூச்சமில்லாமல் அறிவித்துக்கொள்கின்றன. அரசுத் துறையின் பிரிவுகள் தகவல் பெறும் சட்டத்தின் கீழ் வரும்போது, அரசை நடத்திச் செல்லும் ஆளும் கட்சியாக இருக்கிற காங்கிரஸ் மட்டும் எப்படி இதிலிருந்து விதிவிலக்கு பெற முடியும்? உண்மையில், அரசில் பங்குபெறும் கட்சிகள் உட்பட ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என அனைத் துக் கட்சிகளையும் இதில் உள்ளடக்கியிருப்பது நல்ல விஷயம்!' என்கிறார்.

அரசியல் சாக்கடையாகிவிட்டது என்கிற அலுப்பு பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. அரசியல் கட்சிகளையும் அதன் ஊழல்மயமான தலைமைகளையும் மக்கள் சகித்துக்கொள்ளப் பழகிவிட்டார்கள்.

தேர்தல்களின்போது, 'மோசமான கெட்டவர்’, 'சுமாரான கெட்டவர்’ எனத் தரம் பிரிக்கப் பழகிக்கொண்டார்கள். ஜனநாயகத்துக்குக் கேடு விளைவிக்கும் ஆபத்தான இந்தப் போக்கிலிருந்து மக்களை விடுவிக்கவேனும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளைச் சுட்டெரிக்கட்டும்!