Published:Updated:

கேப்டன் கப்பல் கவிழ்வது ஏன்?

ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா

கேப்டன் கப்பல் கவிழ்வது ஏன்?

ப.திருமாவேலன், ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
##~##

விஜயகாந்த் கொடுத்த பிளாக்பெர்ரி செல்போனை அந்த ஏழு எம்.எல்.ஏ-க்களும் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். மேலும் மூன்று பேர், 'தொடர்பு எல்லைக்கு வெளியில்’ வைத்துவிட்டார்கள். மற்றவர்கள் எடுக்கிறார்களா என்ற பதற்றம் விஜயகாந்துக்கு வந்துவிட்டது. மொத்தத்தில், தே.மு.தி.க. டவர், சிக்னல் சரியில்லாத இடத்தில் இருக்கிறது.

கடந்த வாரத்தில் பறந்துபோன பாண்டியராஜனுடன் சேர்த்து 'ஏழு எம்.எல்.ஏ-க்கள் மைனஸ்தே.மு.தி.க.’ என்பது இந்தக் கட்டுரையின் டெட்லைன் அன்றைய நிலவரம். முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி, தே.மு.தி.க-வில் இருந்து தி.மு.க-வுக்குக் கட்சி மாறியபோது, 'அவரை எங்க கட்சிக்கு வாங்கனு நான் கூப்பி டவே இல்லையே. அவரா வந்தார்... அவராப் போனார்’ என்று விஜயகாந்த் சொன்னார். மதுரை சுந்தர்ராஜன், பேராவூரணி அருண் பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், திட்டக்குடி தமிழழகன், செங்கம் சுரேஷ்குமார், சேந்தமங்கலம் சாந்தி, விருதுநகர் பாண்டியராஜன் ஆகிய ஏழு பேரையும் விஜயகாந்த் அப்படிச் சொல்லிவிட முடியாது. அவரால்   அங்கீகரிக்கப்பட்டு, முரசு சின்னத்தில் தேர்தலில் நிறுத்தப்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.எல்.ஏ. ஆனவர்கள். விஜயகாந்த் தலைமையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்கள்.  இரண்டே ஆண்டுகளில் மனக் கசப்போடுவெளி யேறிவிட்டனர். இதற்கு ஒரே காரணம், விஜயகாந்தின் அலட்சியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில சினிமா ஹீரோக்கள் மொத்தப் படமும் தன் முகத்துக்காகத்தான் ஓடுகிறது என்று நினைப் பார்கள். முன்னாள் ஹீரோவான இந்நாள் எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த், தே.மு.தி.க-வை இன்னொரு 'ரமணா’வாக நினைப்பதன் விளைவுதான், வெள்ளாடுகள் வேலி தாண்டுவது. 'யாரு போறதைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. வேற யாராவது போக நினைச்சாக்கூடப் போக லாம்’ என்று நிர்வாகிகள் கூட்டம் ஒன்றில் விஜய காந்த் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைவிட ஒரு படி மேலே போய், விஜயகாந்தின் மனைவியும் அவருடைய அரசியல் திசை காட்டியுமான பிரேமலதா, மிகக் கொச்சையான வாசகங்களைப் பயன்படுத்தினாராம்.

கேப்டன் கப்பல் கவிழ்வது ஏன்?

கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே லட்சக்கணக்கான வாக்குகளை அள்ளிய எம்.ஜி.ஆரே இப்படி அலட்சியமாக, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தது இல்லை. 'படிக்காதவர்’ என்ற தன்னைப் பற்றிய விமர்சனம் காரணமாக, நாவலர் நெடுஞ்செழி யன், நாஞ்சில் மனோகரன், பண்ருட்டி ராமச் சந்திரன், எஸ்.டி.சோமசுந்தரம், கே.ஏ.கிருஷ்ண சாமி, புலமைப்பித்தன், அரங்கநாயகம் என்று படித்தவர்களாகப் பார்த்துப் பார்த்து தன்னைச் சுற்றி வைத்துக்கொண்டார். எஸ்.திருநாவுக்கரசர் அப்போது சொன்னார், 'நாங்கள் அனைவரும் பூஜ்யங்கள். எம்.ஜி.ஆர். ஒன்று... இந்த பூஜ்யங்களுக்கு முன்னால் அந்த ஒன்று இருந்தால்தான் பூஜ்யங்களுக்கு மரியாதை!’ என்று. பூஜ்யங்களே இல்லாவிட்டாலும் ஒன்றுக்கு மரியாதை இல்லை என்பதை உணர்ந்தவராக எம்.ஜி.ஆர். இருந்தார். ஆனால், கறுப்பு எம்.ஜி.ஆருக்கு இது புரியவும் இல்லை. தன்னைப் பெண் எம்.ஜி.ஆராகநினைத்துக் கொள்ளும் பிரேமலதா, அதை அவருக்குப் புரிய வைப்பவராகவும் இல்லை.

அதற்காக, ஓடிப்போனவர்கள் எல்லாம் அப்பழுக்கற்றவர்கள் என்றோ, மக்கள் நலனைத் தவிர மாற்றுச் சிந்தனை இல்லாதவர்கள் என்றோ சொல்ல வரவில்லை. அவர்களைத் தக்கவைக்க முடியாமல்போன விஜயகாந்தின் பலவீனம் மட்டுமே இங்கு அலசப்படுகிறது.

விஜயகாந்த் கட்சி தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. 30 ஆண்டு கால சினிமா பிரபலம் அவரைக் கவனிக்கவைத்தது. தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் சமதூரத்தில் வைத்து விமர்சித் ததும் ஒரு காரணம்! கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரைப் பிடிக்காத 10 சதவிகித வாக்காளர் கள் கண்ணுக்கு விஜயகாந்தின் சிவந்த விழிகள் உற்சாகமூட்டின. கருணாநிதி இவரைத் தலைவரா கக்கூட ஆரம்ப காலத்தில் ஏற்கவில்லை. நடிகர் என்றே அழைத்தார். 'நடிக்க முயன்று, நடிக்க வராமல் தோற்றுப்போன காகிதப்பூ கதாநாயகன் அல்ல நான்!’ என்று விஜயகாந்த் அவர் மீது அதிரடியாகப் பாய்ந்தார். விஜயகாந்த் தன் பிரபலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத் தியது, ஜெயலலிதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 'குடிகாரர்’ என்றே ஜெயலலிதாவால் கொச்சைப் படுத்தப்பட்டார். 'ஆமா... இவரு என்ன பக்கத்தில் இருந்து ஊத்திக்கொடுத்தாரா?’ என்று விஜயகாந்த் அப்போது கேட்டது, அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கினாலும் அதற்கான பதிலடியை இப்போது வரை ஜெயலலிதா தர வில்லை. 'வேறு யாரும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதால், கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் ரகசிய உடன்படிக்கை வைத்துக் கொண்டே பல காரியங்களைச் செய்கிறார்கள்’ என்று விஜயகாந்த்வைத்த விமர்சனத்துக்கு அவர்கள் இருவருமே பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள்.

கேப்டன் கப்பல் கவிழ்வது ஏன்?

அப்படிப்பட்ட ஜெயலலிதாதான், பிறகு விஜயகாந்துக்காகக் காத்திருந் தார். ஒரே ஒரு விருத்தாசலத்தை வைத்திருந்த விஜயகாந்துக்கு 40 தொகுதி களைத் தாரை வார்த்தார். அப்படிப்பட்ட கருணாநிதிதான், 'தம்பி விஜய காந்த் கட்சியை அழிக்கப்பார்க்கிறார்கள்’ என்று கவலைப்பட்டார். அவர் வைத்திருக்கும் எம்.எல்.ஏ. வாக்குகளைத் தனக்குப் பெறத் தவம் இருந்தார்... இன்னும் இருக்கிறார்!

இப்படியான பெருமைகள் பலவற்றைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் விஜயகாந்த் சிதைத்துக்கொண்டதற்கு அவர் மட்டுமே காரணம். தான் வகிக்கும் பதவியின் அருமையைக்கூட உணர்ந்தவராக இல்லை அவர்!

சட்டசபை ஜனநாயக அமைப்பு முறையில் முதலமைச்சர், அமைச் சருக்கு இணையான பொறுப்பு எதிர்க் கட்சித் தலைவருக்கு உண்டு. நிர்வாக உரிமைகள் நீங்கலாக, சட்டசபையில் முதல்வருக்கு அடுத்து அந்தப் பதவியே வலிமையானது. யார் பேச்சிலும் குறுக்கிடலாம், எந்த விவாதத்திலும் பங்கேற்கலாம், முதல்வருக்கே அறிவுரை சொல்லலாம், பேரவைத் தலைவருக்கே குறிப்புகளைச் சுட்டிக்காட்டலாம். 'நான் முதல மைச்சர் நாற்காலிக்குத் தகுதியானவன்’ என்பதை மக்கள் மனதில் விதைக்க, எதிர்க் கட்சித் தலைவர் நாற்காலியே பிரதான வாய்ப்பளிக்கும். ஆனால், அதனைப் பயன்படுத்தாமல் தூசி படியவிட்ட துரதிர்ஷ்டம் தமிழ்நாடு சட்ட மன்றத்துக்கு விஜயகாந்தால்தான் ஏற்பட்டது.

அடுக்குமொழி, அடுக்கடுக்கான ஆதாரங்கள், அனல் பறக்கும் வாதங்கள், அழகான பதில்கள் சொல்பவர்தான் சிறந்த எதிர்க் கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்பதல்ல; வெள்ளந்தியான மனிதராக இருந்து, தனது மனதில் பட்டதை எளிமையான வார்த்தைகளில் சொல்லி, சிறந்த எதிர்க் கட்சித் தலைவராகப் பெயர் எடுத்தவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன்.

சில நேரங்களில் அவர் தந்த தகவல் பிழைகளை முதல்வர் கருணாநிதியே சுட்டிக்காட்டியதும், 'தவறுக்கு மன்னிக்கவும்’ என்று கேட்டுவிட்டு, அடுத்த விஷயத்துக்குப் போவார். 'எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது’, 'எனக்குக் கிடைத்த செய்தி இது’ என்று சொல்லியே, எல்லாக் குறைபாடுகளையும் தமிழக சட்டமன்றத்தில் சொல்லிவிடுவார்.

மக்கள் மீது அக்கறையும், சட்டமன்றத்தின் மீது மரியாதையும் உள்ள ஓர் அரசியல் தலைவராக இருந்தால், அப்படித்தான் செயல்பட்டிருக்க முடியும். விஜயகாந்துக்கு அந்த இரண்டுமே இல்லை. கட்சி நிர்வாகிகளுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும்... விஜயகாந்துக்குமான நரம்பு இதனால்தான் அறுந்தது.

அவரது நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, விஜயகாந்துக்கு, தான் இன்னொரு ஜெயலலிதாவாக ஆக வேண்டும் என்ற ஆசையே அதிகம் இருப்பதுபோலத் தெரிகிறது.

தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் இருவர் கோட்டைக்குச் சென்று முதன்முறையாக ஜெயலலிதாவைப் பார்க்கப் போனபோது, விஜயகாந்த் மதுரை போவதற்காக சென்னை விமானநிலையம் வந்தார். இதுபற்றி அவரிடம் நிருபர் ஒருவர் கேட்க, 'ஜெயலலிதாகிட்ட போயி கேளுங்க. ஜெயலலிதாகிட்ட கேப்பீங் களா? என்கிட்ட மட்டும் கேட்க வந்துட்டீங்க? நீங்களா எனக்குச் சம்பளம் கொடுக்குறீங்க?’ என்று கொதித்துக் கொந்தளித்தார்.

'செவ்வாய்க்கிழமைதோறும் நிருபர்களைச் சந்திப்பேன்’ என்ற தனது வாக்குறுதியை அடுத்த செவ்வாய்க்கிழமையே காற்றில் பறக்க விட்டவர் ஜெயலலிதா. அவரைப் போலவே தனக்கும் பத்திரிகையாளர்களை 'எளிதில் சந்திக்க முடியாதவர்’ என்ற தோற்றத்தை உண்டாக்கிவிட்டால் 'பாதி’ ஜெயலலிதா ஆகிவிடலாம் என்பது, விஜயகாந்தின் நினைப் பாக இருக்கலாம். ஆனால்,

கேப்டன் கப்பல் கவிழ்வது ஏன்?

நாட்டில் எம்.ஜி.ஆர். என்றால், அது ஒருவர்தான். ஜெயலலிதா என்றால், அது அவர் மட்டும்தான். எப்படி ஜெயலலிதாவால் எம்.ஜி.ஆர். ஆக முடியாதோ, அதேபோலத்தான் விஜயகாந்தால் ஜெயலலிதா ஆகவே முடியாது. இந்த யதார்த்தம் புரியாத தால் உண்டாகும் சேதாரங்களே, தேய்ந்து வரும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை!

'நான் ஆட்சிக்கு வந்ததும் வறுமையை ஒழித்துவிடுவேன்’, 'மின்வெட்டைத் தவிர்க்க என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. அதை இப்போது சொல்ல மாட்டேன்’, 'வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும்’, 'காய்கறி விலையைக் கால் பங்காகக் குறைத்துவிடுவேன்’ - என்பதுமாதிரியான பாம்பாட்டி வாக்குறுதிகளால் கட்சியை வளர்க்கவும் முடியாது. தக்கவைக்கவும் முடியாது.

'செயல்; அதுவே சிறந்த சொல்’ என்பார்கள். ஆனால், விஜயகாந்திடம் சிறந்த சொல்லும் இல்லை, சிறந்த செயலும் காணோம்.

'சின்ன வயசுல சுதந்திர தினத்தன்னைக்கு கொடியேத்திட்டு சாக்லேட் கொடுப்பாங்க. அதை வாய்ல போட்டதும் நாக்குல இனிக்கும். விவரம் தெரிஞ்ச பிறகு, அந்த மிட்டாய் சாப்பிடுறப்பலாம் நான் யோசிப்பேன்... வாய்ல இருக்குற இனிப்பு இதயத்தில் எப்போ இனிக்கும்னு’ என்று விஜயகாந்த் ஒரு முறை சுதந்திரம் பற்றிச் சொன்னார்.

இப்போது தமிழக வாக்காளர்களும் யோசித் துக்கொண்டே இருக்கிறார்கள். 'இவருக்கு எல்லாம் ஏன் ஓட்டுப் போட்டோம்?’ என்று!