தலையங்கம்

##~## |
தண்ணீர் தாண்டவத்தால் உருக்குலைந்துகிடக்கிறது உத்தரகாண்ட். '5,000 பேருக்கு மேல் பலியாகி இருக்கக்கூடும்’ என அஞ்சுகிறது பேரிடர் மேலாண்மைத் துறை. ஆயிரமாயிரம் மக்களின் வாழ்வாதாரங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. ஒட்டுமொத்த உத்தரகாண்ட் மாநிலமும் ஊழிப் பெருவெள்ளத்தில் நாசமாகிக்கிடக்கிறது. பாதிக்கப்பட்ட 200 கிராமங்களை ராணுவத்தால்கூட இன்னும் நெருங்க முடியவில்லை. மக்கள், மலைக் காடுகளுக்குள் பசியிலும், பட்டினியிலும், குளிரிலும், மழையிலும் பரிதவிக்கிறார்கள்.
'மேக வெடிப்பு’ ஏற்பட்டு திடீர் பெருமழை கொட்டித் தீர்த்தது என்றும், பனிச் சிகரம் உடைந்து பனிச் சுனாமியாக உருவெடுத்தது என்றும் சொல்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த இமய மலை சுனாமிக்கு இயற்கை மட்டுமே காரணம் என ஒதுங்கிக்கொள்ள முடியாது. மந்தாகினி, பகீரதி, அலக்நந்தா உள்ளிட்ட இமய மலை நதிகளின் திசை வழி மாற்றப்பட்டு, நூற்றுக்கும் அதிகமான நீர் மின் திட்டங்கள் நதி வழிகளில் அமைக்கப்பட்டுள்ளன. எனில், இத்தனை இடங்களிலும் இயற்கை, 'செயற்கை’யாகத் திசை திருப்பப்பட்டுள்ளது. பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்த மந்தாகினி நதியின் கரையோரங்களில், விதிமுறைகளை மீறி பல்லடுக்குக் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அடர்ந்த காடுகளுக்குள் பல தொழிற்சாலைகளும், சுரங்கத் திட்டங்களும் செயல்படுகின்றன. இவை அனைத்தும் காடுகளைக் காவு வாங்கிக் கட்டப்பட்ட இயற்கை விரோதத் திட்டங்கள்.
இந்தப் பேரழிவு திடீரென ஒரு நாளில் நிகழ்ந்துவிடவில்லை. கடந்த ஆண்டு இமய மலையின் உத்தர்காசி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் சிக்கி 60-க்கும் அதிகமானோர் இறந்தனர். அதில் இருந்து பாடம் கற்காததன் விளைவுதான்... இன்றைய இமயச் சுனாமியின் பேரழிவு.
மனிதர்களாகிய நாம் 'அறிவு’ இருப்பதினாலேயே இயற்கையைக் கட்டுப்படுத்திவிடலாம் என நினைப்பது மூடத்தனம். இயற்கை தன் அறிவைக் காட்டினால், அந்தப் பேராற்றலின் முன்பு நாம் துரும்பாகிவிடுவோம்!