Published:Updated:

விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அறிவிக்க அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!

விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அறிவிக்க அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!
விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அறிவிக்க அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!
விவசாயிகளுக்கு நிவாரண தொகையை அறிவிக்க அரசுக்கு கருணாநிதி கோரிக்கை!

சென்னை: விவசாயிகளுக்கு முதற்கட்ட நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''வடகிழக்குப் பருவம் தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் பெருமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, அடித்தட்டு மக்களுடைய வாழ்வாதாரம் சிதறுண்டு, பிழைப்பதற்கான வழிகளனைத்தும் அடைக்கப்பட்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் தேம்பிக் கிடக்கிறார்கள்.

சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த மழையினால் தாழ்வான குடியிருப்புகள், குடிசைப் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பெருமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரிலே மூழ்கி அழுகிக் கொண்டிருக்கின்றன. முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஓரிருவரைத்தவிர வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடவில்லை. நிவாரணப் பணிகளிலும் அக்கறை காட்டவில்லை.

தி.மு.க.வினர், குறிப்பாக தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொருளாளர் ஸ்டாலின் போன்றவர்கள் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றால், உடன் வந்து பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க ஒத்துழைக்க வேண்டிய அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்குப் பயந்துகொண்டு ஓடி ஒளிகிறார்களாம்.

தமிழகத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்ட நிலையிலும் தமிழக அரசு அதனைக்கண்டு கொள்ளவோ, கவலை அடையவோ இல்லை என்றும், எந்தவிதமான நிவாரணப்பணிகளும் நடைபெறவில்லை என்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அடுக்கடுக்காகப் புகார் கூறிய பிறகு, அ.தி.மு.க. அரசு அவசரக் கோலத்தில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டு அறிக்கை கொடுக்க 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி அவர்களை ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் பயணம் செய்து மழை, வெள்ளச் சேதம் பற்றி அறிக்கை தர வேண்டுமென்று பணித்திருக்கிறார்கள்.

இந்த அதிகாரிகளின் மதிப்பீட்டினையொட்டி மாநில அளவில் வெள்ளச் சேதம் மதிப்பிடப்பட்டு, மத்திய அரசிடம் நிவாரண நிதியைப் பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் சார்பில் என்ன உதவி செய்யப் போகிறார்கள்? எந்த அளவுக்கு நிவாரணத் தொகை வழங்கப்போகிறார்கள் என்பதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதிலேயே குறியாக உள்ளார்கள்.

பெருமழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “உடனடி நிவாரணம்” என்பது மிக மிக முக்கியமானது என்பதையே ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும். கடந்த 10 நாட்களாகப் பெய்த பெருமழை காரணமாக தமிழகம் முழுவதும் என்ன பாடுபடுகிறது என்பதை ஒட்டுமொத்தமாக முடிந்தவரை தொகுத்துக் குறிப்பிட்டுள்ளேன். தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்றிருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்வதற்காகவாவது, ஆட்சியினர் பயத்தில் இருந்து விடுபட்டு, உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்துப் பேசி, தேவையான வெள்ள நிவாரணப் பணிகளை விரைவு படுத்திட வேண்டும்.

மத்திய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், மாநில அரசின் சார்பில் இதற்காகத் தனியாக சிறப்பு நிதி இருக்கும், நிதித்துறைச் செயலாளரை அழைத்துப்பேசினால், அவர் நிவாரண நிதிக்காக முதற் கட்டமாக அறிவிக்க உதவுவார். ஓரிரண்டு நாட்களில் அந்த நிதியை ஒதுக்கிட ஆவன செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக எத்தனை ஆயிரம் ரூபாய் தரப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு அமைச்சரையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு உடனே அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் வழங்குவதோடு, அவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும். இக்கட்டான இந்த நேரத்தில் நமது மக்களைக் கைவிட்டு விடக்கூடாது" என்று கூறியுள்ளார்.