Published:Updated:

`அரசுப் பள்ளியில் 3.4 லட்சம் தனியார், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

வருகிற மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள போதுமான கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தும் நோக்கிலும், ஆசிரியர்களையும் தக்கவைக்க ஒரு சில பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது.

``ஒரு வார முந்தைய கணக்கெடுப்பின்படி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 3.4 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியை நோக்கி வந்திருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம்தானே. அரசுப் பள்ளியின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டிருக்கிறது'' என்று பெருமைப்படுகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ``புதுச்சேரியில் 9 -ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் 16-ம் தேதி ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினோம். அதில், பள்ளிகள் திறப்பது குறித்தும், அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்தும் முதலமைச்சரிடம் கொண்டு சேர்க்கவிருக்கிறேன்.

தற்போதுள்ள கொரோனா சூழ்நிலைகளுக்கு ஏற்ப முதலமைச்சர் என்ன வழி வகை சொல்கிறாரோ, அதன்படி பள்ளிகள் திறக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி 3.4 லட்சம் பேர் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளியை நோக்கி வந்திருக்கிறார்கள் என்பது சந்தோஷமான விஷயம்தானே. அரசுப் பள்ளியின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டிருக்கிறது என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

அதேபோல், வருகிற மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்ள போதுமான கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கிலும், ஆசிரியர்களையும் தக்கவைக்க ஒரு சில பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கான ஆலோசனைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. நீட் பயிற்சி கடந்த 9-ம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. அரசின் நிலைப்பாடு என்பது நீட் வேண்டாம் என்பதுதான். தமிழகத்துக்கு விலக்கு என்பதில் திட்டவட்டமாக இருக்கிறோம்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஏழு ஆண்டுகள்தான் செல்லும் என்கிற நிலை இருக்கிறது. அந்தச் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறோம். அதன்படி விரைவில் அந்த அறிவிப்பு வெளிவரும். ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி பலர் வேலைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இது குறித்து அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்த நிலையில், இது குறித்து முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதன்படி செயல்படுவோம். கொரோனா கட்டுப்பாட்டிலிருந்தால் கண்டிப்பாகப் பள்ளிகள் திறப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும்" என்றார்.

"நாலே நாளில் 1,500 மாணவர்கள் தனியாரில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர்!"- அன்பில் மகேஷ்
அடுத்த கட்டுரைக்கு