Published:Updated:

தன் கட்சிக்கே தகுதி இல்லாதவர் விஜயகாந்த்!

சரவெடி அ.தி.மு.க... பொளந்துகட்டும் தி.மு.க.!

தன் கட்சிக்கே தகுதி இல்லாதவர் விஜயகாந்த்!

சரவெடி அ.தி.மு.க... பொளந்துகட்டும் தி.மு.க.!

Published:Updated:
##~##

''நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. பலவகையில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை​விட, யார் தோற்க வேண்டும் என்பதில்தான் அ.தி.மு.க. அதிக ஆர்வம் காட்டியது. அ.தி.மு.க. முதலில் 5 வேட்பாளர்களை அறிவித்தது. தி.மு.க. சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்​பட்டதும், அ.தி.மு.க. தனது ஒரு வேட்பாளரை வாபஸ் வாங்கிக்கொண்டு, அந்த இடத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்தது. இதனால், மறைமுகமாக கனிமொழியை, அ.தி.மு.க. வெற்றி பெறவைத்திருக்கிறது என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. 

அ.தி.மு.க. நினைத்திருந்தால், தனது கூட்​டணிக் கட்சிகள் மூலம் தி.மு.க. வேட்​பாளரை எளிமையாக தோற்கடித்திருக்க முடியும். வெளியில் எதிரிகளைப் போல காட்டிக்​கொண்டாலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. செய்த தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், தி.மு.க. செய்த தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இரண்டு கட்சிகளுக்கும் ரகசிய உடன்பாடு இருப்பதையே உறுதிப்படுத்துகிறது'' -  ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் வெளியானதும் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டு அதிரவைத்தார் விஜயகாந்த்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன் கட்சிக்கே தகுதி இல்லாதவர் விஜயகாந்த்!

இது தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சியினர் மத்தியிலும் பலத்த கோபத்தைக் கிளப்பியுள்ளது.

விஜயகாந்த் சொல்வது எந்த அளவுக்கு உண்மை? அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகள் தரப்பிலும் பேசினோம். அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் இதுபற்றி கேட்டபோது, ''வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசுகின்ற, வன்கனலாளர்களின் புலம்பலுக்கும்

தன் கட்சிக்கே தகுதி இல்லாதவர் விஜயகாந்த்!

விஜயகாந்த்துக்கும் வித்தியாசம் இல்லை. புரட்சித்தலைவியின் தலைமையில் செயல்படும் அ.தி.மு.க-வானது தி.மு.க-வுக்குத் துணை நின்றது என்று சொல்லியிருப்பது, அவர் இன்னும் மயக்கத்தில் இருக்கிறார் என்பதை அம்பலப்படுத்திவிட்டது. கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்துத் தொடங்கப்பட்டது அ.தி.மு.க.. அதன் இலக்கை எட்டுகின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில் அ.தி.மு.க-வை அழுக்காக்க, இந்த அண்டங்காக்கை முயற்சிக்கிறது. தி.மு.க-வில் அபிமன்யூவாகச் சித்திரிக்கப்​பட்ட, தி.மு.க-வில் இன்று 23 பேர் சட்டமன்றத்தில் சாதிக்க முடியாததை அன்று ஒற்றை மனிதனாகச் சட்டமன்றத்தில் சாதித்தவர் பரிதி இளம்வழுதி. அத்தகைய பெருமைமிக்கவரை இன்று அ.தி.மு.க-வுக்குக் கொண்டுவந்து, அவரை செயற்குழு உறுப்பினராக்கி அங்கீகாரம் கொடுத்து, தலைநகர் சென்னையில் இனி தி.மு.க-வுக்கு வேலை இல்லை... கருணாநிதி கடையை மூடவேண்டியதுதான் என்ற நிலையை புரட்சித்தலைவி உருவாக்கிய அதே நாளில் இப்படிப்பட்ட ஓர் அறிக்கையை எதிர்க் கட்சித் தலைவர் விடுகிறார் என்றால், அது பொறுப்பற்ற செயல். சூரியன் ஒருபோதும் மேற்கே உதிக்காது. சந்திரன் ஒருபோதும் அமாவாசையில் வராது. காக்கை எப்போதும் குயில் ஆக முடியாது. இந்த அண்டங்காக்கா சொல்வதையும் இந்த வரிசையில்தான் சேர்க்க வேண்டும்.

கருணாநிதியின் தலைமையில் இயங்கும் குடும்ப ஆதிக்கத்தை, வேரோடு சாய்க்கும் முயற்சியை புரட்சித்தலைவி செய்துவருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அதை நாங்கள் நிரூபிப்போம். எங்களைக் களங்கப்படுத்துவதற்கு, யாருக்கோ விலைபோக முயற்சித்தும் விற்பனையாக முடியாத இந்தப் பாண்டம் எங்களைப் பழித்தூற்றுவதை உலகம் ஒப்புக்கொள்ளாது.

எதிர்க் கட்சித் தலைவருக்கு உரிய போர்க்குணமோ, விவாதத் திறமையோ, ஜனநாயகப் பண்போ, கேள்வியால் வேள்வி செய்யும் ஆற்றலோ, அரசை ஆற்றுப்படுத்தும் தன்மையோ விஜயகாந்த்துக்குக் கிடையாது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே இப்படி ஓர் எதிர்க் கட்சித் தலைவர் இருந்ததும் கிடையாது. இனி இருக்கப்போவதும் கிடையாது. தன் கட்சிக்கே தகுதி இல்லாதவர் எதிர்க் கட்சித் தலைவராக எப்படி இயங்க முடியும்?'' என்று பொங்கிவிட்டார்.  

தன் கட்சிக்கே தகுதி இல்லாதவர் விஜயகாந்த்!

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பொன்​முடியிடம் பேசினோம். ''விஜயகாந்த் அவசரப்​பட்டு ஏதோ பேசுகிறார். ராஜ்யசபா தேர்தலுக்காக நாங்கள் பா.ம.க-விடம் ஆதரவு கோரினோம். புதிய தமிழகத்தை அணுகினோம். மனிதநேய மக்கள் கட்சியிடமும் ஆதரவு கேட்டோம். இவ்வளவு ஏன்... விஜயகாந்த்திடமே நாங்கள் ஆதரவு கோரினோம். என்ன காரணத்தாலோ, அவர் ஆதரவு தர மறுத்துவிட்டார். அதைப்போலவேதான் காங்கிரஸிடமும் ஆதரவு கேட்டோம். 23 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வைத்துக்கொண்டு எங்கள் தலைவர் கலைஞரின் முயற்சியால், நாங்கள் ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறோம். இதே விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸின் ஆதரவைக் கேட்டு, டெல்லியில் தவமிருந்தது எங்களுக்குத் தெரியாதா? அவர்களால் முடியாததை நாங்கள் சாதித்து இருக்கிறோம். தே.மு.தி.க-வைவிட குறைவான எம்.எல்.ஏ-க்கள் இருந்தும் நாங்கள் ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்று இருக்கிறோம்.

எங்களது வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத விஜயகாந்த், அ.தி.மு.க. ஆதரவுடன் நாங்கள் வெற்றிபெற்றதாக அறிக்கை விடுகிறார். எங்கள் கட்சி எல்லா விஷயங்களிலும் வெளிப்படையாகவே செயல்படுகிறது. விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.எல்.ஏ-க்கள் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்துள்​ளனர். இதில் இருந்தே யார் யாரோடு கூட்டணி வைத்துள்ளார்கள் என்று தெளிவாகத் தெரிந்து​கொள்ளலாம். ரகசியக் கூட்டணி என்று இவர் எதைவைத்துப் பேசுகிறார்? எதெல்லாம் நடக்காதோ... அதெல்லாம் நடந்ததைப் போல அறிக்கை விட்டிருக்கிறார். திராவிட இயக்கத்தின் வரலாறு பற்றி விஜயகாந்த்துக்கு என்ன தெரியும்? பேருக்குத்தான் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால், நிஜமான எதிர்க் கட்சித் தலைவராக இருந்து ஆளும் அ.தி.மு.க. அரசின் குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டுவது எங்கள் தலைவர் கலைஞர்தான். நண்பர் விஜயகாந்த்துக்கு ஓர் அன்பான கோரிக்கை... முதலில் நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் எதற்காக ஜெயலலிதா கட்சிக்கு ஓட்டுப் போட்டார்கள் என்று முதலில் விளக்கம் சொல்லுங்கள். அதன் பிறகு மற்ற கட்சிகளைப் பற்றிப் பேசலாம். வெற்றியும் தோல்வியும் அரசியலிலும் சரி... வாழ்க்கையிலும் சரி... சகஜமாக வரும். போகும். அதை ஏற்றுக்கொள்பவன்தான் பக்குவப்பட்ட மனிதன். அப்படிப் பக்குவப்பட்ட மனிதன் மட்டும்தான் ஜெயிக்க முடியும். விஜயகாந்த்துக்கு ஏன் அந்தப் பக்குவம் இல்லை? அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ரகசிய கூட்டணி அமைத்துள்ளது என்று அவர் சொல்வதைக் கேட்டால், பச்சைக்குழந்தை கூடச் சிரிக்கும். எங்களுக்கும் அதே சிரிப்புதான் வருகிறது'' என்று சொன்னார்.

விஜயகாந்த் சொன்னது விஷயமா, வினயமா?

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism