
கே.குணசேகரன், மதுரை-2.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்பது கலைஞர் எழுதிய பழைய வசனம். அது இந்தக் காலகட்டத்துக்கு பொருந்துமா?

மகளை எம்.பி. ஆக்குவதற்காக சென்னை முதல் டெல்லி வரை கட்சி வாசல்களில் காத்தி ருந்ததை ஞாபகப்படுத்துகிறது இந்த வசனம்!
சங்கீதா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி ஏற்பட இனி வாய்ப்பே இல்லை. அப்படித்தானே?
##~## |
அப்படிச் சொல்லிவிட முடியாது. இரண் டுக்கும் சமாதானம் செய்துவைக்க காங்கிரஸ் முயற்சிக்கும். தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தால் மட்டும்தான் தமிழகத்தில் இருந்து கணிசமான எம்.பி-க்களைப் பெற முடியும் என்பதில் காங்கிரஸ் தலைமை தெளிவாக இருக்கிறது. நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில்கூட தே.மு.தி.க. வேட் பாளரை தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என்றுகூட காங்கிரஸில் சிலர் முயற்சிகள் செய்தனர். எனவே, காங்கிரஸின் எண்ணம் இவர்களைச் சேர்ப் பதாகத்தான் இருக்கும்.
எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, ராணிப்பேட்டை.

தமிழகத்தில் பல துறைகளிலும் கலைஞர் ஆற்றிய அரும் பணிகளை வேறு எவரோடும் ஒப்பிட முடியுமா?

அரசியல், திரைப்படம், இலக்கியம்... என்ற மூன்று துறைகளின் பல்வேறு பிரிவுகளிலும் இன்று வரை இயங்கிக்கொண்டு இருப்பவர் கருணாநிதி. அவருக்குச் சமமாக வைத்து ஒப்பிட இன்று எவரும் இல்லை என்பது உண்மைதான்!
கு.நீலமேகன், விழுப்புரம்.

தி.மு.க. ஆட்சியில் துணை முதல் வராக ஸ்டாலின் இருந்தார். இன்றைய ஆட்சியில் துணை முதல்வராக இருக்கத் தகுதியுள்ள அமைச்சர் யார்?
ஓ.பன்னீர்செல்வம் அல்லது செந்தில்பாலாஜி!
எம்.சிவகுமார், வேதாரண்யம்.

இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகும் இலங்கை ராணுவ வீரர்களை பெங்களூருவுக்குத்தானே அனுப்பி யுள்ளனர்... இலங்கைக்குத் திருப்பி அனுப்பவில்லையே?
தமிழகத்தில் எழும் எதிர்ப்பை அடக்குவதற்காகச் செய்யப்படும் காரியங்கள்தான், இலங்கை ராணுவ வீரர்களை இங்கு இருந்து அப்புறப்படுத்துவது. மத்திய அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் அதைச் செய்யாது. ஈழத் தமிழருக்கு ஓரளவு நன்மை ஏற்படுத்தும் 13-வது சட்டத் திருத்தத்தை அந்த நாட்டு அரசு காவுகொடுத்து விட்டது. இதை இந்தியாதான் தட்டிக்கேட்க வேண்டும் என்று, இலங்கைத் தமிழ் எம்.பி-க்கள் டெல்லி வந்து நம்முடைய பிரதமரிடம் கோரிக்கைவைத்தனர். இதுபற்றி பேசுவதற்காக பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கொழும்பு விரைகிறார் என்று செய்தி பரவியது. அதற்கு மறுநாள், கொழும்புவில் பத்திரிகையாளரிடம் பேசிய மகிந்த ராஜ பக்ஷே, 'சிவசங்கர் மேனன் வருவது இலங்கையில் நடக்கும் மாநாடு பற்றி கலந்துரையாடல் செய்வதற்காக’ என்று போட்டு உடைத்துவிட்டார். எனவே மத்திய அரசு, ஈழத் தமிழர் பிரச்னையில் நாடகம் மட்டுமே நடத்தும்!
ஜே.வி., குரோம்பேட்டை.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை உயர்த்த பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் இதில் என்ன செய்ய முடியும்? சரக்குச் சந்தை, பங்குச் சந்தை, அந் நியச் செலாவணிச் சந்தை... ஆகிய மூன்றும்தான் இதற்குக் காரணம். பொதுவாக, இறக்குமதியை எவ்வளவுக்கு எவ்வளவு நாம் குறைக்கிறோமோ... அதுதான் நம்முடைய பொருளாதாரத்துக்கு நல் லது. இறக்குமதியைக் குறைத்து அனைத்துப் பொருட்களையும் நாமே உற்பத்திசெய்யும் தன் னிறைவை அடைந்தால்... டாலர் வீழ்ச்சி, எழுச்சியைப் பற்றி கவலையே பட வேண்டியது இல்லை.
சுப்புவேதையா சித்திரவேலு, கருப்பம்புலம்.

மாநிலங்களவைத் தேர்தல் பற்றிய கணக்கு போடும்போது யாருமே சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைச் சொல்லவே இல்லையே... ஏன்?
இரட்டை இலை சின்னத்தில்தான் அந்தக் கட்சி போட்டியிட்டது. எனவே, சட்டசபையைப் பொறுத்தவரை அவர்களுக்குத் தனித்த அடையாளம் கிடையாது.
எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.


டி.ராஜேந்தரின் லட்சிய தி.மு.க-வின் செல்வாக்கு எவ்வளவு?
டி.ஆரின் தமிழும் தனித் திறமையும்தான் அந்தக் கட்சியின் முதலீடும் செல்வாக்கும்!
வாசு.மகாதேவன், கரூர்.

இரண்டு அதிகார மையங்கள் ஒரு கட்சியில், ஒரு ஆட்சியில் இருந்தால் தப்பா?
ரஜனீஷ் சொன்னது நினைவுக்கு வருகிறது.
'ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைப் பார்க்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு எஜமானர்களிடம் வேலை பார்க்க முடியாது’ என்று சொன்னவர் ரஜனீஷ். 'இரண்டு முயல்களுக்குப் பின்னால் ஓடினால், ஒரு முயலைக்கூட பிடிக்க முடியாது’ என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
இரண்டு அதிகார மையங்கள் இருந்தால், எதுவும் ஒழுங்காக நடக்காது என்பதே நடைமுறை உண்மை!
ஆர்.டி.இளங்கோ, ராசிபுரம்.

தமிழக மீனவர்கள் எல்லை மீறவே இல்லையா?
கடல் எல்லையைக் கணிப்பது, கண்டுபிடிப்பது சிரமம். காற்றடிக்கும் திசை நோக்கிக் கலம் போவதும் இயற்கை. எனவேதான் எல்லை மீற வேண்டிய இடர்ப்பாடு ஏற்படுகிறது. அவர்கள் குற்றச் செயல்களுக்காகவோ, கொள்ளையடிக்கவோ செல்ல வில்லையே!
எஸ்.ஜெயச்சந்திரன், வடசேரி.

அடிமையாய் இருந்த காலத்தில் பெற்ற காவிரி நீரும், முல்லைப் பெரியாறு நீரும் சுதந்திரம் பெற்றதால் பறிகொடுக்கிறோமா?
அன்று தட்டிக்கேட்பதற்குத் தகுதியான மையப் படுத்தப்பட்ட ஆட்சி இருந்தது. அவர்கள் ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை அமல்படுத்துவதில் துல்லியமாக நடந்துகொண்டனர். ஆனால் இன்றைய மத்திய அரசு, கர்நாடக காங்கிரஸ் மனம் கோணாமலும் கேரள காங்கிரஸின் எதிர்ப்பைச் சம்பாதிக்காமலும் முடிவுகள் எடுப்பதால்தான், தமிழகம் தண்ணீர் இல்லாமல் திணறுகிறது.
