Published:Updated:

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை!

தமிழருவி மணியன்ஓவியம்: ஹாசிப்கான்

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை!

தமிழருவி மணியன்ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
##~##

சந்தர்ப்பவாத சாகசங்களும், திகைக்கவைக்கும் திடீர் திருப்பங்களும், எளிதில் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளும் நிறைந்த ஒரு நவீன அரசியல் நாடகம் மாநிலங்களவைத் தேர்தலின்​போது தமிழகத்தில் அரங்கேறியது. கொண்ட கொள்கைக்குக் குந்தகம் இல்லாமல், கூட்டணி தர்மம் குலைந்துவிடாமல், லட்சியப் பயணத்தில் வழுக்கி விழாமல், மானவுணர்வு மழுங்கிவிடாமல், சிந்தனை - சொல் - செயல் ஆகியவற்றில் சிறிதளவும் பேதமில்லாமல் (!) நம் அரசியல் கட்சிகள் ஆறு அறிஞர்களைத் தேர்ந்தெடுக்க வாக்குப் பிச்சைக்கு வலம் வந்த நேர்த்தியை நினைத்தால், நெஞ்சம் சிலிர்க்கிறது. 

ஆளும் அ.இ.அ.தி.மு.க.-விடம் 151 சட்ட​மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு இடதுசாரிகளிடம் 18 உறுப்பினர்களும், ஃபார்​வர்டு பிளாக் சார்பில் ஒருவரும் உள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய கட்சியில் இருந்து நால்வரை நியமித்து முதலிலேயே இடதுசாரிகளில் ஒருவரை ஆதரித்​திருந்தால்... கம்யூனிஸ்ட்களின் கௌரவம் காப்பாற்றப்பட்டிருக்கும், கூட்டணிக் கட்சிகளை அவமானப்படுத்துவதும் அலைக்கழிப்பதும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான அரசியல் விளையாட்டு என்பதால், அவரது கட்சியிலிருந்தே ஐவர் பெயர்களை அறி​வித்து இடதுசாரிகளுக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை!

அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். நம் காம்ரேடுகள் எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொள்ளும் வடிவேலுகளாகி, நீண்ட காலமாகிறது. அதனால், அவர்களுக்கு வலிக்கவே இல்லை.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இந்நாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும், முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதனும் சென்னைக்கு வந்து நம் முதல்வரைச் சந்தித்து ராஜா அவர்களுக்கு ஆதரவு கேட்க இரண்டு நாள் காத்திருந்தனர். பாவம்... அவர்களால் முதல்வரைச் சந்திக்க முடியவில்லை. 'முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற வள்ளுவரின் வாசகத்தை அறிந்த அவர்கள் அதோடு முடங்கிவிடவில்லை. திட்டக் கமிஷனைச் சந்திக்க தில்லி வந்த ஜெயலலிதாவை இருவரும் தமிழ்நாடு விடுதியில் சந்தித்தனர். 'ஆறாவது இடத்தில் ஆளைப் போடுங்கள்’ என்று இலவச ஆலோசனையை முதல்வர் முன்மொழிந்தபோது இருவருக்கும் விழி பிதுங்கியது. இந்தியாவின் முதுபெரும் கட்சியின், 1952 முதல் இன்று வரை அனைத்துத் தேர்தல்களிலும் ஒரே சின்னத்தில் நிற்கும் ஒரே இயக்கத்தின் அறிவார்ந்த இரண்டு அகில இந்தியத் தலைவர்கள் ஒரு ராஜ்ய சபா உறுப்பினராக டி.ராஜாவுக்கு மறுவாய்ப்பை உருவாக்கித்தருவதற்குத் தங்கள் சுயமரியாதையை இந்த அளவு இழந்திருக்கக் கூடாது. பதவி யாரைத்தான் பாடாய்ப்படுத்தவில்லை!

காம்ரேடுகளின் ஆதரவின்றித் தன் கட்சியின் சார்பில் ஐந்தாவது நபரை நிறுத்தினால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்ற நிலையில், ஜெயலலிதா தங்கமுத்துவைப் போட்டியிலிருந்து விலகச் செய்தார். ஆனால், கீழே விழுந்தாலும் முகத்தில் மண்படவில்லை என்று பாவனை செய்வதுபோன்று, 'இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியும், ஏ.பி.பரதனும், தா.பா-வும் வேண்டிக்கொண்டதற்கிணங்க அ.இ.அ.தி.மு.க. நிர்வாகக் குழு ராஜாவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளது’ என்று முதல்வர் அறிவித்தார். அடுத்த கணம் காம்ரேடுகளின் உள்ளமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம். இவர்களைப் பற்றி யோசிக்கையில், கவலையாய் இருக்கிறது.

டி.ராஜா சென்ற முறை கலைஞர் கருணாநிதியின் ஆதரவில் மாநிலங்களவை உறுப்பினரானார். அப்போது சி.பி.ஐ. சட்டமன்ற உறுப்பினர்கள் வெறும் ஆறு பேர் மட்டும் இருந்த நிலையில் கலைஞரின் தயவு தேவைப்பட்டது. அவர் மீண்டும் மாநிலங்களவைக்குச் செல்வதற்கு இன்று ஜெயலலிதாவிடம் போய் நிற்க வேண்டி நேர்ந்தது. நெஞ்சில் வழிந்த நன்றிப் பெருக்கில் அன்று கலைஞருக்குப் புகழாரம்; இன்று ஜெயலலி​தாவுக்குப் பல்லாண்டு. இதற்குப் பெயர்தான் மாற்று அரசியலா? ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறுவதுதான் அரசியல் மாற்றத்துக்கான அடித்தளம் அமைக்கும் ராஜதந்திரமா? பிரகாஷ் காரத்தும், பரதனும் முன்வைக்கும் மாற்று அரசியலின் முகலட்சணம் இதுதானா? உ.பி-யில் மாயாவதி, முலாயம்சிங்கோடும், தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவோடும் அணி மாறி நிற்பதுதான் சிவப்புச் சிந்தனையாளர்களின் சித்தாந்த அரசியலா?

உலகிலேயே ஜனநாயக முறையில் தேர்ந்​​தெடுக்கப்​பட்டு, 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து புதிய சரித்திரத்தை மே.வங்கத்தில் சமைத்த இடதுசாரிகளை மம்தா பானர்ஜியால் வீழ்த்த முடிந்ததென்றால், தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து மக்களை முற்றாக விடுவிக்க முடியாதா? எம்.என்.கோவிந்த நாயரும், ஈ.எம்.எஸ்.நம்பூதிரியாரும் கேரளாவில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியுமெனில், தமிழகத்தில் இடதுசாரிகளால் இதைச் சாதிக்க இயலாதா? இந்திரஜித் குப்தா இறக்கும் வரை 37 ஆண்டுகள், ஹிரேன் முகர்ஜி 25 ஆண்டுகள் மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் புதிய வரலாறு படைத்தனர். புபேஷ் குப்தா மாநிலங்களவை தொடங்கப்பட்ட நாளிலிருந்து இறக்கும் வரை, 30 ஆண்டுகள் புகழ்பூத்த மனிதராய், வாதம் வல்ல மேதையாய் அவையை அலங்கரித்தார். இந்தக் கம்யூனிஸ்ட்களின் பாரம்பரியம் இன்று எங்கே போனது? இவர்கள் அனைவரும் அடுத்தவர் தோள்களில் அமர்ந்தா வலம் வந்தனர்?

ராஜா மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கு முழுத் தகுதி பெற்றவர். ஆனால் இரண்டு முறையும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் கம்யூ​னிஸ்ட்களுக்குப் பெருமை தருவதாக இல்லை. அடுத்த ஆண்டு காலியாகும் இடத்துக்கு இப்போதே ஜெயலலிதாவிடம் மார்க்சிஸ்ட்கள் மனுப்போட்டுவிட்டனர். ஒரு தலைமுறை என்பது 15 ஆண்டுகள். நம் காம்ரேடுகள் போயஸ் தோட்டத்திலும், கோபாலபுரத்திலும் ஒரு 15 ஆண்டுகள் பிச்சைப் பாத்திரத்துடன் பரிதாபமாக நிற்காமல், பதவி மேனகையிடம் மனதைப் பறிகொடுக்காமல், மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியலை வளர்த்தெடுக்க, புனிதம் செறிந்த ஒரு தியாக வேள்வியை நடத்த ஏன் தீர்மானிக்கக் கூடாது? கேரளாவின் முதலமைச்சராக இருந்த பி.கே.வாசுதேவன் நாயர், 22 ஆண்டுகள் (1982-2004) தேர்தல் அரசியலில் இருந்து விடுபட்டு விலகி நின்று கட்சிப் பணியாற்றக் களம் அமைத்ததுபோல், தமிழகத்தில்

மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை!

ஏன் வாசுதேவன் நாயர்கள் வளரவில்லை? மக்களின் முதலமைச்சராக சிவப்புச் சிந்தனையும், சீலம் மிகுந்த வாழ்க்கையும் பழுதுபடாமல் கேரளாவில் இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்து சாதனை படைத்த அச்சுதமேனன் இந்த மண்ணில் எப்போது முகம் காட்டுவார்? கம்யூனிஸ்ட்கள் சிந்திக்கட்டும். போகும் பாதையே சுகமானது என்று இவர்கள் முடிவெடுத்தால் இன்னொரு யுகம் பிறந்தாலும் 3 விழுக்காடுக்கு மேல் வாக்கு வங்கி வளர்வதற்கு வழி இல்லை. வேண்டுமானால், தேய்வதற்கு வாய்ப்பு உண்டு.

மாநிலங்களவை தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறுகளைச் செய்திருக்​கிறார். விஜயகாந்த் உணர்ந்தோ உணராமலோ, உருப்படியாக ஒரு சேவையைச் செய்திருக்கிறார். ஜெயலலிதா எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்​திருந்தபோது, அவருடைய சோதனைக் காலத்தில் சுமையைப் பகிர்ந்துகொண்டு, முதல்வராவதற்கு முன்பும், முதல்வரான பின்பும் அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்குக் கைம்மாறாக அவரே முன்வந்து ஓர் இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். இதைச் செய்திருந்தால், அவருடைய பெருந்தன்மை பாராட்டப்பட்டிருக்கும். அரசியலில் கூட்டணிக் கட்சிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பக்குவம் இன்று வரை அவருக்கு வாய்க்கவில்லை. இந்தப் பக்குவமும் பணிவும் வாய்க்காத வரை அவர் பிரதமராகும் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது.

மேலும், கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுகமாக உதவியது அவர் இழைத்த பெரும் பிழை. ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சித்து வாக்கு சேகரித்த ஜெயலலிதா, அந்த ஊழலில் முக்கியப் பங்கு வகித்ததாக மத்திய புலனாய்வுத் துறையால் நீதிமன்றத்தில் நிறுத்தப்​பட்ட கனிமொழியைத் தோற்கடிக்க முயன்றிருக்க வேண்டும். தே.மு.தி.க-வில் இருந்த 29 உறுப்பினர்களின் வாக்கு​களோடு ஜெயலலிதாவிடம் எஞ்சியிருந்த 5 வாக்குகளையும் வழங்​கியிருந்தால், இளங்கோவனின் வெற்றி உறுதிசெய்யப்பட்டிருக்கும். இளங்​கோவனுக்கு 34 வாக்குகளும், கனிமொழிக்கு 32 வாக்குகளும் கிடைத்திருக்கும். ஜெயலலி​தாவின் வலிய பகை தி.மு.க-வே தவிர தே.மு.தி.க. அன்று. எம்.ஜி.ஆரின் வாரிசு, கருணாநிதியின் வாரிசு வெற்றிபெற வழி​வகுத்தது அரசியல் முரண்; ராஜதந்திரக் குறை.

கலைஞர் மீண்டும் காங்கிரஸுடன் கைகோத்து நின்றதன் மூலம் அவருடைய போலி ஈழ ஆதரவு முகமூடி கழன்று, சுயநலச் சாயம் படிந்த நிஜ முகம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இனி அவர் எவ்வளவு அடர்த்தியாக இன அரிதாரம் பூசினாலும் உண்மை முகத்தில் சிறிதும் ஒட்டாது. கலைஞரைப் பொறுத்தவரை பொது வாழ்வில் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த படிநிலைகள் உண்டு. இதை இன்று வரை தமிழினம் பூரணமாகப் புரிந்துகொள்ளாததுதான் பேரவலம்.

முதலில் கலைஞருக்கு முக்கியமானது, அவரது சொந்த நலன்; அடுத்தது, குடும்ப நலம்; அதற்கடுத்தது, கழக நலன். இந்த மூன்றும் எந்த வகையிலும் பாதிக்கப்படாத நிலையில் மட்டுமே, கொஞ்சம் சமூக நலன். ஈழம் எரிந்தபோது, இனம் கரிந்து அழிந்தபோது முதல்வர் நாற்காலியில் அமர்ந்​திருந்த கலைஞர், காங்கிரஸ் அரவணைப்பில் அகமகிழ்ந்திருந்தார். பதவி பறிபோனதும், கழகத்தின் கட்டுமானம் தகர்ந்து தரைமட்டமானதும் ஈழ உறையில் துருப்பிடித்துக்கிடந்த இனவுணர்வு வாளை உருவி எடுத்தார். காங்கிரஸ் உறவை வெட்டி முறித்தார். தமிழினத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயற்படுவதைப் புதிதாகக் கண்டுபிடித்தார். இனத்தைக் காக்கும் புனிதப் பணியிலிருந்து இனி ஓயப்போவதில்லை என்று சூளுரைத்தார். உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் கூடி விவாகரத்​துக்கு வாணவேடிக்கை நடத்தி, விழா எடுத்தனர்.

மாநிலங்களவைத் தேர்தல் வந்தது. மார்க்​சிஸ்ட்கள் இணங்கியிருந்தால், விஜயகாந்த் வணங்​கியிருந்தால், கலைஞரின் காங்கிரஸ் எதிர்ப்பு முழக்கம் தொடர்ந்து முரசொலித்திருக்கும். மாறாக, மார்க்சிஸ்ட்கள் மயங்கவில்லை; விஜயகாந்த் விரும்பவில்லை. கனிமொழியின் வெற்றிக்கு வழிவகுக்கும் வரை கலைஞரின் கண்களில் உறக்கம் இல்லை. 'சபதங்களின் காரணமாக மதுக் கோப்பைகளை உடைத்தேன். மதுக் கோப்பைகள் காரணமாக சபதங்களை உடைக்கிறேன்’ என்பது மதுமொழி. 'கழகத்தின் எதிர்கால நன்மைக்காக காங்கிரஸ் உறவை முறித்தேன். மகள் கனிமொழியின் வருங்கால நன்மைக்காக மீண்டும் காங்கிரஸின் உறவை வரித்தேன்’ என்பது கலைஞரின் புதுமொழி. 'சமத்துவமின்மையே! உனக்குப் பெயர்தான் இந்து மதமா?’ என்றார் அண்ணல் அம்பேத்கர். 'குடும்ப நலனே! உனக்குப் பெயர்தான் தி.மு.கழகமா?’ என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது. மூன்றே மாதங்களில் கலைஞர் காங்கிரஸிடம் சரணாகதி அடைந்ததற்கும், அவருடைய டெசோ நாடகம் பாதியில் முடிந்ததற்கும் வழிவகுத்தது விஜயகாந்த்தேயன்றி ஜெயலலிதா இல்லை.

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல் ஓர் உண்மையைத் தெளிவாகப் புலப்படுத்திவிட்டது. இரண்டு கழகங்களின் செயல்முறைகளும் மாறப்போவதில்லை. இடதுசாரி இயக்கங்கள் கழகங்களின் உறவைக் கைவிடப்போவதில்லை. விஜயகாந்த்துக்கு உண்மையான நெறிசார்ந்த அரசியல் புரியப்போவதில்லை. கழகங்களைவிட்டு விலகி நின்றது வரவேற்புக்குரியது என்றாலும் பா.ம.க. சாதி அரசியலைக் கைவிடப்​போவதில்லை. வைகோவின் தனிமைப் பயணம் முடியப்போவதில்லை. ஒரு நாளும் தமிழகத்தில் உண்மையும், ஒழுக்கமும் சார்ந்த மாற்று அரசியல் மலரப்போவதே இல்லை.

'உயர்ந்தவர்கள் இல்லாத அவை, அவையே இல்லை. நேர்மை வழி நடக்காதவர்கள், உயர்ந்தவர்களே இல்லை. உண்மை இல்லாத இடத்தில், நேர்மையே இல்லை. போலித்தனத்தில் போய் முடிந்தால், அது உண்மையே இல்லை’ என்கிறது மகாபாரதம், இந்த மண்ணில் இன்று நடப்பதற்குப் பெயர் அரசியலே இல்லை என்கிறது நம் அனுபவ ஞானம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism