Published:Updated:

தவிக்குதே... தவிக்குதே...

தவிக்குதே... தவிக்குதே...

தவிக்குதே... தவிக்குதே...

தவிக்குதே... தவிக்குதே...

Published:Updated:
தவிக்குதே... தவிக்குதே...
##~##

பொதுவாகவே 'உலக வங்கி’, 'ஐ.நா. சபை’, 'புரிந்துணர்வு ஒப்பந்தம்’ என்பவை எல்லாம் நமக்கு சுவாரஸ்யமற்ற குழப்பமான செய்தி​களாகத் தெரிகின்றன. அதனாலேயே அவற்றைக் கடந்து செல்கிறோம் என்பதுடன், அவற்றை மிக உயரிய அமைப்புகளாகவும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஐ.நா.சபை என்பது அப்பழுக்கில்லாத அப்பாடக்கரும் இல்லை; உலக வங்கி ஒன்றும் ஊருக்கு உழைக்கும் உத்தமனும் இல்லை. இவை, மேற்கத்திய நாடுகளுக்கும் அவர்களின் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கும் பிசினஸ் பிடித்துக்கொடுக்கும்  வேலையைத்தான் பார்க்கின்றன. அவர்கள் நடத்திய சில கூட்டங்கள் பற்றி பார்த்தால், இதைப் புரிந்துகொள்ளலாம். நம் எல்லோரையும் தவிக்கவிட்டவர்கள் இவர்கள்​தான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1992-ம் ஆண்டு அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் ஐ.நா. மாநாடு ஒன்று நடந்தது. உலகம் முழுவதும் இருந்து 100 நாடுகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ''தண்ணீர் என்பது, அதன் அனைத்து அம்சங்களிலும் பொருளாதார மதிப்பைப் பெற்றுவிட்டது. ஆகவே, தண்ணீரை ஒரு பொருளா​தாரப் பண்டமாக அறிவிக்க வேண்டும்'' என்று இந்த மாநாடு கேட்டுக்கொண்டது. 'தண்ணீர் என்பது மனிதனின் உயிர் ஆதாரம்’ என்று சொன்ன ஐ.நா., தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய பண்டம் என்று சொன்னதுடன் நிற்கவில்லை. ''தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்காததால், மக்கள் அதை வீணடிக்கிறார்கள். அதனால், ஏதோ ஒரு வகையில் உபயோகிப்புக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்'' என மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கோரியதை ஐ.நா. ஏற்றுக்கொண்டது.

தவிக்குதே... தவிக்குதே...

அதன்பிறகு, 1996-ம் ஆண்டு உலகின் மிகப் பெரிய தண்ணீர் நிறுவனங்கள் ஒன்றுகூடி உலகத் தண்ணீர் சபை (World Water Council-WWC) என்ற அமைப்பை உருவாக்கின. 'விநியோகம், மேலாண்மை’ என 'எம்.பி.ஏ.’​தனமாக பேசிய இவர்களின் நோக்கம், 'தண்ணீர் விநியோகத்தில் இருந்து அரசாங்​கங்களைக் கழற்றிவிடுவது; தனியார் தண்ணீருக்கு ஆதரவு லாபி செய்வது’ என் பதுதான். இப்போது இந்த அமைப்பில் 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. உலகின் மாபெரும் பணபலம்கொண்ட அமைப்பு​களில் இதுவும் ஒன்று. ஐ.நா. சபையை ஆட்டுவிக்கும் இந்தத் தண்ணீர் சபை, அதன் பல திட்டங்களுக்கு நிதி உதவி செய்கி​றது. இந்த உலகத் தண்ணீர் சபை, ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறது. ஐ.நா-வின் பல அமைப்புகள், உலகத் தண்ணீர் சபையில் உறுப்பினர்களாக உள்ளன. இப்படி 'செம்புலப் பெயல் நீர்போல’ கலந்திருக்கும் இவர்கள், ஏழைகள் ஒரு சொம்பு நீருக்குத் தவிப்பது குறித்து சிந்திப்பார்களா என்ன?  

இதே உலகத் தண்ணீர் சபை, 2000-ம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் இன்னொரு கூட்டத்தை நடத்தி​யது. உலகம் முழுவதும் இருந்து 5,700 பேர் கலந்துகொண்ட இந்த மாநாட்டை உலக வங்கியும் தனியார் தண்ணீர் நிறுவனங்களும் இணைந்து நடத்தின. 'தண்ணீர் வெறும் தேவையா? அல்லது அடிப்படை உரிமையா?’ என்பது தலைப்பு. சாலமன் பாப்பையா பட்டிமன்றத் தலைப்புபோல இருந்தாலும், அதன் தீர்ப்பு முன்பே எழுதப்பட்டிருந்தது. அவர்களின் தேவை எல்லாம், 'தண்ணீர் ஒரு பண்டம்’ என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயப்படுத்தும் வாதங்களைக் கண்டடைவதே. அவ்வளவு படித்துவிட்டு இதைக்கூட செய்ய​வில்லை என்றால் எப்படி? 140 நாடுகளின் அமைச்சர்கள், ஐ.நா. சபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு கடைசியில், 'தண்ணீர் அடிப்படை உரிமை அல்ல; அது வெறும் தேவை மட்டும்தான்’ என்ற முடிவுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் தண்ணீர் தனியார்மயத்துக்கான ஆதரவுக் கருத்துகள் அசுர வேகத்தில் பரப்பப்பட்டன; படுகின்றன.

மறுபக்கம் உலக வங்கி, ஒரு கந்துவட்டிக்காரனைப்​போல உலக நாடுகளை மிரட்டுகிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு 'தண்ணீரைத் தனியார்மயமாக்குவது’ என்ற நிபந்தனையின் கீழ்தான் கடன் தருகிறது. உலகம் முழுவதும் வளரும் நாடுகளில் 300-க்கும் அதிகமான குடிநீர்த் திட்டங்களில் உலக வங்கி முதலீடு செய்துள்ளது. 2005-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், உலகின் பல நாடுகளுக்கு 50 வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு உலக வங்கி நிதி வழங்கியது. இதை ஆய்வுசெய்த உலக மேம்பாட்டு இயக்கம் என்ற அமைப்பு, ''90 சதவிகித நாடுகள் தனியார்மயத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளன. 62 சதவிகிதம் நாடுகள், குறிப்பாக தண்ணீரைத் தனியார்மயமாக்க உறுதி அளித்துள்ளன'' என்று குறிப்பிடுகிறது. ஆக, எழுதி வாங்கிக்கொண்டுதான் கடன் தருகிறது உலக வங்கி.

தவிக்குதே... தவிக்குதே...

இப்படி உலக வங்கி கடன் தரும் திட்டங்கள் பெரும்பாலானவற்றை கான்ட்ராக்ட் எடுத்திருப்பது, பன்னாட்டு நிறுவனங்களே. ''உலக நாடுகளுக்கு அமெரிக்கா 1 டாலர் கடனாக வழங்கினால், அதை 1.30 டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களாக அமெரிக்க நிறுவனங்களே திரும்பப்பெற்று விடுகின்றன'' என்கிறார் அமெரிக்க நிதித் துறை அதிகாரி ஒருவர். அதாவது, அந்தப் பக்கம் கடன் தருவது; இந்தப் பக்கம் 'இவர் நம்ம ஆளுதான். இவருக்கே அந்த கான்ட்ராக்டை கொடுத்திருங்க’ என்று கண்டிஷன் போட்டு, கொடுத்த கடனுக்கு வட்டியும் முதலுமாக சம்பாதித்துச் செல்வது. கடன் மட்டும் தீரவே தீராது. நம் ஊரில் இதற்குப் பெயர் கந்துவட்டி. உலக வங்கி செய்வதால், இதற்குப் பெயர் 'நல்வாழ்வுத் திட்டம்’!

ஒருவேளை, கடன் வாங்கிய நாடு கொடுக் காமல்​விட்டால்? அதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. கந்துவட்டிக்காரன் வெத்துப் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொள்வது போல, உலக வங்கியும் அனைத்தையும் 'புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக’ எழுதி வாங்கிக்கொள்கிறது. அதை மீறினால் இந்த நிறுவனங்கள், நீதிமன்றத்துக்குச் செல்லும். நீதிமன்றங்கள் பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புச் சொல்லும். பொலிவியாவில் மாபெரும் போராட்டம் நடத்தி 'பெக்டெல்’ கம்பெனியை மக்கள் விரட்டி அடித்தாலும், நஷ்டஈடு கேட்டு அந்தக் கம்பெனி வழக்கு தொடுத்திருக்கிறது. ''இப்படி உலகம் முழுவதும் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளில், 70 சதவிகிதம் அவர்களே வெற்றிபெறுகின்றனர்'' என்கிறது Food and water watch அமைப்பின் அறிக்கை.

உலக வர்த்தக அமைப்பு,  SMART - (specific, measurable, attainable, relevant and timely)  என்ற வர்த்தக நெறிமுறை ஒன்றை வகுத்துள்ளது. 'குறிப்பிடத்தக்கது, அளவிடக்கூடியது, அடையக்​கூடியது, யதார்த்தமானது மற்றும் காலத்தே கிடைக்கக்கூடியது’ என இதை மொழிபெயர்க்கலாம். அதாவது, ஒரு நிறுவனம் 100 கோடி மதிப்பிலான தண்ணீரை உறிஞ்ச இந்திய அரசுடன் ஒப்பந்தம் போடுகிறது, என வைத்துக்கொள்வோம். அது எந்த சிக்கலும் இல்லாமல் 'ஸ்மார்ட்’ ஆக நிறைவேற வேண்டும். 'சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு, இயற்கை வளங்களுக்குக் கேடு’ என யாரும் கொடி பிடித்துத் தொந்தரவு செய்யக் கூடாது. இதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இதைத்தான் நீட்டி முழக்கிச் சொல்கிறார்கள்.

இத்தனை செய்தபோதிலும் அவர்களின் லாபவெறி என்னும் பெரும் பசிக்கு முன்னால், இது போதுமானதாக இல்லை. உடனே, ''மூன்றாம் உலக நாடுகளின் மக்கள், தரமான தண்ணீருக்கு விலை கொடுப்பது பற்றிய மனத் தயக்கத்தில் இருந்து இன்னும் விடுபடவில்லை'' என நம் மீது அக்கறைகொண்டோரின் கவலைபோல பேசுகின்றனர். அதாவது தண்ணீரை விலை கொடுத்து வாங்கிக் குடிப்பதுதான் நாகரிகமாம். இலவசமாகக் குடிப்பது கௌரவக் குறைச்சலாம். இயற்கையைச் சுரண்டிப் பிழைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் நாகரிகப் பாடம் இது.

 'காட்ஸ்’ ஒப்பந்தம் (GATS - General  Agreement on Trade in Services), 'தண்ணீர் ஒரு பண்டம்’ எனத் தெளிவாக வரையறுக்கிறது. இதன் மூலம் தண்ணீரை ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் உள்ள தடைகளைத் திறந்து விடுகிறது. காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுள்ள நாடுகள், 'தண்ணீர் எங்கள் உரிமை; பாரம்பரியச் சொத்து’ என்று எல்லாம் சொல்ல முடியாது. 'சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்’ என தண்ணீர் ஏற்றுமதிக்கு அனுமதி மறுக்க முடியாது. மற்ற பொருட்களைப்போல தண்ணீரும் ஒரு விற்பனைப் பொருளே என ஏற்றுக்கொண்ட பிறகு, மற்ற பொருட்களுக்கு சந்தையில் என்ன விதிமுறைகள் உள்ளனவோ... அவை தண்ணீருக்கும் பொருந்தும். இதில் முக்கியமானது, காட்ஸ் ஒப்பந்தம் என்பது ஒரு வழிப்பாதை. அதில் கையெழுத்துப் போட்டுவிட்ட பிறகு, 'இல்ல, இல்ல... நாங்க குழாய் தண்ணீரையே விடுறோம்’ என ஒரு நகராட்சிகூட பின்வாங்க முடியாது. அப்படி பின்வாங்க வேண்டுமானால், அதற்கு இதில் கையெழுத்திட்டுள்ள 150 நாடுகளிடமும் சம்மதம் பெற வேண்டும். இப்படி ஒரு நச்சுச்சிலந்தி வலையில் நம் நாட்டை சிக்கவைத்திருக்கும் மன்மோகன் சிங்கும் ப.சிதம்பரமும், இந்த மரணப் பாதையை சொர்க்கத்தின் திறவுகோல் என்கிறார்கள்.

தவிக்குதே... தவிக்குதே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism