Published:Updated:

காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகள் கட்டப்படும்: கர்நாடக அரசு அறிவிப்பு!

Vikatan Correspondent
காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகள் கட்டப்படும்: கர்நாடக அரசு அறிவிப்பு!
காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகள் கட்டப்படும்: கர்நாடக அரசு அறிவிப்பு!
காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகள் கட்டப்படும்: கர்நாடக அரசு அறிவிப்பு!

பெங்களூரு:  காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகள் கட்டப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக அரசின் நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''காவிரி நீரை பயன்படுத்தி மேகேதாட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும்கூட இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.

இதற்காக உலக அளவிலான டெண்டருக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நமது நிலம், நமது தண்ணீரை பயன்படுத்துவதை யார் எதிர்த்தாலும் அது கணக்கில் வராது.

காவிரி நதிநீர் பிரச்னை வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் நாரிமனை சந்தித்து இதுபற்றி விவாதித்தேன். இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த இடையூறும் இல்லை என்றார். அவரது ஆலோசனையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு வழங்குவதுபோக உள்ள எங்கள் பங்கு தண்ணீரையே இந்த திட்டத்துக்கு பயன்படுத்துகிறோம். அதனால் தமிழ்நாட்டுக்கு பாதகம் இல்லை. காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்கு விடவேண்டிய தண்ணீரை திறந்துவிடுகிறோம். அதனால், இந்த திட்டத்தை தமிழக அரசு எதிர்த்தாலும் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த திட்டத்தை எதிர்ப்பது அவர்களின் உரிமை. அவர்களது வேலையை அவர்கள் செய்யட்டும். எங்களது வேலையை நாங்கள் செய்கிறோம்.

இந்த திட்டத்துக்கு தண்ணீர் தேக்கி வைப்பதற்கு காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட 22 இடங்களில் இடம் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் புதிய அணை கட்டப்படும். இதன் மூலம் 48 டி.எம்.சி. தண்ணீர் எங்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் பெங்களூர் மற்றும் மைசூர் பகுதிகளில் உள்ள நகரங்களில் நிலவும் குடிநீர் பிரச்னை தீரும். ஒருவேளை மழை குறைந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் பிரச்னை ஏற்பட்டால் இந்த புதிய அணைகள் மூலம் 10 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட முடியும்" என்றார்.