Published:Updated:

சூடு சொரணை இருந்தால் பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும்: கருணாநிதி பாய்ச்சல்!

Vikatan Correspondent
சூடு சொரணை இருந்தால் பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும்: கருணாநிதி பாய்ச்சல்!
சூடு சொரணை இருந்தால் பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும்: கருணாநிதி பாய்ச்சல்!
சூடு சொரணை இருந்தால் பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும்: கருணாநிதி பாய்ச்சல்!

சென்னை: எனக்கு பதில் சொல்லாமல் நீதிபதிகள், நாட்டு மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு சூடு சொரணை இருந்தால் பன்னீர்செல்வம் பதில் சொல்லட்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி:- கேரள எல்லையில் கன மழை பெய்த காரணத்தால், முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் கருத்திலே கொண்டு, இந்த நேரத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று நீங்கள் விடுத்த முறையான அறிக்கைக்கு, முதலமைச்சர் பன்னீர்செல்வம், உங்கள் மீது வசைபாடி அறிக்கை விடுத்துள்ளாரே?.

பதில்:- முல்லைப் பெரியாறு பிரச்னையில் பன்னீர்செல்வத்தையோ, அ.தி.மு.க. அரசையோ தற்போது நான் குறை கூறவில்லை. கேரள எல்லையிலே மிகுந்த மழை பொழிவதால், அதனைப் பயன்படுத்திக் கொண்டு உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள் என்று கூறினால், முல்லைப் பெரியாறு பிரச்னையில் நான் துரோகம் செய்து விட்டதாக அறிக்கை விடுகிறார்.

முல்லைப் பெரியாறு பிரச்னை ஆனாலும், வேறு எந்த பிரச்னை ஆனாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் துரோகம் செய்தேன் என்று ஜெயலலிதா அல்ல, பன்னீர்செல்வம் அல்ல, வேறு யார் சொன்னாலும், அதை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இல்லை. எனவே இனியாவது அந்த ஒன்றையே கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிராமல் வேறு ஏதாவது பயனுள்ள கருத்துகளை அறிக்கையிலே தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கேள்வி:- தமிழக சட்டப்பேரவைத் துறைச் செயலாளர், இறுதியாக 8-11-2014 அன்று ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவித்து விட்டாரே?.

பதில்:- ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயலலிதா குற்றவாளி என்று செப்டம்பர் 27 ஆம் தேதியே நீதிமன்றம் தீர்ப்பளித்து சிறைக்கு அனுப்பி விட்டது. அன்றைய தினம் முதல் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பேரவை உறுப்பினர் யாரும் இல்லை. காலியாகத்தான் உள்ளது. ஆனால், நம்முடைய சட்டப்பேரவைச் செயலாளர், ஜெயலலிதா சிறையிலே இருந்த 21 நாட்களுக்கு பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத்திலே ஜாமீன் மனு கோரி, அங்கே விடுவிக்கப்பட்டு, அவர் வீடு திரும்பிய அக்டோபர் 21 ஆம் தேதிக்கு 18 நாட்களுக்கு பிறகு, ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று தேர்தல் கமிஷனுக்கும், பத்திரிகைகளுக்கும் அறிவித்திருக்கிறார்.

கேள்வி:- கிரானைட் முறைகேடு குறித்து மீண்டும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அறிக்கை விடுத்திருக்கிறாரே?.

பதில்:- அதிகாரி சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரணை வேண்டுமென்று நானா கேட்டேன். டிராபிக் ராமசாமி கேட்டார். அந்த விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று உயர் நீதிமன்ற நீதிபதிகளும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உத்தரவிட்டார்கள். அதற்கு பன்னீர்செல்வத்தின் பதில் என்ன என்று கேட்டால் - “உப்பு இருக்கிறதா என்று கேட்டால், பப்பு இருக்கிறது” என்று சொல்லும் மளிகைக் கடைக்காரரைப் போல - நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எனக்கு பதில் கூறிக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க. அரசு, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, நியமித்த சகாயம் விசாரணையிலும் எவ்வளவு தவறுகள் என்பதைப் பற்றி எதிர்க்கட்சிக்காரர்கள் எல்லோரும் கேட்கிறார்கள். அதற்கெல்லாம் பன்னீர்செல்வத்தின் பதில் என்ன?. சகாயம் விசாரணைக்கான அரசாணையில், தமிழகம் முழுவதும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறாமல் மதுரை மாவட்டத்தில் மட்டும் விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் சகாயம் விசாரணை நடத்தினால் மாட்டிக்கொள்வோம் என்பதால்தானே?

தற்போது அதனால்தான் திட்டவட்டமான தீர்ப்பைப் பெறலாம் என்று டிராபிக் ராமசாமி தமிழகம் முழுவதிலும் விசாரணை நடத்த வேண்டுமென்று வேறொரு புதிய வழக்கினைத் தொடுத்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. பன்னீர்செல்வம் எனக்கு பதில் சொல்லிக் கொண்டு காலத்தை கழிக்காமல், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், நாட்டு மக்களும் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல சூடு சொரணை இருந்தால் முயன்று பார்க்கட்டும்" என்று கூறியுள்ளார்.