Published:Updated:

ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!

Vikatan Correspondent
ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!
ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!
ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!

ல்லையில் ஊடுருவல், எல்லை அருகே சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு என அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகள், இந்தியாவும், சீனாவும்  சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளன.

மொழி,கலாச்சாரம்,அறிவியல்,வரலாறு உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் ஒன்றிக் கலந்த உறவைக் கொண்ட நாடுகள் தற்போது போர் அபாயத்தில் இருக்க காரணம் நிறைய இருக்கிறது என்றாலும் அவற்றில் அடிப்படையானது வணிகப் போட்டியே. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இருந்து உப்பு, உணவு, எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் முன் எப்போதைக் காட்டிலும் அண்மைக் காலத்தில் அதிகமே. அதிலும் இந்தியக் கள்ளச் சந்தையில் சீனா  வலுவாகவே காலூன்றியிருக்கிறது.

இதனையும் தாண்டி தற்போது சீனா, இந்தியாவின் கடல் பரப்பையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகிறது என்பதை அந்நாட்டு கடற்படையின் அண்மைக்கால நடவடிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
   
சுமார் 30  வருடங்களுக்கு முன்னர் 1979ம் ஆண்டு வாக்கில், கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் கடல் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள விஞ்ஞானிகள் ஆழ்கடலில் உள்ள நிலப்  படுகையை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

அப்போது மெக்சிகோ கடல் பிராந்தியத்திற்கு அருகே கடல் படுகையில், மூழ்கியிருந்த பெரும் மலைகளையும் அவற்றின் மீது கூம்பான ‘புகைபோக்கி’ அமைப்புகளையும் கண்டனர். அந்தக்  கூம்புகளில் இருந்து சூடான நீர் பாய்ந்து கொண்டிருந்த நிலையில், அந்த பிராந்தியம் முழுவதும் ஏராளமான உலோகத் தாதுக்களால் நிரம்பி இருப்பது தெரியவந்தது.

இந்த பரபரப்பான கண்டுபிடிப்பை அடுத்து உலகெங்கிலும் இந்த கனிமங்கள் குறித்த பெருத்த ஆர்வமும், அவற்றை தோண்டியடுத்து பயன்படுத்த பல்வேறு நாடுகளிடையே பெரும் போட்டியும் உருவானது.

சீனாவின் ராஜதந்திரம்

இதன் பின்னர், பல்வேறு பிரதேசங்களில் உள்ள சர்வதேச கடற்படுகைகளில் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆய்வுகளின் ஒரு அங்கமாக, இந்தியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்படுகையும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சீனா உடனடியாக அவற்றை கைப்பற்றும் நோக்கில் ஒரு நீண்ட கால, பிரந்திய மற்றும் உலகளாவிய ராஜதந்திர திட்டத்தை செயல்படுத்தியத்தின் விளைவாக கிடைத்த பலனையே சீனா இப்போது அறுவடை செய்துகொண்டுள்ளது.

இவ்வாறாக, இந்தியப் பெருங்கடலில் நீண்டகால அடிப்படையில் திட்டமிட்ட ஒருங்கிணைவுடன் செயல்பட்ட சீனா, இந்த கனிமங்களைத் 

ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!

தோண்டியெடுக்க அனுமதியை பெற்று, சர்வதேச கடல் படுகை ஆணையத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த 10,000 சதுர கி.மீ பரப்பளவு பிராந்தியத்தில் கடலுக்கடியில் உரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கனிமங்களைத் தோண்டவும் பயன்படுத்திக்கொள்ளவும் இயலும்.

இது தவிர, முன்னரே குறிப்பிட்ட கடலடி எரிமலைகள் கண்டுபிடிக்கப்பட்ட கிழக்கு பசிபிக் கடலில் சுமார் 75,000 சதுர கி.மீ. பிராந்தியத்திலும் கனிமங்களை எடுக்க சீனாவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, சர்வதேச கடல் படுகை ஆணையத்தின் சட்டப்படியான அனுமதியால், கனிம ஆராய்ச்சி என்ற நோக்கில் இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய கடல் பகுதி முழுவதும் சீனாவின் கடற்படை கப்பல்களின் ஆதிக்கத்திற்குள் மறைமுகமாக வரும் அபாயமும் இதில் அடங்கியுள்ளது.

இந்த பிராந்தியத்தின் கனிமப் படிமங்கள், கடலடி நிலவரங்கள், பொருளாதார ரீதியான, உயிரியல் சார்ந்த மற்றும் கடற்படை மீகாம (Naval Sea-faring) விவரங்கள் யாவும் சீனாவின் கைக்கு கிடைக்கும் நிலையில், இந்தப் பகுதியில் உள்ள இந்திய கடல் பாதுகாப்பு போர்கப்பல்கள், வானூர்திகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் குறித்த அனைத்து தகவல்களும் இனி சீனாவின் நேரடி கண்காணிப்பிற்குள்ளாகும்.

சீனாவின் ‘ஆராய்ச்சி நடவடிக்கைகளால்’ இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள ‘கடற்பாதுகாப்பு சார்ந்த’ பேராபத்தை, இந்திய கடற்படையின் உளவுப் பிரிவு (Directorate of Naval Intelligence-DNI) மத்திய அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்தும் உள்ளதாக தகவல்கள் உள்ளன. ஆக,சீனா நேரடியாகவே இந்தியாவின் கடற்பரப்பில் நுழைந்து கடலடிக் கனிமங்களை வெட்டி எடுத்து பொருட்களைத் தயாரித்து இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் விற்க தயாரகி விட்டது என்பது தெளிவு. இதற்கு என்ன விலையேனும் அந்நாடு தர தயார் என்பதைத்தான் கடற்பரப்பில் சீனக் கப்பல்களின் நடமாட்டம் காட்டுகிறது.

இலங்கை உறவு

இந்நிலையில்தான் இந்தியா,தனது அண்டை நாடான  இலங்கையுடனான உறவு குறித்து ஒரு மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்திய -  இலங்கை உறவுகளில் நடந்த ஏற்றத்தாழ்வான நிலை, மத்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களிடம் இருந்த அசமந்தம் மற்றும் ஒருங்கிணைப்பின்மை, ‘சேது சமுத்திர திட்டம்’ போன்ற ஒரு நாட்டின் கடல் பாதுகாப்பிற்கு உயிர் நாடியான விசயங்களில் இந்தியா சோடை போனது  என்றே சொல்லலாம்.
பத்தாண்டுகளில் சீனா, இலங்கையுடன் நெருங்கி வந்தது ஏன் என்று பார்ப்பது அவசியமாகிறது.இந்தியாவும் இலங்கையின் உள்நாட்டுப் போரில் உதவி செய்தது என்றாலும் சீனாவே அதில் முன்னணியில் இருக்கிறது.

கூர்ந்து நோக்கினால், இந்திய கொள்கை வகுப்பாளர்களும் தமிழக அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட முடியாமல் போன  பல பிரச்னைகளினால், ‘இலங்கைக்கு’ எல்லா வகைகளிலும் உதவிய இந்திய அரசால், சீனா வெகு ‘குறுகிய’ கால அளவில் பெற்ற ‘பொருளாதார’ பயன்களைப்  போல இந்தியா பெற இயலாமல் போனது தெரிய வரும்.

ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!

‘சேது சமுத்திர கால்வாய் திட்டம் ’ நிறைவேற்றுவதில் காட்டிய தாமதமும்,  இந்தியாவின் கடல் ஆராய்ச்சி மற்றும் கப்பல் போக்குவரத்து இந்த பிராந்தியத்தில் வெகுவாக குறைந்து போனது மிகப்பெரும் தவறாகி, இந்தியாவிற்கு நீண்டகால அளவில் பெரும் இழப்பை  ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
எனவே, இந்தியாவின் பிராந்திய ஆதிக்கத்திலும், பொருளாதார மற்றும் தொழில் முன்னேற்றத்திலும் பேரபாயமாக தோன்றியுள்ள  இந்த விசயத்தில் அசட்டையாக இல்லாமல் இந்தியா செயல்பட வேண்டிய அவசியம் தோன்றி உள்ளது.

ராஜபக்சேவின் சீன பாசம்

கடந்த 2009 ஆம் ஆண்டில் ராஜபக்சே, சீன மக்கள் இலங்கையின்  வளர்ச்சியைத் தங்களின் சொந்த வளர்ச்சியாகவே பார்க்கவேண்டும் என்று கூறியதையும்,சீனாவிடம் இருந்து இலங்கை  ராணுவ உதவிகள் பெறுவதைப் பார்த்து இந்தியா ஏன் பயப்பட வேண்டும்? என்று கூறியதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

ஏற்கெனவே எல்லைப் பிரச்னையில்  இந்தியாமீது 1962 அக்டோபர் 20ல் சீனா,  லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையைக்  கடந்து இந்தியா மீது  தாக்குதலை நடத்தியது மறக்க முடியாதது. அதனைத் தொடர்ந்து கடந்த  52 ஆண்டுகளாகவே எல்லைப் பிரச்னைகளில் இந்தியாவுக்கு நெருக்கடி தருவதில்  சீனா பின்வாங்கவில்லை. இந்நிலையில்தான் இலங்கையுடன் சீனா  நெருக்கமாகி உள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சீனா, இலங்கையுடன் கைகோர்ப்பதற்கு  தடையாக இருந்தவர்கள் விடுதலைப்  புலிகள். அதனால், அவர்களை ஒடுக்க சீனா எல்லா உதவிகளையும் செய்தது. விடுதலைப் புலிகள்  வசம் இருக்கும் கடற்பரப்பு பறிக்கப்பட்டால், அந்த இடத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டலாம் என்ற நோக்கில் செயல்பட்டு இன்று அதில் வெற்றி அடைந்துள்ளது.

இலங்கையின் தெற்கே உலகின் மிக `பிசியான `கடல் வழி மீன் பிடிக் கிராமம் அம்பாந்தோட்டையில்  மிகப் பிரம்மாண்டமான துறைமுகக் கட்டுமானப் பணி நடக்கிறது. 100 கோடி அமெரிக்க டாலர் செலவில் இந்தப் பணியை சீனா மேற்கொண்டுஉள்ளது. இந்தத் துறைமுகம் சரக்குப் போக்குவரத்து, கண்டெய்னர் பயன்பாட்டுக்கு, முழுக்க முழுக்க வணிகரீதியான பயன்பாட்டுக்குதான் என்று சீன அரசு  சொன்னாலும், எதிர்காலத்தில் அதைத் தனது கடற்படைத் தளமாக மாற்றும் என்றே தெரிகிறது.

கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும், அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் எடுத்து வரும் தன் நாட்டு டேங்கர் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகவும் இதைக் கட்டி வருவதாக சீனா சொல்கிறது. இதன் அடுத்தகட்டமாக வங்கதேசம், மியான்மர், பாகிஸ்தான் என இந்தியாவைச் சுற்றிலும் உள்ள அண்டை நாடுகள் அனைத்திலும் துறைமுகம் அமைத்துத் தருவதாகக் கூறி, சீனா உள்ளே நுழைய ஆரம்பித்திருக்கிறது.

ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!

இலங்கையில் சீன நீர்மூழ்கி கப்பல்

ஏன் இப்படி சீனா நடந்து கொள்கிறது என்பதைக் கூர்ந்து நோக்கினால், இந்தியாவின் அமெரிக்கப் பாசமே காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிவது.ஆசியப் பிராந்தியத்தில் ஒரு "ஆசிய நேட்டோ"வை உருவாக்க அமெரிக்க விழைகிறது. இதனால் இந்தியாவை அமெரிக்கா அரவணைத்துச் செல்லவே விரும்புகிறது. அமெரிக்கா உலகின் மிகப் பெரிய ராணுவ வல்லரசாக உள்ளது. அதன் ராணுவத் தளங்கள் அமெரிக்க எல்லைக்கப்பால் வெகு தொலைவிற் பலவேறு நாடுகளில் உள்ளன. இந்தியாவிலும் தளங்கள் இருக்கவே அமெரிக்கா விரும்புகிறது.அதனால்தான் கடற்பரப்பில் சீனா காலுன்ற நினைக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்த வியட்நாம் பிரதமர் நௌகூன் டாங்டூன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப்  பேசினார். அப்போது இலங்கைக்கு சீனா நீர்மூழ்கி கப்பலை அனுப்பியுள்ளதாக கூறினார் என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்தான்  சீனா தனது சான்ஷெங்க்-2 என்ற நீர்முழ்கி கப்பலை, இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திக்கொள்ள இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சே  அனுமதியளித்ததும்,  இலங்கையின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்தியாவின் நலனுக்கு எதிரானது எனவும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தவால், இலங்கை பிரதி  பாதுகாப்பு அமைச்சரிடம் கண்டனம் தெரிவித்ததும் நடந்தது.

இதற்கு இலங்கை,  இராணுவ பயன்பாட்டிற்காகத் தான் நீர்முழ்கி கப்பலை நிறுத்த அனுமதித்தோம் எனவும் இது வழக்கமான ஒன்றுதான் எனவும்  கூறியிருக்கிறது. ஆனால், இந்திய அரசு  இலங்கையின் இந்த செயலைக்  கண்டித்துள்ளது. இது 1987 ஆம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் இதனை அனுமதிக்க முடியாது எச்சரித்துள்ளது. இதனையடுத்து சீனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்திய கடல் எல்லைப் பகுதியில், இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!

கடற்படை வீரர்கள் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது குறித்து அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு கடந்த ஜூலை மாதம் இந்தியா அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, கேரள கடலோர பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் இணைந்து விரைவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

சீனாவுக்கு பதிலடி

இந்நிலையில்தான் இந்தியா தனது  கடற்பரப்பு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியிருக்கிறது.அதைத் தொடர்ந்து சீனாவுக்கும் பதிலடி தர தயாராக  உள்ளது என்பதையும் செய்திகள் காட்டுகின்றன. தென் சீனக் கடலில் `ஹைட்ரோகர்பன்`  ஆய்வை மேற்கொள்வதற்கான உரிமைகள் தொடர்பாக இந்திய அரசிற்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமானது, வியட்நாம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது என்ற  செய்திகள் தற்போது கசிந்துள்ளன.

இதற்கு சீனாவின் எதிர்வினை கடுமையாகவே உள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை எதிர்ப்பதாக,  சீன அரசின் வெளியீடான `குளோபல் டைம்ஸ்`  தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"தென் சீனக் கடலில் இந்தியாவானது தனது நடவடிக்கைகளை மேற்கொள்வது சீனாவைச் சீண்டும் நடவடிக்கையாக உள்ளது என்பதை இந்தியா தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். சீன - இந்திய உறவை, சீனா மதிக்கின்றது. ஆனால் சீனா தனக்குச் சொந்தமானவற்றை இழக்கத் தயாராக உள்ளது என்பது இதன் கருத்தல்ல... சீனாவானது தனது எல்லை நாடுகளை அதிகாரப்படுத்துகின்றதா என சில நாடுகள் சந்தேகம் கொண்டபோதிலும், சீனாவானது இது விசயத்தில் நீண்ட காலமாக பொறுமை காத்துள்ளது. இந்த விசயத்தை எவ்வாறு கையாள்வது என்பது உண்மையில் சீனாவிற்குத் தெரியும்" என்று அந்த  இதழில் மேலும் கூறியுள்ளது.

ஆசியாவின் அண்ணனாகத் துடிக்கும் சீனா!ஆகவே சீனா- இந்தியாவிற்கு இடையிலான கடல் சார் மோதல்கள் என்பது காலப்போக்கில் சாத்தியமாகலாம். சாத்தியம் ஆகாமலும் போகலாம்.  இந்தியப் பெருங்கடலில்  குறிப்பாக இந்தியாவின் எல்லையோரங்களில்,  சீனா தனது  திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கிய பின்னரே, தற்போது இந்தியா தென் சீனக் கடலில் தந்து பரீட்சார்த்த ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டன்  ஆய்வாளர், ஹார்ஸ் பாண்ட் , தனது கட்டுரையொன்றில், "தென்சீனக் கடல் முழுவதும் தனக்கே சொந்தம் என்கின்ற சீனாவின் இறையாண்மைக் கொள்கையை இந்தியா மறுக்கின்றது. இந்திய மற்றும் அதன் பிராந்திய நலன்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கின்ற சீனாவின் பிராந்திய அதிகாரநிலையைத் தடுப்பதற்காக இந்தியாவானது ஏனைய பிராந்திய நாடுகளுடன் தற்போது நம்பகமான  உறவைக் கட்டியமைக்க வேண்டும்" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவும் இந்தியாவும் வெவ்வேறு பிராந்தியங்களில் அயல்நாடுகளுடன் கொண்டுள்ள உறவானது சிக்கலானதாகவே  உள்ளது. உலக மக்கள்தொகையில்  மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதும், அணுவாயுதங்களைக் கொண்டதுமான சீனா, இந்தியா ஆகிய இரு நாடுகளும் மோதிக்கொண்டால் அதனால் ஏற்படும்  விளைவானது கணக்கிடமுடியாததாக இருக்கும் என்பதே தற்போது உள்ள நிலை.

ஆசியாவின் அண்ணனாக சீனா மாறுமா...இல்லை சகோதரப் பாசத்துடன் இரு நாடுகளும் இணைந்து செயல்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும்!

- தேவராஜன்