Published:Updated:

நீதிபதி குன்ஹாவை விமர்சித்த அமைச்சர்கள் மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்

Vikatan Correspondent
நீதிபதி குன்ஹாவை விமர்சித்த அமைச்சர்கள் மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்
நீதிபதி குன்ஹாவை விமர்சித்த அமைச்சர்கள் மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்
நீதிபதி குன்ஹாவை விமர்சித்த அமைச்சர்கள் மன்னிப்பு கோர வேண்டும்: ராமதாஸ்

சென்னை: நீதிபதி குன்ஹாவை அவதூறாக விமர்சித்த அமைச்சர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''வருவாய்க்கு மீறி ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி. குன்ஹாவை கடுமையாக விமர்சித்து தீர்மானம் நிறைவேற்றியதற்காக வேலூர் மாநகராட்சி மேயருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, நீதிபதியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்கவும் ஆணையிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை மூலம் சட்டத்தின் மாண்பு நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

அதேநேரத்தில், நீதித்துறையை அவமதித்ததாக உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சிலர் மட்டும் தான் கண்டிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானவர்கள் கண்டிக்கப்படாததுடன், அரசு பதவிகளையும் அனுபவித்து வருகின்றனர்.

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மற்றும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் அச்சிடப்பட்ட சுவரொட்டியில், குன்ஹாவை சட்டம் தெரியாத முட்டாள் நீதிபதி, கன்னட வெறியன் என்று விமர்சிக்கப்பட்டிருக்கிறது. சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பில், ‘‘அம்மாவை விடுதலை செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம்’’ என்று நீதித்துறையை எச்சரிக்கும் வகையிலும், இரு மாநிலங்களுக்கிடையிலான  உறவை சீர்குலைக்கும் வகையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த 46 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 118 சட்டப்பேரவை உறுப்பினர்களும் நீதித்துறையைக் கண்டித்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மாமன்றக் கூட்டத்திலேயே நீதிபதி குன்ஹாவை விமர்சித்தார். அதை எதிர்த்த தி.மு.க.வினர் தாக்கப்பட்டனர்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஒருமுறை சட்டப்பேரவையில் பேசும்போது, நீதிபதிகள் தவறே செய்யாதவர்கள் அல்ல என்று கடுமையாக விமர்சித்தார். அவரது வழியில் செயல்படும் அ.தி.மு.க. அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதேவழியில் நீதிபதிகளை விமர்சிக்கின்றனர். இந்த போக்கை அனுமதித்தால், தமிழ்நாட்டில் தவறு செய்யும் ஆளுங்கட்சியினரை நீதித்துறை தட்டிக்கேட்க முடியாமல் போய்விடும்.

நீதிபதி குன்ஹாவை விமர்சித்த அமைச்சர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டிக்கப்படவில்லை என்ற போதிலும், வேலூர் மேயருக்கு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் இவர்களுக்கும் தார்மீகரீதியில் பொருந்தும். எனவே, நீதிபதி குன்ஹாவை விமர்சித்ததற்காக இவர்கள் தானாக முன்வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்புக் கேட்க மறுத்து நீதிபதிக்கு எதிராக தெரிவித்தக் கருத்துக்களில் உறுதியாக இருந்தால், தாங்கள் வகித்து வரும் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.