Published:Updated:

வீண் வம்பை விலை கொடுத்து வாங்குகிறது கர்நாடகா: கருணாநிதி

Vikatan Correspondent
வீண் வம்பை விலை கொடுத்து வாங்குகிறது கர்நாடகா: கருணாநிதி
வீண் வம்பை விலை கொடுத்து வாங்குகிறது கர்நாடகா: கருணாநிதி
வீண் வம்பை விலை கொடுத்து வாங்குகிறது கர்நாடகா: கருணாநிதி

சென்னை: காவிரியில் அணை கட்டுவதன் மூலம் வீண் வம்பை விலை கொடுத்து வாங்க கர்நாடக அரசு முற்படுகிறது என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக இரண்டு அணைகள் கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது பற்றி கர்நாடக அரசு ஏற்கனவே முயற்சித்து, அதற்குத் தமிழக அரசு, குறிப்பாக தி.மு.க. அரசு தனது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்தது.

இந்த நிலையில் திடீரென்று தற்போது இரண்டு அணைகளைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது என்றும், அதன் மூலம் 48 டி.எம்.சி. நீரைத் தேக்க முடியும் என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்து, அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது.

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கர்நாடக அமைச்சர், 'புதிய அணைகளைக் கட்டுவதற்கு மேகதாது என்ற இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பல கட்ட ஆய்வுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் முடித்துள்ளனர். இந்தக் குடி நீர்த் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை மீறுவதாகவும் கூறி வருகிறது. இதனைச் சட்டப்படி எதிர்கொள்வது என முடிவெடுத்திருக்கிறோம்' என்று கூறியிருப்பது, தமிழகத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னிச்சையாக அவர்களே முடிவெடுத்து, மத்திய அரசு என்று ஒன்று இருப்பதாகக் கூடக் கணக்கில் கொள்ளாமல் அறிவித்திட முன் வந்திருப்பதையே புலப்படுத்துகிறது.

மேலும் அவர், 'தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு குறித்து, கர்நாடக அமைச்சர் டெல்லிக்குச் சென்று காவிரி வழக்கில் கர்நாடகத்துக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் எஸ்.நாரிமனைச் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது நாரிமன், மேகதாது குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவது, சட்டத்துக்கும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் புறம்பானது அல்ல, இத்திட்டத்தை எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு தடுக்க முடியாது. எனவே கர்நாடக அரசு புதிய அணைகளைக் கட்டலாம்' என்று ஒப்புதல் அளித்ததாகவும், அதைத் தொடர்ந்து தான் மேகதாது குடிநீர்த் திட்டத்துக்கான இறுதிப் பணிகளை முடுக்கி விடப்பட்டிருக்கிறது' என்றும் கூறியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது.

கர்நாடக அரசு உத்தேசித்துள்ள இரண்டு அணைகள் கட்டப்படாத நிலையிலேயே, கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு ஆண்டு தோறும் திறந்து விடப்பட வேண்டிய தண்ணீர் முறைப்படி வழங்கப்படாதிருக்கும் நிலையில் தற்போது கர்நாடக அமைச்சர் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டப் போவதாகத் தெரிவித்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

இதற்கிடையில் கர்நாடக அமைச்சர் கூறும்போது, 'இந்தத் திட்டம் தொடர்பாக இறுதிக் கட்ட திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் பிறகு அணைகள் கட்டுவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும்' என்றும் தெரிவித்திருக்கிறார்.

எனவே, மத்திய அரசின் ஒப்புதலும், காவிரி நடுவர் மன்றத்தின் ஒப்புதலும் இன்றி கர்நாடகம் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது, நிறைவேற்றக் கூடாது என்பதைத் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.

கர்நாடக அமைச்சர் காவிரிப் பிரச்னையில் தொடர்புடைய அனைவரையும் கலந்தாலோசிக்காமல், இவ்வாறு தன்னிச்சையாக அறிவித்திருப்பது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மீறுகின்ற செயலாகும்.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகினால் நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் அந்த அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இப்படி வீண் வம்பை விலை கொடுத்து வாங்க முற்பட்டுள்ள கர்நாடக அரசுக்கும், அந்த அமைச்சருக்கும் தமிழக அரசின் சார்பில் உடனடியாகத் தக்கப் பதிலடி கொடுக்கத் தமிழக அரசு முன் வர வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர், ரெங்கநாதன், கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு குறித்துக் கூறுகையில், 'இது போன்ற நீர்மின் திட்டத்தை மத்திய அரசு தான் நிறைவேற்ற வேண்டும்' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர், காவிரி தனபாலன், 'இரண்டு மாநிலங்களிலும் உள்ள எந்த அரசும் தன்னிச்சையாகக் காவிரி நீரை வேறு பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்வதை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை செய்துள்ளது. குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் கர்நாடக அரசு தற்போது நிறைவேற்றத் துடிக்கும் திட்டம் பாசனத்துக்கு நீரைக் கொண்டு செல்வதற்கான திட்டமாகும். தமிழக விவசாயிகள் இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள்' என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

வரும் நவம்பர் 25ஆம் தேதியன்று ஓசூர் நகரில், விவசாயிகள் ஒன்று கூடி மாபெரும் கவன ஈர்ப்புப் பேரணி ஒன்றை கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக நடத்திடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இந்த முக்கியமான உயிர்ப் பிரச்னை குறித்து, தமிழக அரசு அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அனைவரின் கருத்துக்களை அறிந்து, உச்ச நீதிமன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும் சட்டப்படி உரிய தீர்வுக்காக முறையிடுவதோடு; தமிழகச் சட்டப் பேரவையினை உடனடியாகக் கூட்டி, அதிலே அவசரத் தீர்மானம் ஒன்றையும் கர்நாடக அரசையும், அந்த அமைச்சரின் அறிவிப்பினையும் எதிர்த்து நிறைவேற்ற வேண்டுமென்று தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்துகிறேன்'' எனக் கூறியுள்ளார்.