Published:Updated:

தமிழ்வழி கல்வியை அ.தி.மு.க. அரசு ஊக்கப்படுத்தவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு!

தமிழ்வழி கல்வியை அ.தி.மு.க. அரசு ஊக்கப்படுத்தவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு!
தமிழ்வழி கல்வியை அ.தி.மு.க. அரசு ஊக்கப்படுத்தவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு!

தமிழ்வழி கல்வியை அ.தி.மு.க. அரசு ஊக்கப்படுத்தவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு!

தமிழ்வழி கல்வியை அ.தி.மு.க. அரசு ஊக்கப்படுத்தவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு!

சென்னை: தமிழ்வழி கல்வியை அ.தி.மு.க. அரசு ஊக்கப்படுத்தவில்லை என்று கருணாநிதி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளில் ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணியாமல், தத்தமது தாய்மொழியிலேயே கல்வியை வழங்கி வருகிறார்கள். தாய்மொழியிலேயே மேற்படிப்பினைத் தொடரும்போது, அவர்களால் படிப்பதை நன்றாகப் புரிந்துகொண்டு வேகமாக முன்னேற முடிகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்கள் மருத்துவ நூல்களை இனிமேல் ஆங்கிலத்திலே படிக்கத்தேவையில்லை; அந்த நூல்களை பஞ்சாபி மொழியிலே மொழி மாற்றம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது. தாய்மொழியிலே படித்தால் மாணவர்களுக்குப் புரிந்து கொள்ளும் திறன் அதிகமாகி அறிவு தொடர்ந்து கூர்மையாகும் என்பதைப் பஞ்சாப் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

பஞ்சாப் மாநில அரசு எடுத்துள்ள முடிவு தமிழகத்திலேயும் எடுக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசு பொறுப்பிலே இருந்தபோது இப்படிப்பட்ட முடிவு வர வேண்டும் என்பதற்காகத்தான், அதற்கு முதற்கட்டமாக, தி.மு.க. ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் கட்டுமானவியல், எந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தாய்மொழியில் கற்க, தமிழ்மொழி மூலமாக கற்க வகை செய்து ஆணையிட்டு அந்த ஆண்டிலேயே 1,378 மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்துள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்குப் பிறகு தமிழ் வழிக்கல்வியில் பொறியியல் கல்லூரியில் படிக்க மாணவர்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கப்படவில்லை. தி.மு.க. 5வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும், 31-5-2006 அன்று தமிழ் மொழிக்கல்வி 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை கட்டாயம் என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தப்பட்டது.

1970 ஆம் ஆண்டிலேயே நவம்பர் திங்களில் தி.மு.க. அமைச்சரவை கூடி ஒரு முடிவெடுத்தது. அதுதான், தமிழைப் பயிற்று மொழியாக எடுத்துப் படித்தவர்களுக்கே, தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட அரசின் வேலை வாய்ப்புகளில் முதல் இடம். அதில் மிச்சமிருந்தால் தான் ஆங்கிலத்தின் வழி படித்தவர்களுக்கு இடம். அதே நேரத்தில் சிறுபான்மை மக்களின் நலனும் பாதிக்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த வழியிலேதான் பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மருத்துவப்படிப்பையே தாய்மொழியில் படிக்கலாம் என்ற முடிவினை அரசு அறிவித்துள்ளது. “மாணவனின் தாய்மொழியே மிகச்சிறந்த பலன் அளிக்கக்கூடிய பயிற்று மொழி என்பதிலே உறுதியான எண்ணம் உடையவர்களில் நானும் ஒருவன்” என்று நேருவும் குறிப்பிட்டுள்ளார். நேருவின் 125வது ஆண்டு பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் இந்த வேளையிலாவது நேருவின் கருத்தை ஆழச் சிந்தித்துப் பார்த்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.

தற்போது ஆங்கில கல்விக்கூடங்கள் பெருகி விட்டன. தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. உலக நாடுகளில் ஆங்கிலத்தின் பயன்பாடு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. எனினும், ஆங்கில மொழி அறிவும் வேண்டும் என்ற கருத்துக்கு நான் என்றைக்கும் மாறுபட்டவன் அல்லன். அதேநேரத்தில் தமிழ் வழிக்கல்விக்கு எதிரான எந்த கருத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.

தாய் மொழிக்கல்வி என்பதைப் போலவே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் என்பதும் நம்முடைய உயிர்க்கொள்கைகளிலே ஒன்று தான். பேராசிரியர் அ.ராமசாமியின் நூல் வெளியீட்டு விழாவில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் நான் உரையாற்றும் போதே, “இந்தியாவிலே இருக்கின்ற மாநில ஆட்சி மொழிகள் அனைத்தையும், இந்திய ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும், மலையாள மொழியாகட்டும்; தெலுங்கு மொழியாகட்டும்; பஞ்சாபி மொழியாகட்டும், எல்லா மொழிகளும் ஆகட்டும், அவ்வளவு மொழிகளும் ஆவதற்கு இயலுமா, பல சிக்கல்கள் வருமே என்றெல்லாம் யாராவது வாதிப்பார்களேயானால், அவர்களுக்குச் சொல்கிறேன்;

அவைகள் எல்லாம் ஆவதற்கு இன்னும் பருவம் அடையாமல் இருந்தால், பருவம் அடைந்த மொழி, திருமணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற மொழி தமிழ் மொழி. மற்றவைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் எல்லா வளமும் நிறைந்த இலக்கண, இலக்கியப் பொருத்தமும் வாய்ந்த தமிழை ஆட்சி மொழி ஆக்குங்கள். மற்ற மொழிகளை ஆக்கக்கூடாது என்பது நம்முடைய வாதம் அல்ல.

எந்தெந்த மொழிகள் மாநில ஆட்சி மொழிகளாக இருக்கின்றனவோ, அந்த மொழிகள் எல்லாவற்றையும் இந்தியாவின் பொது ஆட்சி மொழிகளாக ஆக்குங்கள். அப்போதுதான் இந்தியாவின் ஒற்றுமை ஏதோ கட்டி வைக்கப்பட்ட பொட்டலம் என்று இல்லாமல், அது உறுதிமிக்க ஒன்றாக இருக்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறேன். அதே அடிப்படையில், ஒவ்வொரு தேர்தலின்போதும் வெளியிடப்படும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் “தமிழ் ஆட்சி மொழி” எனும் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

குதிரையை வண்டிக்குப் பின்பக்கம் பூட்டுவதைப் போல, தமிழ் வழிக் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லாமல், அரசு ஆரம்பப் பள்ளிகளிலும்கூட ஆங்கில வழிக்கல்வியைப் புகுத்தத் துணிந்திருக்கும் அ.தி.மு.க. அரசு தமிழ் வழிக்கல்வியை ஆதரித்து ஊக்கப்படுத்தப் போவதில்லை. இத்தகைய எதிர்மறை நடவடிக்கைகளை இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தமிழக மக்கள் மவுன சாட்சிகளாகப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு