Published:Updated:

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...
கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

'து கொஞ்சம் பெரிய கட்டுரை. ஆனால், பெரிய பிரச்னையைப் பற்றி பேசும் கட்டுரை'. ஆம், நம்முடைய ஜீவாதார பிரச்னைகளில் ஒன்றைப் பற்றிப் பேசும் கட்டுரை. முழுமையாக படியுங்கள்.
'கத்தி' படத்தில் விவசாயிகளின் தண்ணீரைத் திருடும் பன்னாட்டுக் கம்பெனிகளின் சதியைப் படம் பிடித்திருப்பார்கள். நிஜத்திலும் இதேவேலையைச் செய்து கொண்டிருக்கிறது அரசு எந்திரம். ஆம், தொழிற்சாலைகளுக்கு தண்ணீரைத் தாரை வார்த்துக் கொடுப்பதற்காக ‘சென்னை மாநகர குடிநீர்த் தேவை’ என்கிற பெயரில், விவசாயிகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
 

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

மக்களின் முதல்வர்?

"விவசாயிகளின் வீழ்ச்சியில், வளர்ச்சியைக் காண நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்..."

சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின்போது ஊர்ஊராகப் போய் மைக் பிடித்து இப்படி முழங்கினார் அன்றைய தமிழக முதல்வர்... இன்றைய ‘மக்களின் முதல்வர்’ ஜெ.ஜெயலலிதா!

"மத்திய அரசு நிறுவனங்கள் முன்னெடுத்திருக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் போன்றவை எல்லாம் விவசாய நிலங்களை கபளீகரம் செய்துவிடும். சம்பந்தபட்ட பகுதிகள் எல்லாம் சுடுகாடாகிவிடும்" என்று மேற்கு மாவட்ட விவசாயிகளும், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளும் கதறியதை அடுத்துத்தான், இப்படி தன் பிரசாரத்தில் சீற்றம் காண்பித்தார் ஜெயலலிதா.

இப்போது தேர்தல் எல்லாம் முடிந்து, நினைத்தபடியே தமிழகத்தின் 37 தொகுதிகளை கொத்தாக அள்ளிக் கொண்டுவிட்ட நிலையில், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை சுலபமாக தானே கையில் எடுத்துவிட்டது... ஜெயலலிதாவின் ஆசியோடு நடந்து கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு. மு.க.ஸ்டாலின் பாணியில் சொல்வதென்றால், பினாமி ஆட்சி.

'சென்னையின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்த்தேக்கம் அமைக்கிறோம்’ என்கிற பெயரால் பச்சைப் பசேல் என்று விளைந்து நின்ற நெல் வயல்களில், புல்டோசர் மற்றும் பொக்லைன் எந்திரங்களை ஈவு, இரக்கமில்லாமல் இறக்கிவிட்டு அழித்தொழித்திருக்கிறது அரக்க மனம் படைத்த அரசாங்க எந்திரம்! ‘கத்தி’ படத்தில் வருவது போல விவசாயிகள் தற்கொலை போராட்டத்தில் குதிக்கவே, சற்றே தன் அரக்க குணத்தை அடக்கி வைத்துக் கொண்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்திருக்கிறது அரசு எந்திரம்!
 

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

அழிக்கப்பட்ட பயிர்கள்!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணண்கோட்டை கிராமத்தில், நவம்பர் 8 அன்று காலையில் அரங்கேற்றப்பட்டது இந்தக் கொடுமை. இன்று அங்கே போய் பார்த்தால்... அந்த நிலங்கள் அனைத்தும் போர் ஓய்ந்த களம்போல் காட்சியளிக்கின்றன. வறட்சியில்கூட விவசாயிகள் சோர்ந்து போவதில்லை, இழப்பில்தான் சோர்ந்து போகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உயிர் உதாரணம்.

‘ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, சென்னையின் குடிநீருக்காகத் திறந்து விடப்படும் கிருஷ்ணா நதிநீரை உபரியாக சேமிக்க, 330 கோடி ரூபாயில், 1485 ஏக்கர் பரப்பளவில் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்படும்’ என்று 2012ஆம் ஆண்டில் அறிவித்தார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதில், 800 ஏக்கர் பட்டா நிலம். இந்த பட்டா நிலங்களை வளைத்து நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முயன்றபோதுதான்... இந்தக் கோரத்தாண்டவம் ஆடி இருக்கிறது, பொதுப்பணித்துறை.

பணமே வாங்கல!

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

சோர்வுற்ற நிலையில் இருக்கும் கண்ணன்கோட்டை கிராம விவசாயி கோவிந்தசாமியிடம் பேசியபோது, "எனக்கு 4 ஏக்கர் நிலமிருக்கு. இந்தப் பகுதியில நீர்த்தேக்கம் கட்டப்போறதா அறிவிச்ச மறுநாளே, விவசாயிகளெல்லாம் சேர்ந்து திருவள்ளூர் கலெக்டரைப் போய்ப் பார்த்தோம். ‘இன்னும் எனக்கு முறையா எந்த அறிவிப்பும் வரல. வந்தபிறகு பாத்துக்கலாம்’னு சொல்லி அனுப்பிட்டாரு. பிறகு, நீர்த்தேக்கம் பத்தி செய்திகள் வர ஆரம்பிக்கவும், கலெக்டர் ஆபீஸ் முன்ன போராட்டம் நடத்தினோம். ‘எங்க வாழ்வாதாரமே இந்த நிலங்கள்தான். இதை அழிக்கக்கூடாது. மாற்று இடத்தில் செயல்படுத்துங்கள்’னு கோரிக்கை வெச்சோம். ‘கொஞ்ச நிலம்தான் எடுப்போம். மொத்த நிலமும் எடுக்கமாட்டோம்’னு வருவாய் துறை அதிகாரிகள் சொன்னாங்க. அந்த நேரத்துல நாடாளுமன்றத்துல, ‘விவசாயிகளோட அனுமதி இல்லாம இடத்தை கையகப்படுத்தக் கூடாது’னு சட்டம் கொண்டு வந்தாங்க. அதனால, நாங்களும் நம்பிக்கையா இருந்துட்டோம். ஆனா, ஏற்கெனவே இருந்த பழைய சட்டம் மூலமாவே நிலத்தை கையகப்படுத்தறதுக்காக வருவாய்த் துறையிலிருந்து நோட்டீஸ் அனுப்பினாங்க. நாங்க அதை வாங்கல.
 

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

இதுக்கப்புறம் 2013ஆம் வருஷம் சென்னை உயர் நீதிமன்றத்துல, ‘நிலத்தை கையகப்படுத்தக் கூடாது’னு விவசாயிகள் சார்புல பொதுநல வழக்கு தாக்கல் செய்தோம். 3 மாசம் கழிச்சு ‘ஒவ்வொருத்தரும் தனித்தனியா வழக்கு போட்டுக்கங்க’னு சொல்லிட்டாங்க. இந்த வருஷம் ஜனவரி மாசம், தனித்தனியாக 47 பட்டாதாரர்கள் மட்டும் வழக்கு தொடுத்தோம். மொத்தம் இந்த 800 ஏக்கர்ல 571 பட்டாதாரர்கள் (கவனியுங்கள் மக்களே... 800 ஏக்கருக்கு 571 சொந்தக்காரர்கள். ஆக, இவர்களில் சிலர் மட்டுமே ஒரு ஏக்கருக்கும் அதிகமாக வைத்திருப்பவர்கள். மற்ற அனைவருமே அரை ஏக்கர், கால் ஏக்கர் என்று வைத்திருக்கும் பரிதாப ஜீவன்களே!) இருக்காங்க. ஊரைவிட்டு வெளியூர்ல செட்டில் ஆகிட்ட பட்டாதாரர்கள், நிலத்தை சும்மா வாங்கிப் போட்டு வெச்சுருந்தவங்க எல்லாம், அரசாங்கம் கொடுக்கிற தொகையை வாங்கிக்க சம்மதிச்சுட்டாங்க. ஆனா, கோர்ட்டுக்கு செலவழிக்க பணம் இல்லாத விவசாயிகள் என்ன செய்றதுனே தெரியாம அப்படியே விட்டுட்டாங்க. இந்த விவசாயிகள் யாரும் அரசாங்கத்துகிட்ட இருந்து பணம் வாங்கல. ஆனா, இந்த விவசாயிகளுக்கு பணம் கொடுத்துட்டதா கோர்ட்டுல பொய்யா சொல்லிட்டாங்க அதிகாரிங்க.

47 பட்டாதாரர்கள், நவம்பர் மாசம் 5ம் தேதி தொடுத்த வழக்குல, ‘இது மக்களுக்கான குடிநீர் திட்டம். அதனால, தடுத்து நிறுத்த முடியாது’னு தீர்ப்பு வந்துடுச்சு. அடுத்த மூணாவது நாளே புல்டோசர், பொக்லைன், கிரேன்னு கொண்டு வந்து விளைஞ்சி கெடக்கிற பயிரை எல்லாம் அழிக்க ஆரம்பிச்சுட்டாங்க. எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்கல. பாக்க பாக்க வயிறெல்லாம் பத்திக்கிட்டு எரியுது. ஒரு ஏக்கர் பயிருக்கு சராசரியா 70 ஆயிரம் ரூபாய் வரை இப்போ நஷ்டம்’’ என்று ஆவேசப்பட்டார், கோவிந்தசாமி.

பத்திரிகை, டி.வி.க்கு போகவிடாம செய்துட்டாங்க!

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

"இந்த விவகாரம் ஆரம்பிச்சப்பவே... ‘மூணு போகம் விளையக்கூடிய நிலத்தை அழிக்காதீங்க. அப்படியே எடுத்துதான் ஆகணும்னா, இதேமாதிரி வேற நிலத்தை நாங்க வாங்குற அளவுக்காவது பணம் கொடுங்க’னு அரசு முதன்மைச் செயலாளர், முதல்வர் தனிப் பிரிவுனு எல்லாருக்கும் மனு மேல மனு அனுப்பினோம். முதல்வரா இருந்த ஜெயலலிதாவை சந்திக்கவும் முயற்சி செய்தோம். எதுவுமே முடியல. அதேசமயம், ‘பேப்பர்காரங்களுக்கு விஷயம் தெரிஞ்சா... வேறமாதிரி ஆயிடும். முதல்வர் கோபத்துக்கு ஆளாயிடுவீங்க. அதுக்குப் பிறகு உங்க நிலத்துக்கான பணம்கூட கிடைக்காது’னு அதிகாரிங்க எங்கள மிரட்டினாங்க. அதனால, அரசாங்கம் நல்லது செய்யும்னு நம்பி, பேப்பர், டி.வினு யாரையும் கூப்பிடல. நம்பி மோசம் போயிட்டோம்கிறது இப்பத்தான் தெரியுது. எங்களுக்கு சோறு போட்டுட்டு இருந்த பூமி, எங்க கண்முன்னயே காணாம போறதா பாத்தா... பச்சத் தண்ணிகூட வயித்துல இறங்க மாட்டேங்குது. அப்பவே பத்திரிகை, டி.வினு வெளி உலகுக்கு தெரியப்படுத்தியிருந்தா, இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்க மாட்டோம்’’ என்று ஆதங்கப்படுகிறார், அதே ஊரைச் சேர்ந்த விவசாயி ராதன்.
 

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

தற்கொலை முயற்சிகள்!

எந்திரங்களைக் கொண்டு பச்சை வயலை அழித்தபோது, ஒரு விவசாயி தன் கழுத்தில் கிடந்த துண்டைக் கொண்டு கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பாளையத்தான் என்ற விவசாயி, தீக்குளிக்கும் முயற்சியில் குதித்தார். இந்த இரு நிகழ்வுகளும் ஒட்டமொத்த விவசாயிகளையும் மேலும் கொந்தளிக்க வைத்தது. இதையடுத்துதான், அதிகாரிகள் கொஞ்சம் பயந்து பின் வாங்கினார்கள். ‘‘ஏரியிலிருந்து எப்பவுமே மதகு வழியா தண்ணி வந்துட்டே இருக்கும். கை விதைப்பு போட்டுதான் பயிர் செய்றோம். பச்சக் குழந்தையை வளக்கிற மாதிரி வளர்த்துட்டு வந்தேன். கடன் வாங்கித்தான் பயிர் வெச்சேன். ராட்சச வண்டிகள நிலத்துல ஓட்டுனப்போ, பயிர்களெல்லாம் மண்ணோட மண்ணா அமுங்கி போச்சு. மெஷின வெச்சு நிலத்தை கீறினப்போ என்னைக் கீறுன மாதிரியே மனசெல்லாம் வலிச்சுச்சு. நாங்கெல்லாம் படிக்காத மண்ணுங்கய்யா. அதனாலதான் இந்த மண்ணு மேல இவ்ளோ உசுர வெச்சிருக்கோம். அதனாலதான் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்க முயற்சி பண்ணினேன். அதிகாரிகளெல்லாம் என்னென்னமோ கண்டிஷன் பேசுறாங்க. எங்களுக்கு எந்த எழவும் புரியலைங்க. இப்படியே விவசாய நிலங்களையெல்லாம் அழிச்சுட்டு, நாளைக்கு இவங்கெல்லாம் சோத்துக்கு பதிலா மண்ண சாப்பிடும்போது தெரியுமய்யா... விவசாயத்தோட அருமை’’ என்று சாபம்விட்டார் பாளையத்தான்.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு!

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் துளசி நாராயணன், ‘‘நிலம் கையகப்படுத்துறது தொடர்பா 2013ம் வருஷத்துல மத்திய அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்துச்சு. ‘அரசோ, தனியார் அமைப்புகளோ விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது 70 சதவிகித விவசாயிகளோட அனுமதி இல்லாம நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. கிராமம்னா சந்தை விலையைவிட 4 மடங்கும், நகரம்னா சந்தை விலையைவிட 2 மடங்கும் கூடுதலாக விலை நிர்ணயிக்கணும் னு சொல்லுது இந்த சட்டத் திருத்தம். ‘சட்டத்திருத்தம் அமலுக்கு வந்த தினத்துக்கு முந்தின அஞ்சு வருஷம் வரையிலும் கையகப்படுத்தின நிலங்களுக்கும் இந்த அடிப்படையில இழப்பீடு கொடுக்கணும்’னு அந்த சட்டத்துலயே சொல்லப்பட்டிருக்கு. ஆனா, இந்த சட்டத்திருத்தம் வந்த நாலு மாசம் கழிச்சுதான், விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்புறாங்க, புது சட்டத்தை துளிகூட கண்டுக்காம, பழைய சட்டப்படிதான் அந்த நோட்டீஸ் வந்திருக்கு. மத்திய அரசாங்கத்தோட புது சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது மாநிலங்களோட கடமை. இதன்படி பார்த்தா, சட்டத்துக்கு விரோதமாத்தான் எங்க விவசாயிகளோட நிலங்களை கையகப்படுத்துறாங்க’’ என்று வெடித்த துளசி நாராயணன்,

"பெத்தபுள்ளையை கண்ணு முன்னயே லாரியை ஏத்திக் கொல்றத வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்ன கதையாத்தான் ஆகிப்போச்சு அன்னிக்கு. இதுமாதிரி சம்பவம் உலத்தில் வேறெங்கும் நடந்திருக்காது’’ என்று கண்ணீர் துடைத்தார்.
 

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

தொழிற்சாலைகளுக்குத்தான் தண்ணீர்!

மேலும் தொடர்ந்தவர், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளை ஒழுங்கா தூர்வாரி பராமரிச்சாலே, அந்த ஏரிகள்ல கிருஷ்ணா நதி உபரி நீரை எளிதா சேமிக்கலாம். இதேபோல இந்தப் பகுதியில இருக்கிற எல்லா ஏரிகளையும் தூர்வாரி பராமரிச்சா கூடுதல் தண்ணிகூட கிடைக்கும். அதையெல்லாம்விட்டுட்டு, 1 டிஎம்.சி தண்ணீரை சேமிக்க இந்த விவசாயிகளை பாடாபடுத்திட்டு இருக்காங்க. இங்கிருக்கிற தண்ணிய சென்னை மாநகர குடிநீருக்காக கொண்டு போறதா சொல்றதும் பொய். பக்கத்திலிருக்கிற சிப்காட் தொழிற்சாலைக்காகத்தான் இத்தனை அக்கறையா நீர்த்தேக்கத்தைக் கொண்டு வர்றாங்க. கம்பெனிகளுக்கு தண்ணி கொடுக்கிறதுக்காக வரிஞ்சி கட்டிக்கிட்டு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வேலை செய்றாங்க. விவசாயிகள் ஆரம்பத்துலயே நடவடிக்கை எடுத்திருந்தா, இந்த திட்டத்தை முடக்கியிருக்கலாம். தலைக்கு மேல வெள்ளம் போன பிறகுதான் வெளியில சொல்றாங்க. இருந்தாலும் விவசாயிகளுக்கான நியாயத்தை பெறாம விடமாட்டோம்’’ என்றார் குரலில் உறுதியைக் கூட்டிக் கொண்டவராக.

இதற்கிடையே, ‘கண்ணன்கோட்டை விவசாயிகள் தங்களின் நிலத்தை அரசாங்கத்திடம் தந்துவிட்டு பணத்தை வாங்கிவிட்டனர். திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்ததால், அந்த நிலத்தில் பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அது அரசாங்கத்தின் கைகளுக்கு வந்துவிட்ட நிலம் என்பதால்தான் திட்டப்பணிகளைத் துவக்குவதற்காக எந்திரங்களைக் கொண்டு பயிர்களை அழித்தார்கள். விவசாயிகள் வேண்டுமென்றே தற்கொலை முயற்சி என்றெல்லாம் இறங்கி விஷயத்தை பரபரப்பாக்கிவிட்டனர்’ என்றொரு செய்தி திட்டமிட்டே பரப்பப்பட்டிருக்கிறது. இந்த விவசாயிகள் யாரும் பணத்தை வாங்கவில்லை என்பதோடு, சட்டப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் பதிலே இதற்கு சாட்சி!
 

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

அந்த நிலம் அனைத்துமே அரசாங்கத்துக்கு சொந்தம்!

‘‘இந்த பகுதியில்தான் புறம்போக்கு நிலங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால்தான் அவற்றுடன் சேர்த்து விளைநிலங்களையும் கையகப்படுத்துகிறோம். வேறொரு இடத்தில் இந்தத் திட்டத்ததைச் செயல்படுத்தியிருந்தால் இதைவிட கூடுதலாக விவசாய நிலங்கள் தேவைப்பட்டிருக்கும். 31.12.2013 வரை மாநில அரசு கொடுத்த அரசாணையின்படிதான் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரைக்கும் 290 விவசாயிகளுக்கு 40 கோடி ரூபாய் பணம் கொடுத்துவிட்டோம். ஆனால், கண்ணன்கோட்டை கிராம விவசாயிகள் யாரும் பணத்தை வாங்கவில்லை.

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

என்றாலும், சட்ட விதிகளுக்குட்பட்டு, அவர்களுடைய பணத்தை நீதிமன்றம் மூலமாக வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. பட்டாவைக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். விவசாயிகளுக்கு 12வது நோட்டீஸ் கொடுத்தாலே, நிலத்தை அரசாங்கத்துக்கு அவர்களாகவே கொடுத்தது போலத்தான் அர்த்தம். அந்த நோட்டீஸிலேயே எல்லா விவரங்களும் அடங்கியிருக்கும். ஆனால், விவசாயிகள் அதையும் வாங்கிக் கொள்ளவில்லை. என்றாலும், சட்டப்படி அது அரசாங்கத்துக்கு சொந்தமான நிலமாக மாறிவிட்டது. அந்த நிலத்தில் பயிர் செய்துவிட்டு, பயிர் இழப்பு என்று சொல்வது தவறு. என்றாலும், தற்போதிருக்கும் பயிர்களை அறுவடை செய்தபிறகு பணிகளைத் தொடங்கலாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளோம்’’ என்கிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.

அவரிடம், ‘‘மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சட்டத்திருத்தத்தின்படி நிலத்தை கையகப்படுத்தாமல் பழைய சட்டத்தின்படி எதற்காக கையகப்படுத்தினீர்கள்?’’ என்று கேட்டோம்.

"மாநில அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் நான் செய்திருக்கிறேன். மற்றதையெல்லாம் நீங்கள் மாநில அரசாங்கத்திடம்தான் கேட்க வேண்டும்’’ என்று ஒதுங்கிக் கொண்டார்.
 

கண்ணன்கோட்டையில் 'கத்தி' வேலை...

இத்தோடு விடப்போவதில்லை!

விவசாயிகளின் வழக்கறிஞர் ஜோதிராமனிடம் பேசியபோது, "பழையசட்டத்தின்படி நிலம் கையகப்படுத்துவதை நீதிபதிகளும் கேள்வி எழுப்பினார்கள். என்றாலும், மக்களுக்கான திட்டம் என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர். இதை இத்தோடு விடப்போவதில்லை. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். நிச்சயமாக நீதி வெல்லும்’’ என்று சொன்னார்.

நீதி வெல்லட்டும்!

த. ஜெயகுமார்

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

அடுத்த கட்டுரைக்கு