Published:Updated:

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?
##~##

கழுகார் அலுவலகத்துக்குள் நுழையும்போது, தமிழக உளவுத் துறையில் அதிரடி மாற்றம் குறித்த செய்தி ஃப்ளாஷ் ஓடியது. ''மூன்று நாட்களாக எதிர்பார்க்கப்​பட்டது, இப்போதுதான் நடக்கிறது. இதுபற்றிய தகவல்களை கடைசியாகச் சொல்கிறேன். முதலில் மற்ற செய்திகள்'' என்ற வாக்குறுதியுடன் ஆரம்பித்தார் கழுகார்.

 ''பிரதமர் மன்மோகன் சிங்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்!''

''ஒன்றாகவா?''

''இல்லை. தனித்தனியாக! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்​பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பாய்லர் தொழிற்சாலையை பிரதமர் மன்மோகன் சிங் 2-ம் தேதி திறந்துவைக்கிறார். இதற்காக, தனி விமானத்தில் அன்று காலை 11.10 மணிக்கு திருச்சி வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஓலைக்குடிப்​பட்டிக்கு 11.40 மணிக்கு வருகிறார். அவரை மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கிறார்கள். அங்கிருந்து பேட்டரி கார் மூலம் 11.50 மணிக்கு விழா மேடைக்குச் செல்கிறார். பாய்லர் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்துப் பேசுகிறார். பிரதமர் விழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. புதுக் கோட்டையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் முகாம்கள் தீவிரமாக கண்காணிக்கப்​படு கின்றன. பிரதமரை எதிர்த்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திவிடாத வகையில் கண்காணிப்பு, ரோந்து நடவடிக்கை​கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.''

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?

''பிரதமர் வரும்போது முதல்வர் வரவேற்​பாரா என்பது பற்றி சில இதழ்களுக்கு முன்பே சந்தேகம் கிளப்பி இருந்தீரே?''

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?

''ம்! பிரதமர் சென்னை வரவில்லை. முதல்வர் கொடநாடு பங்களாவில் இருக்கிறார். 'சென்னை விமான நிலையத்துக்கு பிரதமர் வந்து இறங்கினாலும் முதல்வர் வரவேற்கப் போக மாட்டார்’ என்று சிலர் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். 'பிரதமரை வரவேற்கப் போக வேண்டும் என்ற விதி முறை எல்லாம் கிடையாது. முதல்வர் என்ன டவாலியா? எல்லாரையும் வரவேற்று அழைத்து வருவதற்கு?’ என்ற அர்த்தத்தில் கொந்தளித்தாராம். 'கருணாநிதி முதல்வராக இருக்கும்போது தேவையில்லாமல் எல்லாரும் போய் சால்வையுடன் நிற்க வேண்டும் என்று சம்பிரதாயத்தை உருவாக்கிவிட்டார். மற்ற மாநில முதல்வர்களில் பலரும் இந்தச் சடங்கில் ஈடுபடுவது இல்லை’ என்றும் சொல்கிறார்கள். 'இதுவரை முதல்வர் எழுதிய எந்தக் கடிதத்துக்கும் ஒழுங்கான பதிலை பிரதமர் அளித்தது இல்லை. அதனால் இருவருக்கும் லடாய் என்கிறார்கள்!''

''பிரணாப் வருவது எதற்காம்?''

''ஆகஸ்ட் 7-ம் தேதி  பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். கலாஷேத்ரா மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விழாவில் கலந்துகொள்கிறார். முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் உள்ளதால் இவரை வரவேற்க மூத்த அமைச்சர்களை அனுப்பிவைப்பார் என்று தெரிகிறது.''

''கொடநாட்டில் இருந்து சென்னை வரும் திட்டம் இப்போதைக்கு இல்லையா?''

''திடீர் வருகை அடுத்த வாரத்தில் இருக்கலாம்!''

''தயாளு அம்மாளை பரிசோதனைசெய்ய டெல்லி மருத்துவர்கள் வந்தார்களே?''

''உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி தயாளு அம்மாள் உடல் நிலையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு கடந்த 27-ம் தேதி பரிசோதித்தது. 200 கோடி ரூபாய் பணம் கலைஞர் டி.வி-க்கு கைமாறியது பற்றிய விவகாரத்தில் தயாளு ஒரு சாட்சி. கலைஞர் டி.வி-யின் 60 சதவிகித பங்குகளை இவர் வைத்துள்ளதால் 142-வது சாட்சியாக சி.பி.ஐ. இவரைச் சேர்த்தது. ஆனால், சாட்சி சொல்லும் உடல்நிலையில் தயாளு இல்லை என்றார்கள். இது உண்மையா என்பதை பரிசோதிக்க எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது. கடந்த 27-ம் தேதி இவர்கள் சென்னை வந்தனர். முதியோர் மருத்துவத்தில் சிறப்பு நிபுணராக இருக்கும் ஏ.பி.டே தலைமையில் நரம்பியல் நிபுணர் மஞ்சரி திரிபாதி, உளவியியல் நிபுணர் நந்தகுமார், எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக பிரிவைச் சேர்ந்த பரமேஸ்வர் குமார் ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். காலை 11.15 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு வந்தனர்.''

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?

''அப்போது கருணாநிதி இருந்தாரா?''

''மருத்துவர்கள் வரும்போது வீட்டுக்குள் இருந்தார். வந்ததும் அறிவாலயத்துக்கு கிளம்பிவிட்டார். தயாளு அம்மாள் அருகில் அவரது மகள் செல்வி, மகன் மு.க.தமிழரசு, ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கருணாநிதியின் குடும்ப மருத்துவர் கோபால், தயாளுவின் டாக்டர் சீனிவாசன் ஆகிய பெரிய படையே இருந்துள்ளது. தயாளு அம்மாள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். குழுவில் இருந்த டாக்டர் மஞ்சரி திரிபாதிக்கு தமிழ் நன்றாகத் தெரியுமாம். அவர், தமிழிலேயே தயாளுவிடம் கேள்விகளைக் கேட்டுள்ளார். சுமார் 2 மணி நேரம் இந்தச் சோதனை நடந்தது. பெட்டில் படுத்திருந்த தயாளு சோதனையின்போது சற்று தளர்வுடன் காணப்பட்டாராம். சோதனை அறிக்கையை மருத்து​வர்கள் குழு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யும். அதன் பிறகு​தான் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தயாளு ஆஜர் ஆவதா, இல்லையா என்று சொல்வார்களாம்!'' என்ற கழுகார் அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார்.

''இந்து பிரமுகர்கள் படுகொலை செய்யப்படும் விவகாரம் முதல்வரை கொந்தளிக்க வைத்துள்ளது என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். அத்வானி சேலத்துக்கு வருவதற்கு முன்னதாக குற்றவாளிகளைக் கைதுசெய்தாக வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளாராம் முதல் வர். 'அத்வானி இங்கு வந்து சட் டம் ஒழுங்கு சரியில்லை என்று பேசினால் அது முதல்வரின் நிர்வாகத் திறமையைப் பரிசோதிப்பதுபோல் ஆகிவிடும். ஆளும் மத்திய காங்கிரஸ் அரசும் முதல்வரை விமர்சிக்கச் சாதகமாக அமைந்துவிடும். தேசிய அரசியலில் கால்பதிக்க நினைக்கும் முதல்வரின் கனவு கலைந்துவிடும் என்பதால் விசாரணையை கூடிய சீக்கிரம் முடித்து உண்மையான குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று முதல்வர் நினைப்பதாகச் சொல்கிறார்கள். 'தடயங்கள் இல்லாததால் விசாரணையைத் தீவிரப்படுத்துவதில் பல சிரமங்கள் இருந்தன. ஆரம்பத்தில் இருந்து குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்த உள்ளூர் புள்ளிகளை நோக்கியே எங்களுடைய விசாரணை நகர்கிறது. இதற்கிடையில் மேலிடத்தில் இருந்து தொடர்ந்து ப்ரஷர் வந்துகொண்டே இருக்கிறது’ என்று வழக்கை விசாரிக்கும் போலீஸார் சொல்கிறார்கள்!''

''மேலப்பாளையத்தில் ஐந்து பேர் கைதுசெய்யப் பட்டுள்ளார்களே?''

''கடந்த முறை, அத்வானி ரதயாத்திரை வந்தபோது பைப் குண்டுகள் வைத்த வழக்கில் தேடப்படும் குற்றவாளி பன்னா இஸ்மாயிலின் கூட்டாளிகளாம் இவர்கள். இவர்களை இந்த வழக்கிலும் சேர்த்துவிடலாம் என்று போலீஸார் நினைத்தார்களாம். 'குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்தவர்களை நெருங்கிவிட்டோம். அத்வானி தமிழகத்துக்குள் கால்வைப்பதற்குள் அவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுவிடலாம் மேடம். ஆனால், குற்றவாளிகளைப் பிடிக்க இன்னும் ஓரிரு வாரங்கள் ஆகலாம்’ என்று முதல்வரிடம் டி.ஜி.பி. சொல்லி யிருக்கிறார்.''

''முதல்வர் என்ன சொன்னாராம்?''

''முதல்வருக்கு இந்த பதில் திருப்தி அளிக்கவில்லையாம்! 'அத்வானி வரு கிறார் என்பதற்காக போலியான ஆட்களைப் பிடித்து திசை திருப்பிவிட வேண்டாம். உண்மையான குற்ற வாளிகளைப் பிடிக்க வேண்டும். அத்வானி வந்துபோகும் வரை எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். வழக்கின் விசாரணை முழுவதையும் அத்வானியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் விளக்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்!''

''உளவுப் பிரிவு போலீஸார் என்ன சொல்லப்போகிறார்களோ?''

''மாநில உளவுத் துறை எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு உதாரணமாக விருதுநகரைப் பார்த்​தாலே தெரிந்துபோகும். முதல்வரின் பல அதிரடி நடவடிக்கை​களுக்குப் பின்புலமாக இருப்பது இந்த மாநில உளவுத்துறை போலீஸார் வழங்கும் அறிக்கைதான். அதனால்​தான் அ.தி.மு.க-வினர் மத்தியில் எப் போதும் 'உளவுப்பிரிவு’ போலீஸ் மீது பயம்கலந்த தனிமரியாதை உண்டு.

இதைப் பயன்படுத்தி அ.தி.மு.க. புள்ளிகளிடம் 'உங்களைப் பற்றி மேலிடத்தில் அறிக்கை கேட்டிருக்​கிறார்கள்’ என்று சொல்லி காரியத்தை சாதித்து கொள்ளும் உளவுப்பிரிவு அதிகாரிகளும் உண்டு.''

''இப்படி எல்லாமா நடப்பார்கள்?''

''இது, பல மாவட்டங்களில் நடக்கிறது. இப்போது சிக்கி இருப்பது விருதுநகர் மாவட்டம். உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீஸார் கூண்டோடு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சொத்து வாங்கிய விவரங்களை மறைத்ததாக உளவுத் துறை போலீஸார் மீதே புகார் போனது. இதுபற்றி, ரகசிய டீம் விசாரித்து, உளவுப் பிரிவு போலீஸாரின் தகிடுதத்தங்களை டி.ஜி.பி-க்கு அறிக்கை அனுப்பியது அந்த டீம். 'முதல்வருக்கு அறிக்கை வழங்கும் உளவுப் பிரிவிலேயே இந்த மாதிரி ஆட்கள் இருந்தால் எப்படி டிபார்ட்மென்ட் உருப்படும்?’ என்று அதிகாரிகளிடம் சீறினாராம் டி.ஜி.பி. ராமானுஜம். அதன் பிறகுதான் வேகவேகமாக விருதுநகர் உளவுப் பிரிவு போலீஸாரை கூண்டோடு கலைத் தனர்’ என்கிறார்கள்!''

''இந்த அதிரடி மற்ற மாவட்டங்களுக்கும் தொடரலாமே?''

''தொடரும் என்றுதான் சொல்கிறார்கள்!'' என்ற கழுகார், ''உளவுத் துறையின் தலைமையிடத்திலும் செய்யப்​பட்ட மாற்றங்களைச் சொல்ல ஆரம் பித்தார்.

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?

''உளவுத் துறை ஃபெயிலியர் என்பதை உணர்ந்து உளவுத் துறையின் இன்டர்னல் செக்யூரிட்டி பிரிவின் ஐ.ஜி. ஆபாஷ்குமாரை தூக்கி அடித்திருக்கிறார் முதல்வர். இவர்தான் மத தீவிரவாதச் செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கும் உளவுப் பணியின் தலைவர்.  தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நால்வரைப் பிடிக்க ஆபாஷ்குமார் எடுத்த நட வடிக்கையில் முதல்வருக்கு திருப்தி இல்லையாம். உளவுத் துறையின் கூடுதல் டி.ஜி.பி-யாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அசோக்குமார் நியமிக்கப் பட்டிருக்கிறார். ஆபாஷ்குமார் இடத்துக்கு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணப்பன் வந்திருக்கிறார். தமிழகத்தில் இந்து இயக்கப் பிரமுகர்கள் கடுமையாக தாக்கப்பட்டது மற்றும் படுகொலை சம்பவங்களைத் தொடர்ந்து கடந்த 26-ம் தேதி போலீஸ் டி.ஜி.பி. ராமனுஜம் வெளியிட்ட அறிக்கையில் போலீஸார் எடுத்த நடவடிக்கைகளை பட்டியல் போட்டுக்காட்டி, 'மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக் கப்படும்’ என்று அறிவித்திருந்தார். ஆனால், இந்தப் பட்டியலில் கடந்த பிப்ரவரியில் காரைக்குடி அருகே உள்ள கண்ணங்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த படைவென்றான் என்ற பி.ஜே.பி. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிடாதது ஏன் என்று இந்து இயக்கப் பிரமுகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.''

''அதானே..!''

''இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள கண்ணப்பன், சட்டம் ஒழுங்கு விவகாரங்களை டீல் செய்வதில் கில்லாடி. ஆனால், மத தீவிரவாத செயல்களைக் கண்காணிக்கும் உளவுப் பிரிவில் பணியாற்றுவது இதுதான் முதல் முறை. அதேபோல், உளவுப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி-யாக நியமிக்கப்பபட்டுள்ள அசோக்குமார், சி.பி.ஐ-யில் 16 வருடங்கள் பணிபுரிந்தவர். புலன் விசாரணை செய்வதில் தேர்ந்தவர்'' என்ற கழுகார்,

''கடந்த சில மாதங்களாகவே உளவுத் துறையின் டி.ஐ.ஜி. பதவி காலியாகவே இருக்கிறது. என்ன மர்மமோ தெரியவில்லை'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.  

சினிமா விழாவில் ஜெயலலிதா!

இந்திய சினிமாவின் 100-வது ஆண்டுவிழா  அக்டோபர் 21-முதல் 28-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என்று நான்கு மாநில முதல்வர்களை அழைத்து விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். திரைப்படத் துறையினர் பாராட்டு விழா நடத்தப் பலமுறை  அழைத்தும் செவிமடுக்காத ஜெயலலிதா, இந்த விழாவில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருக்கிறாராம். நான்கு மாநிலத்தின் முன்னணி நடிகர்கள் மட்டும் மேடையில் இடம்பெறுவார்களாம். தமிழ்நாட்டில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என்று குறிப்பிட்ட நடத்திரங்கள் மட்டும் மேடையில் பேசுவார்களாம். அம்மாவை ஐஸ் வைப்பார்கள் நம்முடைய ஹீரோக்கள்!

 சமாளித்த சரத்குமார்!

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?

'நடிகர் சங்க நில விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு தலைவர் சரத்குமாரிடம் கடிதம் கொடுக்கப்போகிறோம்’ என்று, கையெழுத்து வேட்டை நடத்துகிறார் நடிகர் விஷால். இதற்குப் பலரும் ஆதரவுக்கரம் நீட்ட, சரத்குமார் வட்டாரம் பீதியில் இருக் கிறதாம். இரு தரப்புக்கும் கடந்த வாரம் சமாதானப் படலம் நடந்துள்ளது.

நடிகர்கள் நாசர், கார்த்தி உள்ளிட்ட ஐவர் குழு சரத்குமாரை சந்தித்துள்ளது. 'உங்கள் கேள்விகளுக்கு எனது வக்கீல் பதில் சொல்வார்...’ என்று வழக்கறிஞர் ஒருவரை அழைத்துவந்து நிறுத்தினாராம் சரத்குமார். 'இது தனியார் டிரஸ்ட்’ என்று அந்த வழக்கறிஞர் சொல்ல, 'இது பப்ளிக் டிரஸ்ட்’ என்பதற்கான ஆதாரங்களை எடுத்துப் போட்டாராம் நடிகர் கார்த்தி. 'ஒரு மாதம் பொறுத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்கிறேன்’ என்று சமாளித்து அனுப்பியுள்ளார் சரத்குமார். ஆனாலும், விஷால் தரப்பு சமாதானம் ஆகவில்லையாம்!

 பிஸியாய் பிசியோதெரபி!

அமைச்சர் ஒருவர், கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் பிசியோதெரபி மருத்துவமனைக்கு அடிக்கடி செல்வதற்கு அதிக ஆர்வமாக இருக்கிறாராம். 'உடம்புக்கு ஒண்ணுமே இல்லீங்க. ஆனால், பிசியோதெரபி டைப்ல மசாஜ் பண்ணி விடுற மெத்தேட் ரொம்ப பிடிச்சுப் போயி அங்கயே அடிக்கடி போய்ப் படுத்துக்கிறார். அவரு ஊரு புது ஊராக இருந்தாலும் அங்க எல்லாம் இந்த மாதிரி இல்லையாம்’ என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: முதல்வர் என்ன டவாலியா?
அடுத்த கட்டுரைக்கு