Published:Updated:

96% பெண் எம்பிக்கள் விவாதம்; 35 மசோதாக்கள்! - 67 ஆண்டுக்குப் பின் திரும்பி பார்க்கவைத்த கூட்டத்தொடர்

மசோதாக்கள் நிறைவேற்றப்படும் முன் அது குறித்து ஆராய வேண்டும். அதற்கு விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு அதற்கான நேரத்தை வழங்காமல் செயல்படுவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளிடமிருந்து வந்துகொண்டிருந்தது.

மக்களவை
மக்களவை ( Twitter/@loksabhatv )

17-வது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரையுடன் முடிவுக்கு வந்தது. இந்த கூட்டத்தொடரில் கடந்த காலங்களில் பார்த்திராத அளவுக்கு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன், ` `நாடாளுமன்றம் அனைத்து மசோதாக்களையும் ஆராய வேண்டும். ஆனால், தற்போது நடைபெற்றுவரும் அமர்வு அதை அழித்துவருகின்றது. நாம் பீட்சா டெலிவரி செய்கிறோமோ அல்லது சட்டத்தை நிறைவேற்றுகிறோமா?’ என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

மசோதாக்கள் நிறைவேற்றப்படும் முன் அது குறித்து ஆராய வேண்டும். அதற்கு விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு அதற்கான நேரத்தை வழங்காமல் செயல்படுவதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளிடமிருந்து வந்துகொண்டிருந்தது. எனினும் மறுபுறம் மேலும் மேலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுதான் வந்தது.

மோடி
மோடி

நேற்றுடன் 17 -வது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த நிலையில், மொத்தம் நடைபெற்ற 37 அமர்வுகளில் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முதலாவது கூட்டத்தொடர் 280 மணிநேரம் நடைபெற்றுள்ளது. சபாநாயகர் ஓம் பிர்லா தனது நிறைவு உரையில் 1952 -ம் ஆண்டு முதலாவது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடரில் 67 அமர்வுகளில் 24 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

மக்களவையின் அறிக்கையின்படி ஜூன் மாதம் 17-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில் 35 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 183 கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் இந்த முதலாவது கூட்டத்தொடரில் 70 மணிநேரம் 42 நிமிடங்கள் கூடுதலாக மக்களவையில் இருந்திருக்கிறார்கள். அதாவது தினசரி அமர்வான 6 மணிநேரத்துக்கும் மேல் கூட்டத்தொடர் நீடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 265 உறுப்பினர்களுக்கும் இந்த முதலாவது கூட்டத்தொடரின்போது பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 229 உறுப்பினர்களுக்கு பூஜ்ய நேரத்தில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 46 பெண் உறுப்பினர்களில் 42 பேர் பூஜ்ய நேரத்தில் பேசியுள்ளனர்.

இந்த முதலாவது கூட்டத்தொடரில் சராசரியாக தினமும் 7.6 கேள்விகளுக்குப் பதில்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளின் சராசரி என்பது 3.6 ஆக இருக்கிறது. நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை ஆராயும், பி.ஆர்.எஸ் என்னும் ஆய்வு நிறுவனம், இந்த மக்களவை 281 மணிநேரம் நடைபெற்றதாகவும், இது முன்னர் திட்டமிடப்பட்டதைவிட 135% அதிகம் என்றும் தெரிவித்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் அதிகம். அதாவது கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக திட்டமிட்ட அளவில் 81% நேரம்தான் கூட்டத்தொடர் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த முறை அது 100 சதவிகிதத்தைத் தாண்டியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு!
காஷ்மீர் விவகாரத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு!
Twitter/@loksabhatv

மேலும் 36% கேள்விகளுக்கு மத்திய அரசின் சார்பில் வாய்வழியாக பதிலளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 94 சதவிகித உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கெடுத்துள்ளனர். 96% பெண் உறுப்பினர்களும் விவாதங்களில் பங்கெடுத்துள்ளனர்.

டெய்லி ஒரு மசோதா!

இந்தக் கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து 5 நாள்களுக்குள் விவாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மூன்று மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாளிலேயே விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா
Twitter/@loksabhatv

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க, முதல் கூட்டத்தொடரிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. முத்தலாக் தடை மசோதா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து, ஆர்.டி.ஐ சட்டத்திருத்தம், என்.ஐ.ஏ சட்டத்திருத்தம் உபா சட்டத்திருத்தம் முதலியவை நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் முக்கியமானவை!

News Credit: Times Of India