Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து 'தெலுங்கானா’ என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் மத்திய அரசின் முடிவு, தெலுங்கானா பகுதியில் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. அதே வேளையில், ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசங்களில் பதற்றத்தையும் விதைத்திருக்கிறது. 'சீமாந்திராவைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஹைதராபாத்தில் இருந்து வெளியேற வேண்டும்’ என்ற தெலுங்கானா தலைவர்களின் கொக்கரிப்புகள் சூழ்நிலையின் இறுக்கத்தை அதிகமாக்குகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் இப்போதைய முடிவு ஆந்திர மாநிலம் சம்பந்தப்பட்டதுதான் என்றாலும், நாட்டின் பல பகுதிகளிலும் இது போராட்டத் தீயைக் கொளுத்தியிருக்கிறது. இந்தப் பிரிவினைக் குரல்களை, எடுத்த எடுப்பிலேயே 'இந்திய இறையாண்மைக்கு ஆபத்து’ என்று சொல்லி உதாசீனப்படுத்துவது, ஆரோக்கியமான பார்வை அல்ல; ஒரே மொழியைப் பேசும் மக்களைக்கொண்ட மாநிலங்களாகவே இருந்தாலும், அரசின் ஆதரவுக் கரங்கள் நீளாத தொலைவில் இருக்கும் பின்தங்கிய பகுதிகள் என்று இனம் காணப்பட்ட ஜார்கண்ட் (பீகார்), சத்தீஸ்கர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் உத்தர்காண்ட் (உத்தரப் பிரதேசம்) ஆகிய பகுதிகளைப் பிரித்து, தனி மாநிலங்களாக ஏற்கெனவே உருவாக்கினார்கள். இதன் பிறகு அந்த மாநிலங்கள் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டியதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஆனால், இத்தகைய நோக்கம் தெலுங்கானா விஷயத்தில் இல்லாமல், அது அரசியல் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.

ஆந்திராவில் சமீப காலமாக பலத்த அரசியல் சரிவை, காங்கிரஸ் சந்தித்துவருகிறது. ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும், தெலுங்கானா பகுதியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் செல்வாக்குப் பெற்றுவருகின்றன. ஏதேனும் மாயாஜாலம் செய்து, அந்த இரு பகுதிகளிலும் தனது செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்ள காங்கிரஸ் துடிக்கிறது. தெலுங்கானா பிரிவினை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து காங்கிரஸும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் கூட்டணிப் பிணைப்பை உறுதி செய்துகொள்வதான நடைமுறைகளில் இறங்கியிருப்பதை உற்று நோக்கினால், அரசியல் நோக்கத்துடனேயே இந்தப் பிரிவினை முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

அன்று பல்வேறு சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த இந்தியாவை ஒன்றிணைக்க பெருமுயற்சிகள் மேற்கொண்ட காங்கிரஸ் பேரியக்கம், இன்று ஒருசில எம்.பி. இடங்களுக்காக இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செயல்படுவதை காலத்தின் கோலம் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியுமா என்ன?