Published:Updated:

தமிழகத்தையும் பிரிக்கலாமா?

டி.அருள் எழிலன்

தமிழகத்தையும் பிரிக்கலாமா?

டி.அருள் எழிலன்

Published:Updated:
##~##

ந்தியாவின் கவனத்தை மீண்டும் ஒருமுறை குவித்திருக்கிறது ஆந்திரா! அதே 'தெலுங்கானா’ போராட்டத்துக்காக!  

'அடுத்த ஆறு மாதங்களில் ஆந்திராவைப் பிரித்து தனித் தெலுங்கானா அமைக்கப்படும்’ என்று காங்கிரஸ் உயர் கமிட்டி அறிவிக்க, சந்தோஷத்தாலும் சச்சரவுகளாலும் இரண்டுபட்டுக்கிடக்கிறது, ஆந்திரா. இந்தச் சம்பவத்தை முன்உதாரணமாகவைத்து, தேசம் எங்கும் பிரிவினைக் குரல்கள் ஒலிக்கின்றன. அதில் தமிழகத்தை  மூன்றாகப் பிரிக்கும் குபீர் கோரிக்கையும் ஒன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  வட தமிழகத்தை ஒரு மாநிலமாகவும், கொங்குப் பகுதியை தனி மாநிலமாகவும், மதுரைக்குத் தெற்கே உள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது மாநிலமாக வும் தமிழகத்தைப் பிரிக்க ஸ்கெட்ச் போடுகிறார்கள். தனித் தெலுங்கானாவின் பிரிவினையும் பிற மாநிலங்களின் பிரிவினைக் கோரிக்கைகளும் ஒரே தட்டில் வைத்து நிறுத்தக்கூடியதா? இரு துருவ விளக்கங்களை அலசுவோம்.

மொழிவாரிப் பிரிவினையை ஆதரிக்கும் தமிழ்  தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர்  தியாகு அதில் உள்ள நியாயங்களைப் பட்டியல் இடுகிறார்...

தமிழகத்தையும் பிரிக்கலாமா?

''சுதந்திரத்துக்குப் பின் இந்தியா மொழிவழி மாநிலங்களாகப் பிரித்து அமைக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இயல்பாகவே, கம்யூனிஸ்ட் கட்சியும் 'தேசிய இன உரிமை’ என்கிற கண்ணோட்டத்தில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், அந்த உரிமை தெலுங்கானா மக்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டுவந்தது. அதனாலேயே, அது மக்களின் போராட்டமாக விஸ்வரூபம் எடுத்து, இப்போது வெற்றியின் விளிம்பைத் தொட்டு நிற்கிறது.  'இது மொழி வழி மாநில அமைப்புக்கு எதிரானதா... தேசிய இன ஒற்றுமைக்குப் புறம்பானதா?’ என்று கேட்டால், 'இல்லை’ என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால், மொழிவழி மாநில அமைப்பில் இரு மொழி பேசும் ஒரு மாநிலம் கூடாதே தவிர, ஒரு மொழி பேசும் பல மாநிலங் கள் இருக்கலாம். இந்தியாவிலேயே இந்திமொழி பேசும் பல மாநிலங்கள் உள்ளன. உலக அளவில்  அரபு மொழி பேசும் 20-க்கும் மேற்பட்ட தேசங்கள் அக்கம்பக்கமாகவே உள்ளன. லத்தீன், அமெரிக்க நாடுகளில் ஸ்பானியம், போர்த்துக்கீசியம் பேசும் பல நாடுகள் உள்ளன. ஆகவே, நிர்வாக வசதிக்காக தமிழகத்தைப் பிரிக்கக் கோரும் உரிமை மக்களுக்கு உண்டு. ஆனால், அது சாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதாக இருக்கக் கூடாது. ஏனெனில், தனி மாநில அந்தஸ்து கிடைக்க இருப்பதாலேயே, தெலுங்கானா மக்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. உண்மையான சுதந்திரத்தைப் பெற தெலுங்கானா மக்கள் தங்கள் சொந்த சகோதரர்களான ஆந்திரர்களோடு இணைந்துதான் செயலாற்ற வேண்டும்!'' என்றார் தியாகு.

தமிழகத்தையும் பிரிக்கலாமா?

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழ ருவி மணியன், பிரிவினைக் குரல்களை உதாசீனப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

''மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சில மாநிலங்களுள் பல இனங்களும், ஒரே மொழி பேசும் மக்களுள் ஒரு பிரிவினரும் பாதிக்கப்பட... நியாயமான சில பிரிவினை கோரிக்கைகள் எழுந்தன. தெலுங்கானா, கூர்க்காலாந்து கோரிக்கைகளை இப்படிப் பார்க்கலாம்.  ஆனால், இப்போது எழும் பிரிவினைக் குரல்களை மதித்து சின்னச் சின்னப் பகுதிக ளாக நீங்கள் தொடர்ந்து மாநிலங்களைவெட்டிக் கொண்டே சென்றால், காலப்போக்கில் இந்தியாவே இல்லாமல் போய்விடும்.   சுதந்திரத்துக்கு முன்பு 560 சமஸ்தானங்களாகப் பிரிந்துகிடந்த தேசத்தைத்தான் 'இந்தியா’ என்று ஒருங்கிணைத்தார்கள். ஆனால், இப்போது எழும் கோரிக்கை களைப் பரிசீலித்துக்கொண்டேபோனால், ஆயிரத் துக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாக இந்தியா வைப் பிரிக்க வேண்டியிருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசியர்கள் தமிழகம் தனி யாகப் பிரிந்தால் தமிழகம் வளரும் என்று  நினைக்கிறார்கள். வடக்கே இருக்கக்கூடிய வன்னியர்கள், வன்னிய மண்டலம் வேண்டும் என்று கேட்பார்கள்.கவுண்டர்கள், கொங்கு மண்டலம் கேட்பார்கள். நாடார்கள்,  பாண்டிய மண்டலம் கேட்பார்கள். மறவர் பூமி வேண்டும் என்பார்கள்

தமிழகத்தையும் பிரிக்கலாமா?

மதுரைப் பகுதிக்காரர்கள். எப்போதுமே  மொழியின் அடிப்படையிலோ இனத்தின் அடிப்படையிலோ, தமிழன் இதுவரை ஒன்றாக இருந்ததாகச் சரித்திரம் இல்லை. அப்படி ஓர் அடையாளத்தோடு இருந்திருந்தால், தமிழ் தேசியத்துக்கான அர்த்தம் கிடைத்திருக்கும். ஆனால், இப்போது தமிழகத்தில் எழும் பிரிவினைக் கோஷங் கள் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதைதான்!''  என்கிறார்  தமிழருவி மணியன்.

'ஒரு மொழி பேசும் பல மாநிலங்கள் சரியென்றால், தமிழகத்தையும் ஏன் பிரிக்கக் கூடாது?’ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறார் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

''பிரிட்டிஷ் அரசு தனது நிர்வாக வசதிகளுக்காகவும் பிற நாடுகளுடன் செய்துகொண்ட போர் உடன்படிக்கை அடிப்படையிலும்  பல பகுதிகளை சில நாடுகளுடன் இணைத்தது. அதன்பின், கடலோர ஆந்திரம், ராயலசீமா, ஹைதராபாத் ஆகிய மூன்று பகுதிகளை இணைத்து 'ஆந்திரம்’ என்று ஒன்றிணைத்தார்கள். ஆனால், 'இது ஆதிக்க சக்திகளின் விரிவாக்க நோக்கம்’ என்று நேருவே ஆந்திர உருவாக்கம் பற்றிக் கூறியிருக்கிறார். தெலுங்கானா பகுதி தெலுங்கும் கடலோர ஆந்திர மக்கள் பேசும் தெலுங்கும் ஒன்றல்ல; இந்த மூன்று பகுதிகளுக்கும் பொதுப் பண்பாடு என்ற ஒன்று கிடையாது. ஆனால், அவர்களை ஒன்றிணைக்கவைத்த அடக்குமுறையிலில் இருந்துதான் வட்டார உணர்வு எழுகிறது. மக்களிடம் உருவாகும் வட்டார உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது அவசியம். ஆனால், தமிழர்களோ பொதுவான மொழி அடையாளம் போக, பல்வேறு திணை அடையாளங்களுடனும் வாழ்ந்தவர்கள். மொழி அடையாளங்களுக்காக திணை அடையாளங்களையோ, திணை அடையாளங்களுக்காக பொது அடையாளங்களையோ ஒதுக்காமல் வாழப் பழகியவர்கள் நாம். எனவே, சாதி அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்குடன் தமிழகத்தைப் பல கூறாகப் பிரிப்பது என்ற கோரிக்கைக்கு நமது பாரம்பரியத்தில் இடம் இல்லை!'' என்கிறார் மார்க்ஸ்.