ஸ்பெஷல் -1
சினிமா
Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
##~##

ரு வாய் குடிநீருக்காக குழாயடியில் போராடுவது தொடங்கி... ஒரு போக பாசன நீருக்காக காவிரி நடுவர் மன்றத்தில் மன்றாடுவது வரை தண்ணீருக்காக தமிழகம் படாதபாடுபடுகிறது. ஆனாலும், தண்ணீரின் அருமையை அரசாங்கம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. வாராது வந்த பருவ மழை காரணமாக தழும்பித் ததும்பிப் பெருகிவந்த காவிரி நீரைத் தேக்கிவைக்க வழியில்லாமல், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அன்று, ஒரே நாளில் கொள்ளிடம் வழியாக 6 டி.எம்.சி. தண்ணீரை கடலுக்குத் தாரைவார்த்திருக்கிறோம். ஒட்டுமொத்த சென்னையின் குடிநீர் தாகத்தையும் சில மாதங்களுக்குத் தீர்க்கக்கூடிய அந்தத் தண்ணீரை விழலுக்கு இறைத்திருக்கிறோம்.  

அரசியல் லாபத்தை மட்டுமே மனதில்வைத்து சமயங்களில் 1 டி.எம்.சி தண்ணீருக்காகக்கூட அண்டை மாநிலத்தோடு அறிக்கை யுத்தங்கள் நடத்தும் ஆட்சியாளர்கள், இப்படி ஒரேயடியாக 6 டி.எம்.சி. தண்ணீரை வீணாக்கியிருப்பதற்கு என்ன பதில் சொல்லவிருக்கிறார்கள்? 'நீரை சிந்தினாயோ... சீரை சிந்தினாயோ?’ என்ற பழமொழி இன்றைய காலகட்டத்தில் அடர்த்தியான அர்த்தம் நிறைந்தது. மூன்றாம் உலகப் போருக்கான காரணிகளில் பிரதானமானது என்ற வகையில் தண்ணீர்தான் இன்றைக்கு நமது மிகப் பெரிய சீர்... செல்வம். பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அந்த ஜீவாதார நீரை காட்டுவெள்ளமாகக் கருதுவதே இப்போதைய சிக்கலுக்குக் காரணம்.

'காவிரியிலும் கொள்ளிடத்திலும் ஆங்காங்கே தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டினால் வெள்ளப் பாதிப்பை அறவே தவிர்க்கலாம். மிகுதியான ஆற்று நீரை கடலில் திறந்துவிட வேண்டிய நிர்பந்தம் இருக்காது. அந்த அணைகள், சுற்றிலும் பல சதுர மைல் பரப்பளவுக்கு நிலத்தடி நீரைப் பெருகவைக்கும். குடிநீர் தேவையும் பூர்த்தியாகும். மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமல்லாமல்; பருவ மழைக் காலங்களில் பொழியும் மழை நீரையும் இந்த அணைகளில் சேமித்து வைத்துப் பாசனத்துக்குப் பயன்படுத்தலாம்’ என்ற டெல்டா பகுதி விவசாயிகளின் ஆலோசனைகளை அரசாங்கம் முழுமுதல் ஆணையாக ஏற்றுச் செயல்பட வேண்டியது அவசியம்.

'பென்னி குக்குக்கு நினைவு மண்டபம் அமைப்பதையும், கரிகால் சோழனுக்கு மணி மண்டபம் கட்டுவதையும்விட... நலிந்துவரும் விவசாயத்துக்கு கைகொடுப்பதுதான் தமிழக அரசு ஆற்றவேண்டிய அரும்பணி. கிரானைட் மோசடி, மணல் கொள்ளை ஆகியவை நாட்டுக்கு உண்டாக்கும் இழப்புகளுக்கு சற்றும் குறைவில்லாதவையே, இயற்கையின் கொடையான தண்ணீரை வீணாக்கும் இந்த அசட்டை!