Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

றந்தவர்கள் எழுந்து வருவதும், ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிவதுமாக அதிசயங்கள் நிறைந்த தேர்தல் காலம் மறுபடி நெருங்கிவிட்டது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எந்த அணியில் யார் இடம்பெறுவது என்பதற்கான ஏலம், கூச்ச நாச்சமே இல்லாமல் கொடி கட்டிப் பறக்கும். நம்பியவர்களை, ஏதாவது நொட்டை நொள்ளை சாக்கு சொல்லி நட்டாற்றில் விட்டுவிட்டு, புதிய கூட்டணி தேடி யாத்திரை புறப்படுவார்கள் அரசியல் 'மகான்'கள்!

'நடந்ததை மறப்போம்' என்ற காரியக்கார நாகரிகம் கச்சிதமாகத் தூள் பறக்கும். நேற்று வரை காது கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துக்கொண்டவர்கள், அத்தனை பற்களையும் காட்டி அரவணைத்துக்கொள்வார்கள்!

தேட்டை போட்டவர்களும், பூட்டைப் போட்டவர்களும் கூட்டை முறித்துக்கொண்ட பின்னால், தங்கள் தவறுகளுக்கான பழிகளை இடம் மாற்றிப் போடுவது சர்வ சாதாரணமாக நடக்கும். ஏன், தண்டனைகளையே தியாகங்களாகச் சித்திரித்துக் காட்டும் விநோதம்கூட அரங்கேறும்.

குறட்டைவிட்டுக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம், கோட்டையைப் பிடிக்கும் குறிக்கோளோடு மக்களுக்கு மத்தியில் சுற்றிச் சுழல்வார்கள். தேர்தல் பருவம் முடிந்த பிறகு, இரும்புக் கோட்டைக்குள் போய் இவர்கள் முடங்கிவிட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை!

வாக்குறுதிக் கிலுகிலுப்பைகளை ஆட்டினாலும் சரி... வானத்து நிலவையே பறித்துத் தருவதாக வாண வேடிக்கை காட்டினாலும் சரி... நோட்டு என்ற மிட்டாயைக் கொடுத்துவிட்டு, ஓட்டு என்ற வைரக் கல்லைப் பறித்துக்கொள்வதற்காக எத்தனை வேடங்களில் யார் வந்தாலும் சரி...  

இந்த அரசியல் பூசாரிகள் எல்லோருமே வாக்காளக் குழந்தைகளுக்கு காது குத்தி, மொட்டை அடிக்கும் திருவிழாவாகத்தான் தேர்தலைப் பார்க்கிறார்கள். இவர்களின் உடுக்கையடி பிரசாரங்களில் ஒரேயடியாக அருள் வந்து ஆடாமல், நிதானத்தோடு நீட்டுவோம் நம் தலைகளை!