Published:Updated:

மூவரின் தூக்குக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடு: உன்னிப்பாக கவனிக்கும் உமர் அப்துல்லா!

மூவரின் தூக்குக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடு: உன்னிப்பாக கவனிக்கும் உமர் அப்துல்லா!
மூவரின் தூக்குக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடு: உன்னிப்பாக கவனிக்கும் உமர் அப்துல்லா!

ஆக.31,2011

மூவரின் தூக்குக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடு: உன்னிப்பாக கவனிக்கும் உமர் அப்துல்லா!

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து அஃப்சல் குருவை மேற்கோள் காட்டி கருத்துப் பதிவு செய்திருக்கிறார், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. ##~~##

மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை உமர் அப்துல்லா உன்னிப்பாகக் கவனித்து வருவதாக தெரிகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

எட்டு வார காலத்தில், இந்த வழக்குக்கு உரிய பதிலை அரசு தர வேண்டும் என்றும் நீதிபதிகள் நாகப்பன், எம்.சத்தியநாராயணன் ஆகியோரை கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் கழித்ததுடன், 11 ஆண்டு காலம் கால தாமதம் செய்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்து மூவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதே உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு வெளிவருவதற்கு முன்பாக, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதியை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

அஃப்சல் குருவை இணைத்த ஜம்மு முதல்வர்...


இந்தச் சூழலில், தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழகத்தைப் போலவே ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் அஃப்சல் குருவுக்காக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அமைதியாக இருப்பார்களா என்றால், 'இல்லை' என்றே கருதுகிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

நாட்டின் ஏனைய மாநிலங்களில் உள்ளது போல் காஷ்மீர் மாநில மக்களின் உணர்வுகள் மதிக்கப்படுவது இல்லை என்று அவர் குறிப்பால் தெரிவித்துள்ளார்.

மூவரின் தூக்குக்கு எதிரான தமிழக அரசின் நிலைப்பாடு: உன்னிப்பாக கவனிக்கும் உமர் அப்துல்லா!

முதல்வர் உமரின் வாதத்தை ஏற்கும் அஃப்சல் குருவின் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால், இந்தச் சமூகத்தில் எல்லாமே அரசியலாக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

பிஜேபி தாக்கு...

அஃப்சல் குரு தூக்கு தண்டனை விஷயத்தில் உமர் அப்துல்லா தெரிவித்துள்ள கருத்துக்கு பிஜேபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சையத் ஷானவாஸ் ஹுசைன் கூறுகையில், "ஒவ்வொரு விவகாரத்தையும் வாக்கு வங்கி அரசியலை மையமாக வைத்தே அவர் அணுகிறார். வாக்கு வங்கி அரசியலை விட தேசிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது," என்றார்.

பிஜேபியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் பல்பிர் பூரி, உமரின் கருத்து அதிர்ச்சிகரமானதும் பொறுப்பற்றதும் துரதிஷ்டவசமானதுமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நிதானம் காக்கும் காங்கிரஸ்...

இந்த விவகாரத்தில் நிதானம் காத்து வரும் காங்கிரஸ், அழுத்தமாக கருத்து தெரிவிக்க மறுத்து வருகிறது.

உமர் அப்துல்லா கூறியது தனிப்பட்ட கருத்து என்று கூறிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரேணுகா செளத்ரி, "ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை," என்றார்.

"சட்ட ரீதியாக அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை குறித்து கருத்து கூறுவதோ அல்லது வேறு விவகாரம் குறித்து தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமோ இல்லை," என்கிறார் மற்றொரு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி.

முன்னதாக, கடந்த 2001-ம் ஆண்டில் நிகழ்ந்த நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளி என உறுதி செய்யபட்ட காஷ்மீரை பூர்விகமாகக் கொண்ட அஃப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் 2004-ல் உறுதி செய்தது.

அஃப்சல் குருவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு கடந்த 10-ம் தேதி, ஜனாதிபதிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டால், காஷ்மீரில் பரவலாக பெரும் பதற்ற நிலை உண்டாகும் என அம்மாநில அரசு அஞ்சி வருவதும் கவனத்துக்குரியது.

தமிழகத்தின் கோரிக்கை...

ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் கழித்ததுடன், 11 ஆண்டு காலமாக ஜனாதிபதியின் முடிவுக்குக் காத்துக் கொண்டிருந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

அத்துடன், உலக அளவில் 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒழிக்கப்பட்ட மரண தண்டனையை இந்திய நாட்டிலும் ஒழிக்க வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, சமூக ஆர்வலர்களும், பொதுமக்களில் பெரும்பாலானோரும் இதனைத் தீவிரமாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு