Published:Updated:

அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரின் உயிர்களை காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி

Vikatan Correspondent
அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரின் உயிர்களை காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி
அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரின் உயிர்களை காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி
அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரின் உயிர்களை காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி

சென்னை, செப்.1-2011: முதலமைச்சர் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 3 பேரின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து தமிழர்கள் எல்லாம் வாதாடி, சட்டமன்றத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று கேட்ட நேரத்தில் அதை மறுத்த முதலமைச்சர்ஜெயலலிதா, இறுதியாக தமிழர்களின் எழுச்சியை கண்ட பிறகு பேரவையிலே அந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.

அந்த தீர்மானத்தை நிறைவேற்றிய போது ஜெயலலிதா தனது உரையில், அரசியல் அமைப்பு சட்ட விதி 161-ன் கீழ் மாநில முதல்-அமைச்சருக்கு இதில் அதிகாரம் இல்லை என்றும், மாநில கவர்னருக்கும் அதிகாரம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆனால் தூக்கு தண்டனை கைதிகளுக்காக உயர்நீதிமன்றத்தில் ராம்ஜெத் மலானியோடு இணைந்து வாதாடிய மற்றொரு மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கான அதிகாரம் முதல் அமைச்சருக்கு இருக்கிறது, அது தொடர்பாக அமைச்சரவையை கூட்டி முடிவு எடுப்பதற்கான சரியான தருணம் இது என்று கூறியிருக்கிறார்.

29.8.2011 அன்று 110-வது விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை படித்த முதலமைச்சர்ஜெயலலிதா, 19.4.2000 அன்று தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஒருவருக்கு மட்டும் கருணை காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்றும், மற்றவர்களின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, தன்னையும் அறியாமல் நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைவதற்கு தி.மு.க. அரசு தான் காரணம் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் நளினி உள்ளிட்ட இந்த நால்வரின் தூக்கு தண்டனையை 11.5.1999 அன்று உறுதி செய்தது. அதே உச்சநீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவும் 8.10.1999 அன்று நிராகரிக்கப்பட்டு விட்டது. 17.10.1999 அன்று ஆளுநரிடம் அளித்த கருணை மனுக்களை அவர் 27.10.1999 அன்று நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்தான் 25.1.1999 அன்று ஆளுநரின் ஆணையை தள்ளுபடி செய்து விட்டு, அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று புதிய ஆணை வழங்கிட தீர்ப்பளித்தது. அந்த சூழ்நிலையில்தான் 19.4.2000 அன்று கழக அமைச்சரவை கூடி முடிவெடுத்தது.

ஜெயலலிதா படித்த அதே அறிக்கையில்- "இந்த மூன்று நபர்களும் குடியரசு தலைவருக்கு அளித்த கருணை மனுக்களை தமிழ்நாடு அரசு 28.4.2000 நாளிட்ட கடிதத்தின் படி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது'' என்றும் சொல்லியிருக்கிறார். அவ்வாறு 28.4.2000 அன்று தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு அந்த கருணை மனுக்களை அனுப்பி வைத்ததின் காரணமாகத்தான் அவர்கள் மூவரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாமல் இந்த 11 ஆண்டு காலமும் அவர்கள் சிறையில் நீடிக்க முடிந்தது என்பதை ஜெயலலிதாவே தனது அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நான் எனது முந்தைய கடிதத்தில் மரணத்தின் பிடியிலிருந்து சிலர் விடுவிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களில் நான் ஒருவன் என்ற அடிப்படையில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 161-ன் கீழ் இந்த மூவரையும் காப்பாற்றிட தனக்கு அதிகாரம் இல்லை என்று யாரோ சொன்னதையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஜெயலலிதா காலங்கடத்தாமல், இதில் தனக்கிருக்கும் அதிகாரத்தை இப்போதாவது உணர்ந்து கொண்டு தூக்கு மேடைக்கும் - தொடரும் வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் உயிர்களையும் காப்பாற்ற முன் வரவேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்