Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
ஆசிரியர்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

கார்கில் போர் தியாகிகளின் குடும்பத்தினரைக் குடியேற்றுவதற்காகக் கட்டப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில், அரசியல் சக்திகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் முறைகேடாகப் புகுந்துகொண்ட அவலத்தை நாடு பார்த்தது. ஊர் கூடி எதிர்ப்புக் குரல் எழுப்பிய பிறகு, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தார்.

இப்போது, 'குறிப்பிட்ட அந்த இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி, பல அடுக்குகள் கூடுதலாக வீடுகளைக் கட்டி விதிமுறைகளை மீறிவிட்டார்கள்' என்று மத்திய சுற்றுச்சூழல் துறை குமுற ஆரம்பித்திருக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகளை இடித்துத் தள்ளுவதற்கான பரிசீலனையும் அவசரகதியில் நடைபெறுகிறது.

அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகள், விதிகளை மீறி யார் கண்ணுக்கும் தெரியாமல் ஓர் இரவில் கட்டிமுடிக்கப்பட்டவை அல்ல. சுற்றுச்சூழல் அதிகாரிகள் உட்பட, சட்ட விதிகளை நன்கு அறிந்த உயர் அதிகாரிகளின் கண்களின் முன் மாதக்கணக்கில் எழும்பியவைதான் அந்தக் கட்டடங்கள். இப்போது குரல் கொடுப்பவர்கள் எல்லாம், அப்போது எங்கே போயிருந்தார்கள்?

இதேபோலத்தான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பணிகள் துவங்கியபோதே, அதில் முறைகேடுகள் அரங்கேறுவது பலமாக சுட்டிக் காட்டப்பட்டது. தரமற்ற கட்டுமானம், மதிப்பற்ற உபகரணங்கள் என்று பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே நாட்டின் மானத்தை சர்வதேச அளவில் அடகுவைத்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தபோதும், உடனடி நடவடிக்கை ஏதும் இல்லை. ஆற அமர இப்போதுதான் கல்மாடிக்குக் கல்தா கொடுத்திருக்கிறார்கள். தவறுகள் குறித்து விசாரணை நடத்தப்போகிறார்களாம்.

'ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீட்டில், வரலாறு காணாத இழப்பை அரசுக்கு ஏற்படுத்திவிட்டார்கள் என்ற வேதனைக் கூச்சல். வருடக்கணக்காக நாடாளுமன்றத்திலும் நாட்டின் பல மூலைகளிலும் எழுப்பப்பட்டபோதும், அந்தத் துறையின் அமைச்சரைப் பதவி விலகும்படி மத்திய அரசு உத்தரவிடவில்லை. அந்த அமைச்சரோ, அவர் சார்ந்த கட்சியோ, 'நாங்கள் தவறு செய்யவில்லை. ஏன் பதவி விலக வேண்டும்?' என்று நாற்காலியை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார்கள். 'பதவி எங்களுக்குத் தோள் துண்டு. தன்மானம்தான் இடுப்பு வேட்டி!' என்று சொல்லிவிட்டு, பதவியை உதறியெறிய முன்வரவே இல்லை.

இன்று உச்ச நீதிமன்றம் உட்படப் பல்வேறு நெருக்கடிகள் கழுத்தை நெரிக்கும்போதுதான், வேறு வழியே இல்லாமல் பதவியைவிட்டு விலகி இருக்கிறார்கள்.

செய்யாத தவறுக்குக் குற்றம் சாட்டப்பட்டாலே, தார்மீகப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகி, குற்றச்சாட்டு மீது தடையற்ற விசாரணை நடப்பதற்கு வழி வகுத்த மானஸ்தர்கள் பலரைப் பார்த்தது நம் நாடு. அது ஒரு காலம்.

இன்றைக்கோ..?! அக்னிப் பிரவேசம் செய்து தூய்மையை நிரூபிக்கத் துடிப்பவர்களைவிட, குற்றச்சாட்டு ஜுவாலை எவ்வளவுதான் தகித்தாலும், துளிகூட உணர்வே இல்லாமல் பதவி தரும் குளுகுளுப்பில் தங்களை அருமையாகத் தற்காத்துக்கொள்ளும், 'விசித்திரப் பிறவிகள்' நிறைந்ததே நம் நாடு!

இவர்களுக்கென்ன... தும்பைவிட்டு வாலைப் பிடித்ததால், வரும் நஷ்டம் எல்லாம் அப்பாவி மக்களின் தலையில்தானே!

தலையங்கம்
தலையங்கம்