"ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் மீறப்படவில்லை. 99-ம் ஆண்டு விதிமுறையைத்தான் நாங்களும் பின்பற்றினோம். பிரமோத் மகாஜனும் அருண் ஷோரியும் எதைக் கடைப்பிடித்தார்களோ அதைத்தான் நாங்களும் செய்தோம். பிரதமர் அலுவலகத்துக்கு இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் கொடுத்துவிட்டுத்தான் நாங்கள் செயல்படுத்தினோம். இதில் முறைகேடு நடக்கத் துளியும் சாத்தியம் இல்லை. என்னைப் பதவி விலகச் சொல்வது, சில அரசியல்வாதிகளும் மீடியாக்களும் செய்யும் சதி" என்று ஆ.ராசா சொன்னார். இதையேதான் கருணாநிதியும் வழிமொழிந்தார்.
பதவி விலகலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, "ராசா எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் பதவி விலக மாட்டார்" என்று அடித்துச் சொன்னார். வழக்கம்போல சாதிக் கத்தியை உயர்த்திக் காட்டினார். காமன்வெல்த் ஊழல் புகாரில் சிக்கிய சுரேஷ் கல்மாடி யும், மகாராஷ்டிரா ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு முறைகேட்டில் ஊடகங் களால் கிழிக்கப்பட்ட அந்த மாநில முதலமைச்சர் அசோக் சவானும்கூட சாதிரீதியாகத்தான் குறிவைக்கப்பட்டார்களா என்பதை தி.மு.க-தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்!
ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் விதிமுறைகள் பின்பற்றப் பட்டனவா, அதனால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டதா என்ற இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இதை அனைவரும் பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தின் ஆரம்பகர்த்தா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி. ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக ஆனதற்குப் பின்னால், இந்தத் துறைக்குச் சம்பந்தம் இல்லாத கம்பெனிகள் உள்ளே நுழைந்து, கான்ட்ராக்ட் பெற்றதைப் பார்த்து 'இதில் ஏதோ கோல்மால் நடக்கிறது' என்று யெச்சூரி, பிரதமருக்கு கடிதம் அனுப்பினார். கூட்டணியில் இருக்கும் முக்கியக் கட்சியான தி.மு.க-வுக்குக் கசப்பை ஏற்படுத்தும் என்பதால், மன்மோகன் அப்போது மௌனம் சாதித்தார்.
உடனே, சில சமூக ஆர்வலர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோனார்கள். "எல்லா டெண்டர்களும் யார் தகுதியானவர் என்று பார்த்துத்தானே தரப்படுகிறது? இதில் மட்டும் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தந்து இருப்பது தவறானது. சினிமா டிக்கெட்டைக் கொடுப்பதுபோல டெண்டர் தருவது தவறு" என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தார்கள். உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கும் இது சென்றது. அவர்கள் சுழற்றிச் சுழற்றி அடிக்க ஆரம்பித்ததுதான், இன்று ராசாவை ராஜினாமா கடிதம் எழுதவைத்து இருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன்னரே, "ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். தி.மு.க-வில் இருந்து இன்னொருவரை மந்திரி ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று சோனியா தரப்பில் இருந்து கருணாநிதிக்குத் தகவல் தரப்பட்டதாக டெல்லி உள் விஷயங்களை
அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 'அப்படிச் செய்தால், குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்' என்று சென்னையில் இருந்து தகவல் தரப்பட்டுள்ளது.
|