Published:Updated:

ஊழல் பற்றி ஜெ. சாடுவது சிரிப்பாக உள்ளது: கருணாநிதி

ஊழல் பற்றி ஜெ. சாடுவது சிரிப்பாக உள்ளது: கருணாநிதி

சென்னை, டிச.20,2010

ஊழலைப் பற்றி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டி அறிக்கை விட்டால் சிரிப்பு வருகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"ஸ்பெக்ட்ரம் பிரச்னை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பாலோனோர் இந்த ஊழலின் பின்னணியிலும், இந்த ஊழலுக்கு துணையாகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்று வழக்கம்போல நீட்டி முழக்கி அறிக்கை விட்டிருப்பதைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.

ஊழலைப் பற்றி ஜெயலலிதா குற்றம் சாட்டி அறிக்கை விட்டால் சிரிப்பு வராதா என்ன? அதிலும் மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணிக்கும் என்று உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பைதான் வரவேற்பதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்.

உச்சநீதிமன்றம் இந்த ஒரு வழக்கிலே மாத்திரமா தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதலமைச்சர் பொறுப்பிலே இருந்த போது ஜெயலலிதா அடிமாட்டு விலைக்கு வாங்கியதைப் பற்றி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? அந்தத் தீர்ப்பையும் ஜெயலலிதா வரவேற்றிருக்க வேண்டியதுதானே?

டான்சி வழக்கில் முக்கிய சில பகுதிகள்:- "பொதுத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதலமைச்சராக பதவியிலே இருந்த காலத்தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். அது வரை விற்பனை முழுமை அடைந்ததாகாது.

இந்த வழக்கைப் பொறுத்தவரையில் இந்த இரண்டு கம்பெனிகளை விற்க வேண்டியதற்கான அனுமதியினை முதல் குற்றவாளியின் (ஜெயலலிதா) தலைமையிலே நடைபெறும் அரசே வழங்க வேண்டிய நிலையில், அரசு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதால் அங்கே ஒரு அக்கறை மோதுதல் ஏற்படுகின்றது.

இப்படிப்பட்ட இரு வேறு அக்கறை மோதுதல்கள் இருக்கும்பட்சத்தில், நியாயமான விற்பனை நடைமுறைகளைக் குந்தகப்படுத்தக் கூடிய வாய்ப்புள்ள ஒருவருக்கு இந்த விற்பனை, சட்டப்படி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்த போதிலும், அதிலே ஜெயலலிதாவிற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதைவிட, முதலமைச்சரே வழக்கு சொத்துக்களை வாங்க யத்தனித்துவிட்ட நிலையில், அதிகார வர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம் காட்டி இந்த விற்பனையை சுமூகமாக முதலமைச்சர் ஜெயலலிதா விரும்பும் விலைக்கே முடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது.

எந்த நிலையிலும், ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தை விதிகளின் உட்பொருளுக்கு விரோதமானதாகும்.

நியாயமாக பேசவேண்டுமென்றால், அரசின் சிறு அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதலமைச்சருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இதுபோன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பர பொருள் மட்டும்தானா? அது கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்று அல்லவா? இவைகள்தான் எங்களுடைய மனச் சாட்சியைத் துன்புறுத்துகிறது.

முதல் குற்றவாளியான ஜெயலலிதாதான் இந்த வழக்கிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும் அரசு அதிகாரிகளும் ஏற்றுக் கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ஜெயலலிதா வரவேற்றாரா? அதற்காக வெட்கப்பட்டாரா? மனச்சாட்சிக்கு இடம் கொடுத்தாரா? அப்படிப்பட்டவர் தற்போது ஊழல் பற்றி அறிக்கைவிட தகுதி படைத்தவரா?

வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து 66 கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்து, அதற்காகவே ஏழாண்டு காலமாக ஜெயலலிதா மீது வழக்கு நடைபெறுகிறதே; அந்த வழக்கிலே, "நீதி பரிபாலன முறையின் புனிதத்தையும், அதன் மீது சாதாரண மக்கள் வைத்திருக் கும் நம்பிக்கையையும் நிலைநாட்ட இந்த வழக்கு விசாரணையை கர்நாடக மாநில நீதி மன்றத்திற்கு மாற்றுகிறேன்'' என்று உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் எஸ்.என்.வரியவா மற்றும் எச்.கே.சேமா ஆகியோர் 18-11-2003 அன்று தீர்ப்பு வழங்கினார்களே, அந்தத் தீர்ப்பைப் பெற்ற ஜெயலலிதா அந்த தீர்ப்புக்கு ஒத்துழைக்கும் வகையில் பெங்களூரில் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க ஒத்துழைப்பா கொடுக்கிறார்? எந்த அளவிற்கு அதனை தாமதப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு தாமதப்படுத்த முயற்சிக்கிறார். தற்போதுகூட அந்த வழக்கை தாமதப்படுத்த உச்ச நீதிமன்றம் வரை ஜெயலலிதா மேல் முறையீடு செய்து, உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை தடை செய்ய மறுத்து தீர்ப்பளித் துள்ளதே! அதுவும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு தானே?

1993-94-ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமானவரித் துறையே அவர் மீது வழக்கு தொடுத்து - அந்த வழக்கில் 24-2-2006 அன்று ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஏ.கே. மாத்தூர் ஆகியோர் நீங்கள் நீதி மன்ற நடைமுறைகளை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

எவ்வளவு காலம்தான் இதை செய்து கொண்டிருக்க முடியும்? என்று விமர்சனம் செய்தார்களே, அதை ஜெயலலிதாவே மறந்து விடலாமா? உச்சநீதி மன்றத்தின் இந்த கருத்தினை ஜெயலலிதா மதித்தாரா? வரவேற்றாரா? அதுபற்றி அறிக்கை விட்டாரா? ஜெயலலிதாவின் வீட்டைச் சோதனையிட்ட போது கிடைத்த பொருள்களும், அதன் மதிப்பும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து ஏடுகளிலும் ஒரு பட்டியலாகவே வெளியிடப்பட்டது.

அந்தப் பட்டியலில் குறிப்பிட்டவாறு - ஜெயலலிதாவின் 86 வகையான நகைகள் மதிப்பு - 17 லட்சத்து 50 ஆயிரத்து 31 ரூபாய். சசிகலாவின் 62 வகையான நகைகள் மதிப்பு - 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய். ஜெயலலிதாவின் 26 வகையான நகைகள் - 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய். ஜெயலலிதாவின் 41 வகையான நகைகள் - 1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய். ஜெயலலிதாவின் 394 வகையான நகைகள் - 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.

சசிகலாவின் 34 வகையான நகைகள் - 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய். 1116 கிலோ எடையுள்ள வெள்ளிப் பாத்திரங்கள் - 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.

இந்தியன் வங்கி, அபிராமபுரம் கிளையில் முதலீடு - ஒரு கோடி ரூபாய். சொகுசு பேருந்து எண் டி.என். 09-எப். 2575 - 32 லட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய். 91 கைக் கடிகாரம் - 6 லட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய். 7 விலை உயர்ந்த கைக்கடிகாரங்கள் - 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய்.

914 புதிய பட்டுச் சேலைகள் - 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய். 6195 மற்ற புதிய சேலைகள் - 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய். 2140 பழைய சேலைகள் மற்றும் துணிமணிகள் - 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய். 389 ஜோடி காலணிகள் - 2 லட்சத்து 902 ரூபாய்.

இவ்வளவு சொத்துக்களும் ஜெயலலிதாவுக்கு எப்படி கிடைத்தன? ஊழல் சொத்துக்கள் தானே?

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் வெளியிட்ட விவரப்படி எடுத்துக் கொண்டால் 1-7-1991 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பீடு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய். 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு மே திங்கள் வரையில் ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதலமைச்சர்.

30-4-1996 அன்று ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய். எப்படி வந்தது இந்த 66 கோடி ரூபாய் சொத்துக்கள்? இதற்காகத்தானே இப்போது பெங்களூரில் சிறப்பு நீதி மன்றத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி வழக்கு நடைபெறுகிறது!

சொத்துக் குவிப்பு வழக்கினை வேறு மாநிலத்துக்கு - பெங்களூருக்கு மாற்றி தீர்ப்பு வழங்கிய போது உச்ச நீதிமன்றம் தெரிவித்தவை வருமாறு :-

1. "ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற பிறகு பல சாட்சிகள், தாங்கள் ஏற்கனவே கொடுத்திருந்த வாக்கு மூலத்திலிருந்து `பல்டி' அடித்துள்ளனர்''

2. "சுதந்திரமான நியாயமான முறையில் வழக்கு விசாரணை நடைபெறாவிட்டால் நீதி வழங்கும் முறையில் மக்களின் நம்பிக்கை சீர்குலைந்து விடும்''

3. "இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தைப் பார்க்கும்போது, நீதி தோல்வி அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது''

4. "வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஜெயலலிதா விசாரணை கோர்ட்டில், நீதி மன்றம் கேள்வி கேட்கும் போது சென்னையில் இருந்துகொண்டே ஆஜராகவில்லை''

5. "குற்றஞ்சாட்டப்பட்டவர் வெகு தூரத்தில் இருந்தால் மட்டுமே கேள்விப்பட்டியலைப் பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரேயொரு வழக்கில் விதிவிலக்காகக் கொண்டு வந்த முறையை - இந்த விவகாரத்தில் கடைப்பிடித்ததை ஏற்க இயலாது''

6. "ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இந்த வழக்கில் திரும்ப அழைக்கப்பட்ட 76 அரசு தரப்பு சாட்சிகளில் 64 பேர் `பல்டி' அடித்துள்ளனர். அவர்கள் மீது அரசு வக்கீல் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்பதும் கண்டனத்திற்குரியது''

7. "நீதி பரிபாலன முறையின் புனிதத்தையும் அதன் மீது சாதாரண மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நிலைநாட்ட இந்த வழக்கு விசாரணை கர்நாடக மாநில நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது''

இந்தத் தீர்ப்பினை 18-11-2003 அன்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சேமா ஆகியோர் அளித்ததோடு, அதனை முடிக்கும்போது, "தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் போதுமான முதல் நிலை ஆதாரங்கள் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகின்றபடியால் இவ்வழக்கை தமிழ்நாட்டில் நடத்தினால் நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே இவ்வழக்கு மாற்றப்பட வேண்டிய வழக்கேயாகும். நீதி வழங்கப்படுவது முக்கியமெனினும், நீதி வழங்கப்படுவதாக மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவதும் நீதிமன்றங்களின் கடமையாகும்; எனவே இந்த வழக்கு மாறுதல் செய்யப்படுகிறது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, கர்நாடக அரசோடு கலந்து பேசி, இந்த வழக்கிற்காக ஒரு சிறப்பு நீதி மன்றத்தை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆறு வார காலத்திற்குள் பெங்களூரில் அமைக்க வேண்டும். குற்றவியல் வழக்குகளில் பயிற்சி பெற்ற முதுநிலை வழக்கறிஞர் ஒருவரை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிப்பதுடன், அவருக்கு இளநிலை வழக்கறிஞர் ஒருவரும் அமர்த்தப்பட வேண்டும். வழக்கறிஞர் ஊதியம் உட்பட, கட்ட ணங்கள் அனைத்தையும் கர்நாடக அரசு செலுத்த வேண்டும்; பிறகு தமிழ்நாடு அரசு அதனை கர்நாடக அரசுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

தலைமை நீதிபதியினால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர் ஏற்கனவே பிறழ்சாட்சியம் அளித்த-பல்டி அடித்த அரசுத் தரப்பு சாட்சிகளை மீண்டும் அழைத்து மறு விசாரணை செய்வதுடன், வேண்டுமென்றே மாற்றி சாட்சியமளித்த அந்தச் சாட்சிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளை தனியே எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றது. சாட்சிகளுக்கு மிரட்டுதல் இருப்பதாக கருதும் பட்சத்தில், அவர்களுக்கு கர்நாடக அரசு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் கேள்வி எழுப்பப்படும்போது நீதிமன்றத்தில் தவறாது ஆஜராவதுடன், இவ்வழக்கை தினமும் எடுத்து விசாரிக்க வேண்டும். வழக்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்பு நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்," என்று கூறியிருக்கிறார்கள்.

இவ்வளவு புகழுக்கும், பெருமைக்கும் உரிய ஜெயலலிதா ஊழல் பற்றி அறிக்கை விடலாமா?

பெங்களூர் சிறப்பு நீதி மன்றத்தில் தற்போது நடைபெறும் சாட்சிகளின் விசாரணை முடிந்து என்ன தீர்ப்பு அளிக்கப்படவிருக்கிறதோ என்று காத்திருக்கும் நிலையிலே உள்ள ஜெயலலிதா ஊழலைப் பற்றி அறிக்கை விடலாமா? அதைப் படிப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா? ஊழல் என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அளவிற்கு தன்னை உத்தமியாகக் கருதிக் கொண்டு, ஜெயலலிதா ஊழலைப் பற்றி கேள்வி கேட்கலாமா?

நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைத்தே தீர வேண்டுமென்று நாடாளுமன்றத்தையே நடத்த விடாமல் செய்த பெரிய எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது அதைப் பற்றி வேகமாகக் குரல் கொடுக்க வில்லையே; அது ஏன்? ஏன்?

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு