Published:Updated:

விஜயகாந்தின் ‘மோடி’ மஸ்தான் வியூகம்!

களத்தில் மாறும் காட்சிகள்ப.திருமாவேலன், ஓவியம்: கண்ணா

விஜயகாந்தின் ‘மோடி’ மஸ்தான் வியூகம்!

களத்தில் மாறும் காட்சிகள்ப.திருமாவேலன், ஓவியம்: கண்ணா

Published:Updated:
##~##

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழகக் கட்சிகளின் கூட்டணியில் குழப்பங்கள் விலகி, லேசாகத் தெளிவு பிறப்பதாகத் தெரிகிறது!

'நாற்பதும் நமதே’ என்று கிளம்பிய ஜெயலலிதா, தன்னுடைய அணியில் ஒருவேளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் சேர்த்துக்கொள்வார். பிரகாஷ் காரத் சந்திப்பு இதனை உறுதிப்படுத்துகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலியப்போய் ஆதரவு தெரிவித்ததும் இதனால்தான். அகில இந்திய அளவில் மூன்றாவது அணி அமைந்தால், அதில் சென்று சேருவதற்கான திட்டமும் ஜெயலலிதாவுக்கு உண்டு. இந்த அணிக்கான பிரதமர் வேட்பாளராகவும் ஜெயலலிதா மாறினாலும் ஆச்சர்யப்பட முடியாது. இதுதான் அ.தி.மு.க-வின் இன்றைய கூட்டணி நிலவரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க-வைப் பொறுத்தவரை காங்கிரஸை விட்டு விலக முடியாத நெருக்கடி அந்தக் கட்சிக்கு இருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்னையில் வீராப்புடன் வெளியேறுவதாக அறிவித்த கருணாநிதி, ராஜ்யசபா பதவியைக் கைப்பற்றுவதில் ரவுண்டு கட்டி ரகசியத் தூதர்களை அனுப்பி காங்கிரஸ் வாக்குகளைக் களவாடினார். 'இதற்குத்தானே காத்திருந்தோம்’ என்பது மாதிரி காங்கிரஸும் வலிய வந்து தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை தி.மு.க. தரப்பைத் தொடர்ந்துகொண்டு இருப்பதும், அமலாக்கப் பிரிவு தன்னுடைய குற்றப்பத்திரிகையை இன்னும் தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதும் அவர்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. 'காங்கிரஸைப் பகைத்துக்கொண்டால் மீண்டும் 2ஜி ஷாக் அடிக்கலாம்’ என்று தி.மு.க. சந்தேகப்படுகிறது. அந்த பயத்தை அப்படியே தக்கவைத்து வருகிறது காங்கிரஸ். காங்கிரஸின் பல நடவடிக்கைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. காங்கிரஸின் இந்த மிரட்டலுக்குக் காரணம், அவர்களுக்கும் தி.மு.க-வை விட்டால் வேறு வழி இல்லை. எனவே, தி.மு.க-வுடன் சேராவிட்டால் ஜெயிக்க முடியாது என்று காங்கிரஸும், காங்கிரஸுடன் சேராவிட்டால் கட்சி நடத்த முடியாது என்று தி.மு.க-வும் நினைப்பதால்தான், ஒருவருக்கொருவர் நட்பாக இருந்தாக வேண்டிய நெருக்கடி!

விஜயகாந்தின் ‘மோடி’ மஸ்தான் வியூகம்!

ஆனால், '25-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டுமானால், தே.மு.தி.க-வும் நம்மோடு சேர்ந்தால்தான் நல்லது’ என்று காங்கிரஸும் தி.மு.க-வும் நினைக்கின்றன. 'நாங்கள் கூட்டணி பேசினால், விஜயகாந்த் ஏற்க மாட்டார். 18 தொகுதிகளை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். காங்கிரஸும் தே.மு.தி.க-வும் தலா 11 தொகுதிகளைப் பிரித்துக்கொள்ளட்டும். ஆனால், தே.மு.தி.க-வை அழைத்து வரவேண்டியது உங்கள் வேலை’ என்று காங்கிரஸ் பக்கமாக பந்தை உருட்டிவிட்டுள்ளார் கருணாநிதி. இதை வைத்து காங்கிரஸும் காய்களை நகர்த்தியது. விஜயகாந்துக்கு, ராகுல் பிறந்த நாள் வாழ்த்துக் கூறியதன் பின்னணி இதுதான். ஆனால், விஜயகாந்த் யோசிக்கிறார்.

'கருணாநிதியுடன் கூட்டணி வைத்தால் சிக்கல். 'சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் சேர்ந்து போட்டி... நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதியுடன் சேர்ந்து போட்டி...’ என்று கிளம்பும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதற்கே நேரம் கழிந்துவிடும். இரண்டு பேரையும் எதிர்த்துப் பேசினோம் என்பதற்காகத்தானே நமக்கு மரியாதை வந்தது. எனவே, கருணாநிதியுடன் கூட்டணி வைத்தால், உள்ளதும் போய்விடும்’ என்று விஜயகாந்த் நினைக்கிறார்.

'ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளோடு மோதக் கூடாது. இப்போது நம்முடைய எதிரி ஜெயலலிதாதான். அவரைத் தோற்கடிக்க யாரோடும் கூட்டணி சேரலாம்’ என்று சிலர் விஜயகாந்துக்குத் தூபம் போட்டுப் பார்த்தார்கள். ஆனாலும் அவர் அசரவில்லை. 'தி.மு.க-வுடன் சேராவிட்டாலும் காங்கிரஸுடன் மட்டும் சேர்ந்து கூட்டணி அமைக்கலாம்’ என்றும் ஒரு யோசனை.

'ஈழத் தமிழர் பிரச்னையில், காங்கிரஸின் பெயர் தமிழகத்தில் அநியாயத்துக்குக் கெட்டுக்கிடக்கிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் காங்கிரஸோடு கூட்டணி வைப்பது தற்கொலைக்குச் சமம். ஈழத் தமிழர் நலனுக்காக பல ஆண்டுகள் பிறந்த நாள் கொண்டாடாதவர் நீங்கள். மகனுக்கு 'பிரபாகரன்’ என்று பெயர் வைத்துள்ளீர்கள். அப்படிப்பட்டவர் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால், இருக்கும் செல்வாக்கு மொத்தமும் சரிந்துபோகும்’ என்று நெருக்கமான சிலர் சொல்லவே யோசிக்கிறார் விஜயகாந்த்.

இவை அனைத்தையும்விட விஜயகாந்திடம் சொல்லப்பட்ட முக்கியமான ஒரு லாஜிக்தான், 'தி.மு.க. வேண்டாம்’ என்ற முடிவை நோக்கி அவரை நகர்த்துவதாகச் சொல்கிறார்கள். 'இது நாடாளுமன்றத் தேர்தல். தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுகிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும். அப்போது கருணாநிதி முதல்வர் என்று சொல்லியா நாம் வாக்குக் கேட்க முடியும்? அல்லது அப்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து பிரிந்து வந்து, 'விஜயகாந்த்தான் முதல்வர்’ என்று வாக்குக் கேட்டு, கருணாநிதியைக் குறை சொன்னால் மக்கள் நம்மைத் திட்டித்தீர்க்க மாட்டார்களா?

'நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு என்பது நாடாளுமன்றத் தேர்தலோடு முடிவது அல்ல. அடுத்த சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து யோசிக்க வேண்டிய விஷயம்’ என்று விஜயகாந்துக்குச் சொல்லப்பட்டுள்ளது. இதன் பிறகுதான், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் இணைய வேண்டாம் என்ற முடிவுக்கு விஜயகாந்த் வந்தார்.

சில நாட்களுக்கு முன் நடந்த தே.மு.தி.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பாதிக்கும் மேல் மத்திய அரசையும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சித்ததன் பின்னணி இதுதான். தே.மு.தி.க-வில் இருந்து தெளிவான அரசியல் நிலைப்பாட்டுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது இதுவே முதல்முறை என்பதோடு இணைத்துப் பார்த்தால், அதன் முக்கியத்துவம் புரியும்.

மீனுக்குக் காத்திருந்த கொக்காக, பாரதிய ஜனதாவுக்கு இது தெரியவந்ததும் அவர்கள் விஜயகாந்துக்கு வலை விரிக்க ஆரம்பித்தார்கள். 'பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம். ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால், அப்போது தேவைப்பட்டால் பி.ஜே.பி. ஆட்சியை ஆதரிப்பது’ என்பதுதான் ஜெயலலிதாவின் நிலைப்பாடு. இது தெரிய வந்த பிறகு, பி.ஜே.பி. தன்னுடைய பார்ட்னர்களைத் தேடி அலைய ஆரம்பித்தது. தி.மு.க., அ.தி.மு.க., என இரண்டு கட்சிகளாலும் குத்துப்பட்ட வைகோவிடம், டெல்லி பி.ஜே.பி. பிரமுகர்கள் பேசினார்கள். 'தி.மு.க., காங்கிரஸ் இரண்டுமே இனத்துரோகக் கட்சிகள். அ.தி.மு.க. எங்களை இழிவுபடுத்திய கட்சி. எனவே இவர்களோடு உறவு இல்லை’ என்பதைத் தெளிவுபடுத்திய வைகோவை,  தங்கள் அணிக்குள் கொண்டுவர பி.ஜே.பி. எடுத்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. 'காங்கிரஸைக் கருவறுப்போம்’ என்று வைகோ பேச ஆரம்பித்திருப்பது இதற்குப் பிறகுதான். இதைத் தொடர்ந்து விஜயகாந்த் தரப்புடன், பி.ஜே.பி. சார்பில் பேசப்பட்டது.

விஜயகாந்தின் ‘மோடி’ மஸ்தான் வியூகம்!

இவர்களுக்கு விஜயகாந்த் ஒரே ஒரு நிபந்தனைதான் விதித்தார். 'நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல். ஒருவேளை பி.ஜே.பி. பெரும்பான்மையோடு வென்றால், பிரதமர் பதவியில் உட்காரப்போவது நரேந்திர மோடி. அதனால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. ஆக, தமிழகத்தில் இந்தக் கூட்டணியின் தேவையும் அவசியமும் பி.ஜே.பி-க்குத்தான் அதிகம். இப்படி ஓர் அணி அமைப்பதற்கான முயற்சிகளை பி.ஜே.பி-தான் எடுக்க வேண்டும். இதனைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டே செய்யட்டும். ஏனென்றால், நாளையே திடீரென்று, 'பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்கத் தயார்’ என்று ஜெயலலிதா அறிவித்தால், உடனே உங்கள் தலைவர்கள் போயஸ் கார்டனுக்குப் போய்விடுவார்கள். நடுவில் நாங்கள் அவமானப்பட்டு நிற்க முடியாது’ என்பது விஜயகாந்தின் நிபந்தனை.

பொதுவாக தேசியக் கட்சிகளில் மாநிலத் தலைமை ஒரு முடிவு எடுக்கும், டெல்லித் தலைமை வேறு ஒரு முடிவு எடுக்கும். காங்கிரஸைப் போலவே பி.ஜே.பி-யிலும் இதில் வித்தியாசம் எதுவும் இல்லை. இதனை விஜயகாந்த் உணர்ந்திருப்பதால்தான் இந்த நிபந்தனை.

விஜயகாந்த் கேட்பதிலும் அர்த்தம் உண்டு. 'அ.தி.மு.க.வா... தே.மு.தி.க.வா?’ என்று கேட்டால், பி.ஜே.பி. யானை அ.தி.மு.க-வுக்குத்தான் மாலை அணிவிக்கும். ஆனால், பி.ஜே.பி. பக்கம் ஜெயலலிதா வர மாட்டார் என்று சிலர் உறுதியாகச் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால், கடந்த இரண்டு ஆண்டுகளாக எதைச் சொல்லிக் கட்சி வளர்த்தாரோ, தொண்டர்களை உற்சாகப்படுத்தினாரோ... அதையே அவர் கைவிட்டதாக ஆகிவிடும். 'அடுத்த பிரதமர் அம்மாதான்’, 'தரணியை ஆளப்போகிறார் தங்கத்தாரகை’ என்று இதுவரை கட்சி மேடைகளிலும், திருமண மேடைகளிலும் சொல்லி தொண்டர்களின் கைத்தட்டல்களை அமைச்சர்கள் வாங்கியபோது, டெல்லிக்கே போய்விட்டதாக ஜெயலலிதா மகிழ்ச்சியில் திளைத்தார்.

ஒருவேளை, 'மோடி அலை’ காரணமாக பி.ஜே.பி-யுடன் கூட்டணி என்று அறிவித்தால் 'அம்மாதான் பிரதமர்’ என்று இதுவரை சொன்னது எல்லாம் 'சும்மா’ என்று ஆகிவிடும். 'மோடியை பிரதமர் ஆக்குங்கள்’ என்று சொல்லும் பலவீனமான மனநிலையை ஜெயலலிதா அடைந்துவிட்டதாக அவரே அறிவித்துக்கொள்வாரா என்ன?

இருந்தாலும், 'பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி’ என்ற அறிவிப்பு உண்டாக்கியுள்ள அதிர்வுகளை ஜெயலலிதா உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். வாக்காளர்களிடையே 'மோடி மேஜிக்’ இமாலய மாற்றத்தை உண்டாக்காது என்பதில் அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்தால், கூட்டணி விஷயத்தில் ஜெயலலிதா நிலை மாறாது என்றே தெரிகிறது!

தமிழகத்தில் பி.ஜே.பி-க்கான வாக்கு சதவிகிதம் மிகமிகக் குறைவுதான். ஆனால், நரேந்திர மோடிக்கான செல்வாக்கு கூடிக்கொண்டே இருக்கிறது. இதுவே காந்தம் போல விஜயகாந்தையும் வைகோவையும் அந்தப் பக்கமாக ஈர்க்கிறது. தேர்தல் நெருக்கத்தில் மேலும் சில கட்சிகள் இந்த அணியோடு கைகோக்கலாம்.

தமிழகத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. அல்லாத ஒரு கூட்டணி உருவாவதற்கான சாத்தியம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இது கனிந்தால், அந்த இரண்டு கழகங்களுக்கும் நஷ்டத்துடன்கூடிய கஷ்டம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism