பாடம் கற்பிக்க மிகச் சிறந்த வழி - அவன் கண் முன்னால் சிறப்பாக வாழ்ந்து காட்டுவதுதான்!' என்பதே நன்னெறி!
பல ஜாம்பவான் தேசங்களே பொருளாதாரச் சரிவு, உள்நாட்டுக் குழப்பம் என்று தடுமாறித் திரிகையில், இந்தியா வளர்கிறது! ஆயிரம் பிரச்னைகள் நமக்கு இருந்தாலும், சர்வதேச அளவுகோலில், நம் வளர்ச்சி விகிதம் சிறப்பானது.
விளைவு - அந்நிய எதிரிகளின் அளவற்ற பொறாமை!
இந்த நிலையில்தான் உலகமே கவனிக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தலைநகரில் நடக்கின்றன. திக்கெட்டிலும் இருந்து விளையாட்டு வீரர்கள் நம் தேசத்துக்கு வரத் துவங்கும் நேரத்தில், டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஒரு தீவிரவாத இயக்கம். காமன்வெல்த் போட்டிகள் களைகட்டி, அதன் மூலம் இந்தியாவுக்குப் பெருமை சேர்ந்துவிடக் கூடாது என்ற பொறாமையும் பதைபதைப்பும் தெரிகிறது!
அடுத்தபடியாக, எதிரி வல்லூறுகள் வக்கிர புத்தியோடு வட்டமிட்டுக் காத்திருப்பது அயோத்தி விவகாரம் குறித்த தீர்ப்புக்காக!
நாட்டுக்குள் ஊடுருவி குண்டுகள் வெடிப்பது, எல்லையை ஆக்கிரமித்து யுத்தக் குரல் விடுப்பது, கள்ள நோட்டைப் புழக்கத்தில்விட்டு பொருளாதார உறுதியைப் பதம் பார்க்க முயல்வது... இவற்றோடு வதந்திகளைப் பரப்பிவிட்டு அதன் மூலம் ரத்தம் குடிப்பதுபோன்றவை எதிரிகளின் வழக்கமான ஆயுதங்கள்.
இந்தியனின் விரலைவைத்தே இன்னொரு இந்தியனின் கண்ணைக் குத்திப் பார்க்கும் வாய்ப்பாக அயோத்தி தீர்ப்பைக் கருதும் எதிரிகள் அரங்கேற்றத் துடிக்கும் நாடகத்துக்கு, நம்மில் யாரும் பாத்திரம் ஆகிவிடக் கூடாது.
அகிம்சை, தேசபக்தி, சகிப்புத்தன்மை, நீதியின் மீதான நம்பிக்கை ஆகிய நான்கு தூண்களின் மீதுதான் இந்தத் தருணத்தில் நம் நாட்டின் எதிர்காலமும் கௌரவமும் வீற்றிருக்கின்றன. அதை உறுதியாக மனதில்கொள்வோம்!
சோதனை நெருப்பு தகிக்கின்றபோதும் மாற்றுக் குறையாத சொக்கத் தங்கமாக அமைதியே நம் குணம் என்று நிரூபித்து... எதிரிகள் முகத்தில் கரி பூசுவோம்!
|