ஆனாலும், காங்கிரஸ் மீது, விஜயகாந்த் இன்னமும் அவநம்பிக்கையு டன் இருக்கிறார். 'தி.மு.க-விடம் தங்களுக்கு 80-க்கும் அதிகமான தொகுதிகளைப் பெற நினைக்கிறது காங்கிரஸ். அது கிடைக்காவிட்டால், விஜயகாந்த்துடன் போய்விடுவோம்' என்று கருணாநிதியை மிரட்டுவதற்கான கருவியாகவே காங்கிரஸ் தன்னைப் பயன்படுத்துகிறதோ என்பது அவர் சந்தேகம். 'கூட்டணி அமைப்பதாக இருந்தால், கடைசி வரை தி.மு.க-வுடன் இருந்துவிட்டு, தேர்தல் தேதி அறிவித்த வுடன் தன்னுடன் சேருவதைவிட, முன்னதாகவே வந்தாக வேண்டும்' என்று அவர் விரும்புகிறார். ஆர்வமாக வந்து பேசுவதும், பிறகு பதில் தராமல் பம்மிவிடுவதும் காங்கிரஸின் வழக்கமாக இருப்பது அவருக்கு வருத்தம் தரும் சங்கதி.
இந்த ஆட்டங்களை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஆரம்பத்தில், காங்கிரஸ் கட்சியைத் தி.மு.க-விடம் இருந்து பிரித்து, தன்னுடைய அணியில் சேர்க்கவே விரும்பினார். டெல்லிக்கு இவரது தூதர்களும் போனார்கள். ஜெயலலிதாவுக்கு அறிமுகமான சில காங்கிரஸ் பிரமுகர்களும் விரும்பினார் கள். ஆனால், அசையவில்லை டெல்லி. 'கருணாநிதியுடன் இருப்போம். விலகினால் தனி அணிதான். அ.தி.மு.க-வுடன் வேண்டாம்' என்பது ராகுல் வட்டாரத் திட்டம். 'காங்கிரஸ் - விஜயகாந்த்' கூட்டு சேருவதை ஜெயலலிதா விரும்பவில்லை. 'தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் இரண்டாகப் பிரிந்து, அது கருணாநிதிக்குச் சாதகமாகவே அமையும்' என்று நினைக்கிறார். எனவே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலர் அச்சத்தைவிட்டு 'விஜயகாந்த்தை இணைத்துக்கொள்ளலாம்' என்று ஜெயலலிதாவிடம் சொல்ல, 'கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவரை எதிர் பார்த்தேன். கடைசி நேரத்தில் மனம் மாறிவிட்டார். எனவே, விஜயகாந்த்தை முழுமையாக நம்ப முடியாது' என்று அவர் பதில் அளித்தாராம்.
|