"தி.மு.க. அரசை வீழ்த்துவதற்கு மக்கள் மன்றத்தில் நாங்கள் வெறிக் கூச்சல் இடவில்லை. பேசத்தான் செய்கிறோம். எங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து, அவருக்குத்தான் வெறி கிளம்பி இருக்கிறது.
நாங்கள் வீழ்த்த நினைப்பது... கருணாநிதியின் குடும்ப ஆட்சியை. இப்போது நடப்பது ஒரு குடும்பத்தின் ஆட்சி. சம்பத்தின் மகன் ம.தி.மு.க-வில்தான் இருப்பான். தவறு ஏதும் இல்லை. ஆனால், கருணாநிதியின் வயதையத்த பெரியவரை மேலாதிக்கம் செய்து, அதிகாரம் செலுத்தும் விசித்திரம் தி.மு.க-வில் இருந்தால், அதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்பதற்காகத் தகுதி இல்லாதவர் மந்திரி ஆக்கப்பட்டால், அது என்ன ஆதிக்கம்? அறம் சார்ந்த அரசியலுக்குச் சம்பந்தம் இல்லாத ஒருவர், தனது இன்னொரு மகனுக்கு இடைஞ்சலாக இருக்கிறார் என்பதற்காக, அவரைச் சமாதானப்படுத்த ஒரு பரந்த அரசாங் கத்தின் பல்லாயிரம் கோடி புழங்கும் துறை தரப்படுமானால், அது குடும்ப அரசியலா... கொள்கை அரசியலா? தனது குடும்பத்தில் யாருக்கு என்ன பதவி, எந்தத் தகுதிக்காகத் தரப்பட்டது என்பதை நேர்மை இருக்குமானால், 'நெஞ்சுக்கு நீதி'யில் கருணாநிதி எழுதட்டும். ஆறு பேர் பவர் சென்டராக இருந்து தமிழ்நாட்டின் பவரைச் சூறையாடுகிறார்களே அதற்காகத்தான் இந்த ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.
நேயர் விருப்பத்தில் கேட்ட பாட்டையே திரும்பத் திரும்பப் போடுவது மாதிரி, முட்டை போட்டேன், டி.வி. கொடுத்தேன், அரிசி கொடுத்தேன், ஆம்புலன்ஸ் விட்டேன் என்று கருணாநிதி தனது சாதனையாகச் சொல்கிறார். இவை எல்லாம் திட்டங்கள்... சாதனைகள் அல்ல. திட்டம் வேறு... சாதனை வேறு. மேற்கு வங்காளத்துக்கும் வங்க தேசத்துக்கும் இருந்த ஃபராக்கி அணை பிரச்னையை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஜோதிபாசு இன்னொரு நாட்டின் அதிபராக இருந்த ஷேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேசி, ஒப்பந்தம் ஒன்றைத் தயாரித்து, அதில் நம்முடைய பிரதமர் தேவகவுடாவைக் கையெழுத்துப் போடவைத்தார்.அதுதான் சாதனை. கேரள மாநில முதலமைச்சர் அச்சுதானந்தனை முல்லைப் பெரியாறுக்காக, கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவை காவிரிக்காக இவர் எத்தனை தடவை பார்த்தார். இதுவரை பிரச்னையை முடிக்க முடிந்ததா கருணாநிதியால்? எமர்ஜென்சி வந்தபோது பயப்படாமல் எதிர்த்த கருணாநிதியால், இப்போது ஏன் முடியவில்லை? தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி தன்னுடைய குடும்பத்தினரது சொத்துக்கள் குவிந்துவிட்டன. பார்த்தார், மாநில நலன்கள் அனைத்தையும் காவு கொடுத்துவிட்டார். நூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்ததாக இருந்தால், அது சாதனையாகும். ஆளுக்கு அரைக் கிலோ அல்வா என்று அறிவிக்கப்போவதாகக் கேள்விப்பட்டேன். இதெல்லாம் சாதனையா?
கருணாநிதி ஆட்சியில்தான் அளவு சாப்பாடு 72 ரூபாய் ஆகி இருக்கிறது. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்குத் தர வேண்டாம். இரண்டு இட்லியை கருணாநிதியால் இலவசமாகத் தர முடியுமா? அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டு... என்று வார்த்தை ஜாலம் சொல்லி, தமிழ கத்தை இருட்டாக்கியதுதான் மிச்சம். மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் அனைத்துமே முடக்கப் பட்டுவிட்டன. 'கருணாநிதி நடத்தும் மாநாட்டுக்கு சிவத்தம்பி வரலாம், செந்தமிழ்த் தாய் வர மாட்டாள்' என்று எழுதியதற்காகவே பழ.கருப்பையா கையை பட்டப் பகலில் அடியாட்கள் முறுக்கி உடைத்திருக் கிறார்கள். தா.பாண்டியன் காரை உடைக்கிறார்கள், பாரதிராஜா அலுவலகம் தாக்கப்படுகிறது, பல்கலைக் கழகத் துணைவேந்தரை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அடிக்கிறார், சப்-கலெக்டர் ஜனார்த்தனனை மந்திரியின் ஆட்கள் சாதியைச் சொல்லி திட்டி மிரட்டு கிறார்கள், குடியாத்தம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. அனுப வித்த சித்ரவதைகள் எத்தனை, உமாசங்கர் ஐ.ஏ.எஸ் ஸைப் பந்தாடுகிறார்கள், சீமான் எப்போது வெளியே வருவார் என்றே தெரியவில்லை, வைகோ மீது வழக்குகள், என் மீது எல்லா ஊரிலும் வழக்குகள்... இப்படி கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்துவிட்ட இந்த ஆட்சியை எதற்கு வைத்திருக்க வேண்டும்?
|