Published:Updated:

ஊழலை பொறுத்துக்கொள்ள முடியாது: சோனியா காந்தி

ஊழலை பொறுத்துக்கொள்ள முடியாது: சோனியா காந்தி

புதுடெல்லி, டிச.20-2010

நாட்டில் ஊழலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று எச்சரிக்கை விடுத்தார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. ##~~##

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அக்கட்சியின் 83-வது அகில இந்திய மாநாடு டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இம்மாநாட்டின் முதல் நாளாளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியது:

"ஊழல் அல்லது தவறான நடவடிக்கை எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி பொறுத்துக் கொள்ளாது. கட்சியும் சரி, அரசும் சரி அது தொடர்பாக துரித நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். அதிகப்படியான எளிமை, கட்டுப்பாடு போன்றவை நம்முடைய வழிகளாக இருக்க வேண்டும்.

தங்களிடம் உள்ள அதிகப்படியான சொத்துகள் மற்றும் வசதி வாய்ப்பை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரசார் நடந்து கொள்ளக் கூடாது. அதன் மூலம், பிறருடைய கண்களை உறுத்துவதையோ மற்றவருக்கு பொறாமை ஏற்படுவதையோ அனுமதிக்க கூடாது.

ஊழலை முற்றிலுமாக ஒழிக்க தேர்தல் பிரசாரத்துக்கு அரசே நிதி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்து காங்கிரஸ் பரிசீலிக்கும். பொது வாழ்வில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள் மீதான அனைத்து ஊழல் வழக்குகளும் குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்யப்பட்டு விரைவாக விசாரிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான புதிய திட்டம் ஒன்றை அரசு பரிசீலிப்பது அவசியம். இதன்மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் விடுவிக்கப்படுவதும் விரைவு படுத்தப்படும்.

ஒப்பந்தங்கள் மற்றும் பொருட்கள் வாங்குவதில் முழுமையான வெளிப்படையான தன்மை இருக்கும் வகையில் தெளிவான நடைமுறைகளை அரசு உருவாக்க வேண்டும்.

நில ஒதுக்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தங்களுக்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை கைவிடுமாறு காங்கிரஸ் முதல்-மந்திரிகளையும் மத்திய, மாநில காங்கிரஸ் மந்திரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

இயற்கை வளங்களை பயன்படுத்துவதில் தான் ஊழல் குற்றச்சாட்டுகள் தோன்றுகின்றன. எனவே, இது போன்ற வளங்களை பயன்படுத்துவதில் `வெளிப்படையான ஒப்பந்த போட்டி நடைமுறை' கொண்டு வரப்பட வேண்டும்.

பொது வாழ்க்கையில் நேர்மையும் நாணயமும் அவசியம். எனவே, காங்கிரசார் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிரதிநிதிகளாக இருக்கும் நீங்கள், உங்களுடைய சொகுசு மற்றும் பகட்டான வாழ்க்கையை பகிரங்கமாக வெளிப்படுத்த கூடாது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை மந்திரக் கோல் மூலமாகவோ தனி நபர்கள் மூலமாகவோ வடிவமைத்து விட முடியாது. வெவ்வேறு திசைகளுக்கு செல்லாமல் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டமைப்பாக செயல்படுவதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பாராளுமன்றத்தை பா.ஜனதா முடக்குவதில் நியாயமே கிடையாது. பாராளுமன்றம் என்பது பிரச்சினைகளை விவாதிப்பதற்கான அமைப்பு. அதை முடக்குவதற்கு எந்தவித விதியையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்ட முடியாது.

இதுபோன்ற செயல் மூலமாக அரசியல் ரீதியாக 'பிளாக் மெயில்' செய்யும் நடவடிக்கையில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. அரசியல் ஆதாயத்துக்காக பாராளுமன்றத்தை பணயம் வைப்பதை ஏற்க முடியாது.

குற்றச்சாட்டு எழுந்த உடனேயே, விசாரணை நிலுவையில் இருக்கும் போதே முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இது போன்று செய்ததாக எத்தனை எதிர்க்கட்சிகள் கூற முடியும்? பா.ஜனதாவால் இதுபோன்று சொல்ல முடியுமா?

கர்நாடகம் மற்றும் பிற மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டுகளில் உள்ள பா.ஜனதாவால் இப்படி கூற முடியுமா? எனவே, காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூற பா.ஜனதாவுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

125 ஆண்டுகளை கடந்துள்ள நம்முடைய கட்சியின் இந்த மாநாட்டு செய்தியாக ஒன்றை கூறுகிறேன். காங்கிரஸ் கட்சி தனது பலத்தையும், பொறுப்பையும் முழுமையாக உணர்ந்து கொண்டு எதிர்காலத்தில் பலமாக கட்டமைக்கும் வகையில் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

நமது கட்சியின் தூண்களாக ஏழை மக்களும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும் உள்ளனர். அவர்களின் நலனே காங்கிரஸ் கட்சியின் விலைமதிப்பில்லா சொத்து. கட்சியில் ஏராளமான இளைஞர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க வேண்டும் என்பதற்காகவே கடந்த பீகார் தேர்தலில் சில முடிவுகளை மேற்கொண்டோ ம். அடி ஆழத்தில் இருந்து தொடக்கம் முதல் கட்சியை வளர்ப்பது என்பது எளிதான காரியம் அல்ல. எனினும், குறுக்கு வழியில் வளர்ச்சி காண விரும்பவில்லை.

எனவே, முன்பு பச்மார்கி, சிம்லா போன்ற இடங்களில் அடுத்தடுத்து மாநாடுகள் நடத்தப்பட்டது போலவே தொடர் மாநாடுகள் நடத்தப்படும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவிக்கும் புகார்களை காங்கிரசை சேர்ந்த மத்திய மந்திரிகள் சரியாக கவனிப்பதில்லை என நான் கருதுகிறேன்.

அனைத்து வகையான மதவாத அடிப்படை தீவிரவாதத்தை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது. பெரும்பான்மை தீவிரவாதம் அல்லது சிறுபான்மை தீவிரவாதம் என எதுவாக இருந்தாலும் அவை அபாயகரமானதுதான். அவை ஒடுக்கப்பட வேண்டும். குறுகிய அரசியல் லாபத்துக்காக மதவாதம் தூண்டப்படுகிறது. இந்தியாவின் கலாசாரம் மற்றும் மதசார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து மதங்களுக்கும் சம மரியாதையை நாம் அளிக்கிறோம்.

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது. அரசியல் பாதையில் அவர்கள் வருவதற்கான வழிகள் உயிரோட்டமாக உள்ளன. காஷ்மீர் தீவிரவாதிகளை நாம் துணிச்சலாக எதிர் கொண்டு வருகிறோம். பல்வேறு மாநிலங்களில் வன்முறைகள் மூலமாக அடிப்படை ஜனநாயக முறையை சீர் குலைக்க முயற்சிக்கின்றனர். இது போல, வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாத குழுக்களால் அமைதிக்கு இடை௯று ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமாறும், பணவீக்கத்தை சரியான அளவில் வைத்திருக்குமாறும் அரசை கேட்டுக் கொள்கிறேன். பணவீக்கம் என்பது முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

சமீபகாலமாக, விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவதும் கவலை அளிக்கிறது. ஆனால், நாட்டில் சில முக்கிய சவால்கள் எதிர் கொண்ட போதிலும் அதிகபட்ச பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. அதற்காக பிரதமரை பாராட்டுகிறேன்.

கடந்த 2004-ம் ஆண்டு நமது பிரதமர் பதவியேற்றதில் இருந்தே பொருளாதார வளர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. சர்வதேச நிதி நெருக்கடிக்கு முன்பு 9 சதவீதமாக பொருளாதார வளர்ச்சி இருந்தது. ஆனால், அந்த நெருக்கடியை சமாளித்து மீண்டும் 7.4 சதவீத வளர்ச்சியை எட்டி இருக்கிறோம்," என்றார் சோனியா.

மீண்டும் தலைவரானார் சோனியா..

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 83வது மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், இதற்கான தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், சோனியா காந்தி தொடர்ந்து 4-வது முறையாக கட்சி தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதன் மூலம் 125 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் அதிக ஆண்டுகள் தலைவர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர், சோனியா காந்தி.

புதிய சட்ட திருத்தத்தின் மூலம் இந்த முறை 5 ஆண்டுகளுக்கு அவர் தலைவர் பதவியில் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு