Published:Updated:

ஆர்.எஸ்.எஸ்.-சின் தீவிரவாத தொடர்பை விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் தீர்மானம்

Vikatan Correspondent

புதுடெல்லி, டிச.20,2010

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், அதன் சகோதர அமைப்புகளுக்கும் தீவிரவாத செயல்களில் உள்ள தொடர்பை தீவிரவமாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ##~~##

மேலும், வகுப்புவாதத்தை முறியடிக்க கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களாவன:
 

1. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், அதன் சகோதர அமைப்புகளுக்கும் சில தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பது சில வழக்குகள் மூலம் அம்பலமாகி உள்ளது.. எனவே இது பற்றி அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

2. நாட்டின் பாதுகாப்புக்கு சவால் விடும் தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை முழுமையாக உறுதியுடனும், வலுவுடனும் எதிர்க்க வேண்டும்.

3. அரசியலில் பிஜேபி இரட்டை வேடமும், இரட்டை பேச்சும் பேசுகிறது. அக்கட்சி ஆளும் மாநிலத்தில் ஊழல்களை மறைக்கிறது. அதே நேரத்தில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுகிறது. பிஜேபி ஆளும் மாநில ஊழல்களை வெளியே கொண்டு வரவேண்டும்.

4. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாபஸ் பெற்ற பின், காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஆனால் அக்கட்சி ஆளும், மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடக்கும் ஊழல்கள் பற்றி அக்கட்சி பேச தயங்குவது ஏன்?

5. அரசு துறைகளில் மட்டும் இன்றி தனியார் நிறுவனங்களிலும், மலைவாழ் மக்கள், பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், இதர பிற்பட்டோர் பிரிவில் இடம் பெற்றுள்ளோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. இந்திய மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் 35 வயதில் இருப்பவர்கள்தான். எனவே அந்த வயதையொட்டி இருப்பவர்களை ஈர்க்கும் விதத்தில் காங்கிரஸ் செயல்பட வேண்டும்.

7. மத்தியில் கூட்டணி தேவைப்படுகிறது. எனவே ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து ஆட்சி நடத்தி வருகிறோம். என்றாலும், மாநிலங்களில் கட்சி தொண்டர்கள் இன்னும் அதிக அளவில் காங்கிரஸ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.