Published:Updated:

ஓணம்: முதல்வர், கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து

Vikatan Correspondent
ஓணம்: முதல்வர், கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து
ஓணம்: முதல்வர், கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து

சென்னை, செப்.8,2011

ஓணம் பண்டிகையையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ##~~##

ஓணம்: முதல்வர், கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருமால் வாமன அவதாரம் பூண்டு மாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வண்ணம் மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்கவும், அவர்களை ஆண்டுதோறும் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி மாபலிச் சக்கரவர்த்தி மக்களைக் காண வரும் நன்நாளே திருவோணம் திருநாளக் கொண்டாடப்படுகிறது.

'அத்தம் பத்து ஓணம்' என்று பத்து நாட்கள் மகிழ்ந்து கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, தங்கள் வீட்டின் வாயிலில் அரசி மாவினால் பெரிய கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்களால் அலங்கரித்து, குத்து விளக்கேற்றி, இல்லம் எல்லாம் மணம் கமழ, மக்கள் உள்ளம் எல்லாம் மகிழ, ஓணம் பண்டிகை கொண்டாடுவர்.

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும். அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்தத் திருஓணத் திருநாளில் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஓணம்: முதல்வர், கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் நாளை ஓணம் திருநாள் மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது. கேரள மாநில மக்கள் தமது இனிய பண்பாட்டுத் திருநாளாகவும், அவர்களின் மிக முக்கியமான அறுவடைத் திருநாளாகவும் வண்ண மயமாக கலைமணம் கமழக் கொண்டாடுவது ஓணம் திருநாள்.

இத்திருநாள் ஆணவம், அகம்பாவம், சூழ்ச்சி, வஞ்சகம் முதலிய குணங்கள் மக்கள் வாழ்வில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதையும், அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் மனித சமுதாயத்திற்கு உணர்த்திடும் நன்னாளாகும்.

தமிழ் சமுதாய மக்களுக்காக மட்டுமல்லாமல் தமிழகத்தில் வாழும் அண்டை மாநில மக்களின் நலவாழ்விலும், வளவாழ்விலும் எப்பொழு தும் உரிய கவனம் செலுத்தி வருவது திமுக என்பதை சுட்டிக் காட்டி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவர் வாழ்விலும் வளம் குவிய, நலம் பொலிய என் இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்," என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ஓணம்: முதல்வர், கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "கேரளாவை ஆட்சி செய்த மன்னர்களில் சிறந்த மாமன்னன் மாபலி சக்கரவர்த்தி. கிருஷ்ண அவதாரத்தில் வாமனனாக அவதரித்தவர் கிருஷ்ண பரமாத்மா. அவர் மாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி நிலம் கேட்டு மண்ணையும், விண்ணையும் அளந்து மூன்றாம் அடிக்கு வேறு இடம் இல்லாததால் அந்த மாமன்னரே தன்னுடைய தலை மீது காலடியை எடுத்து வைக்கச் சொன்னார்.

அதனால் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்த மாமன்னர் கிருஷ்ணரிடம், தான் திருவோண நாள் அன்று கேரள மாநிலத்திற்கு வருகை தருகின்ற வரத்தை விரும்பி பெற்றார். அந்த மாமன்னர் தன்னுடைய மக்களை சந்திக்க வருகின்ற நாளே திருவோண நாளாக கேரள மக்களால் கொண்டாடப்படுகிறது.

அந்த நன்னாளை, அந்த மக்கள் ஓணம் பண்டிகை என்று அழைத்து சிறப்பாக ஆண்டுதோறும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று நல்வாழ்வு பெற தே.மு.தி.க. சார்பில் இதயமார்ந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.