மகிஷாசுரனுடன் யுத்தம் நடத்தி, அவனை துர்க்கை வதம் செய்து வெற்றி கண்ட நாள்தான் விஜயதசமி என்பது இந்து மத நம்பிக்கை. இந்தப் பருவத்தின் போது நடக்கின்ற தசரா கொண்டாட்டம் கர்நாடக மாநிலத்தில் ரொம்பவே பிரபலம்!
'தசரா உங்களுக்கு மட்டும்தானா? நாங்களும் கொண்டாடிக் காட்டுகிறோம்' என்று 'காரியக்கார' கோமாளிக் கூத்தை, இம்முறை அரங்கேற்றிவிட்டார்கள் கர்நாடக அரசியல்வாதிகள்.
வெட்ட வெட்ட விழுந்து, மீண்டும் ஒவ்வொரு துளி ரத்தத்தில் இருந்தும் உயிரோடு எழுந்து, உறுமும் மகிஷாசுரனை ஒழிக்க துர்க்கை எத்தனை பாடுபட்டாளோ தெரியாது. ஆனால், கட்சித் தாவல், ஆதரவு வாபஸ், ஆட்சிக் கவிழ்ப்பு என்று புதுப் புது கோர ரூபங்களை வாய்ப்பு கிடைத்தபோது எல்லாம் காட்டும் தங்கள் மாநிலத்து அசகாயசூரர்களை என்னதான் செய்வது என்று புரியாமல் விழிக்கிறார்கள் மக்கள்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதி விளையாட்டில், யார் மீதும் யாருக்கும் பரிதாபம் எழவில்லை. கவிழ்க்கப் பார்த்தவர்களுக்கும் சரி... காப்பாற்றிக்கொள்ளப் பாடுபட்டவர்களுக்கும் சரி... உண்மையான நோக்கம் மக்கள் சேவை அல்ல என்பது தெளிவாகவே தெரிந்துவிட்டது.
அரசியல் என்பது பதவிக்காகவே... பதவி என்பது பணம் குவிப்பதற்காகவே... பணம் என்பது மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, சேர்த்த சொத்துக்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவே என்பதுதானே இவர்களின் எழுதப்படாத ஜனநாயக இலக்கணம். தேசபக்தி, நேர்மை, எளிமை, தன்னலம் அற்ற மக்கள் சேவை ஆகிய குணங்களைக்கொண்ட அரசியல் தலைவர்கள், 'அருகி வரும்' உயிரினங்களாக மாறிவிட்டனர்.
மக்கள் பணத்தைச் சுரண்டிச் சேர்த்த காசு, பணம், கார், பங்களாவை வெளிப்படையாகவே அலங்கார கொலுவைத்து, அதை வாய் பிளந்து வேடிக்கை பார்க்கும் வாக்காளர்களுக்கு, தேர்தல் நவராத்திரியின்போது கொஞ்சூண்டு 'சுண்டல்' மட்டும் தந்து சமாளிக்கும் 'அரசியல் திறமை'யை என்னவென்பது!
|