டெல்லி, ராஜஸ்தான், அஸ்ஸாம், ஆந்திரா, ஹரியானா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. காஷ்மீரிலும், மகாராஷ்டிராவிலும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தியாவை ஆளும் பொறுப்பில் காங்கிரஸ் இருந்தாலும், பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க் கட்சியாகவே இருப்பது நல்லது அல்ல. எனவே, ஆளும் கட்சியாகவோ, அல்லது அமைச்சரவையில் அங்கம் வகித்து கூட்டணி ஆட்சிப் பொறுப்பு ஏற்க, எங்கே எல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கு எல்லாம் முயன்று பார்க்க வேண்டும் என்பது ராகுலின் மனப்போக்கு. இந்த அடிப்படையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஓர் அணியை அமைப்பது, அல்லது தாங்கள் இடம்பெறும் அணியில் பாதி இடங்கள் வரை கேட்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இப்படி அமைத்தால் மட்டுமே, தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தயவை நம்பி இருக்கும் ஆட்சியைத் தமிழகத்தில் உருவாக்க முடியும் என்று நினைக்கிறார்கள். தி.மு.க. மீது பட்டுக்கொள்ளாமல் சோனியா பேசுவதற்கு இதுதான் காரணம்!
இரண்டாவதாகக் கூறப்படும் செய்தி, பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. அங்கு அக்டோபர், நவம்பரில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் ஓர் அணியாகவும், லாலு பிரசாத் மற்றும் பஸ்வான் ஓர் அணியாகவும், இன்றைய முதல்வர் நிதீஷ், பாரதிய ஜனதாவுடன் இணைந்தும், மூன்று அணிகள் களத்தில் உள்ளன. காங்கிரஸ் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை இல்லை என்றாலும், நிதீஷ்குமார் எவ்வளவு வெற்றி பெறுகிறார் என்பதைப் பார்த்து, காங்கிரஸ் - நிதீஷ்குமார் கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கான ரகசிய எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவைப் பொறுத்து, தமிழக நிலைமையில் காங்கிரஸின் எண்ணங்கள் மாறும்.
இரண்டுக்கும் என்ன தொடர்பு என்றால், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு நாடாளுமன்றத்தில் 20 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். நிதீஷ் - காங்கிரஸ் உறவு ஏற்பட்டால், இந்த 20 உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும். அப்போது, தி.மு.க-வின் 18 எம்.பி-க்கள் ஆதரவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று முடிவு எடுக்க வாய்ப்பு ஏற்படும். அதன் பிறகு, சோனியா வட்டாரம் தி.மு.க. குறித்த தீர்க்கமான முடிவை எடுக்கும்!
|