பிரீமியம் ஸ்டோரி

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
ஆசிரியர்
தலையங்கம்

மீண்டும் காவிரி?

மேட்டூர் அணை திறக்குமா? காடு கழனிகளில் பசும்கதிர்கள் தலையாட்டுமா? எதிர்வரும் தை, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்குமா? காவிரியை மையப்படுத்தி மீண்டும் சோதனைச் சுழல் தொடங்கிவிட்டது டெல்டா பகுதிகளில். வருடாவருடம் இதையே அரசியலாக்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், டெல்லி பயணம், பிரதமர் சந்திப்பு என்று அரசியல்வாதிகள் பொழுதுபோக்குவது வழக்கம்தான். ஆனால், இந்த வருடம் நாடகமாடவும், கண்துடைப்புக் காட்சிகள் அரங்கேற்றவும் அத்தனை சுலபமாக முடியாது.

காரணம், நெல் அறுவடை நடத்த வேண்டிய தை மாதத்தை ஒட்டியே ஓட்டு அறுவடை நடத்தவேண்டிய தேர்தலும் வருகிறது. தண்ணீரை மையப்படுத்தி, 'கடித இலக்கியம்' படைத்துவிட்டுச் சும்மா இருக்கவோ, தண்ணீர் கேட்டுத் தந்தி அடித்துவிட்டு மக்களின் மறதி நோயைப் பயன்படுத்திக்கொள்வதோ இந்த முறை முடியாது என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

மத்திய அரசில் அங்கம் வகிப்பதைத் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்துவது மட்டும் இன்றி, அண்டை மாநிலத்துக்கு டெல்லி மூலமாக அழுத்தம் கொடுத்து, நம் மாநிலத்தின் நலனைக் காப்பதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையேல், விவசாயிகள் அனைவரையும் அரசாங்கமே கட்டடக் கூலிகளாக மாற்றி நகரத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, விவசாய நிலங்கள் அனைத்தையும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாற்றி செல்போன்களும், கார்களும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் தயாரித்துக்கொண்டே இருக்கலாம். வந்தாரை வாழ வைத்துக்கொண்டே இருக்கலாம். தமிழ்நாட்டில் பிறந்தோரைத் தத்தளிக்க வைத்துக்கொண்டே இருக்கலாம்.

'வாடிய பயிரைக் கண்டால்தானே வாட வேண்டும்' என்று, இங்குள்ள 'நவீன வள்ளலார்கள்' பயிர் வைப்பதற்கே வழி இல்லாமல் செய்துவிடக் கூடாது!

தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு