Published:Updated:

ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!

ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!

பிரீமியம் ஸ்டோரி

"ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!"
ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!
ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!
ரீ.சிவக்குமார்,படம்:பொன்.காசிராஜன்
ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!

காங்கிரஸில் இருப்பவர்களுக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்களுக்கும்

'ஈ.வி.கே.எஸ்.' என்ற நான்கெழுத்து மட்டும் எப்போதுமே உதறல்தான். பெரியார் வழி மரபில் மனதில் தோன்றுவதைப் பட்டெனெப் பேசும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது மற்ற காங்கிரஸ் தலைவர்களைவிட எப்போதும் ஒரு தனித்துவ எதிர்பார்ப்பு உண்டு. கேட்கும் கேள்விகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் உடனடியாக வருகின்றன பதில்கள்.

"ராதாபுரம் பேருந்து நிலையப் பிரச்னையில் தி.மு.க. காங்கிரஸின் விருப்பத்துக்கு விரோதமாக நடந்துகொண்டதா?"

"மொத்தப் பிரச்னைக்கும் காரணம் அப்பாவு என்ற சட்டமன்ற உறுப்பினர் மட்டும்தான். கலைஞரின் பெற்றோர் சிலை வைப்பதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், காமராஜருக்கு உரிய மரியாதையைச் செலுத்த வேண்டும் என்கிற எங்கள் எதிர்பார்ப்பை எப்படித் தவறு என்று சொல்ல முடியும்? கலைஞரும் பல சந்தர்ப்பங்களில் காமராஜருக்குப் புகழாரம் சூட்டியிருப்பவர்தான். இப்போது ஒருவழியாக ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதற்காக கலைஞருக்கு நன்றி!"

ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!

"தி.மு.க. தனது ஆட்சியின் இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது. உங்கள் பார்வையில் தி.மு.க. ஆட்சியை மதிப்பிடுங்களேன்?"

"தி.மு.க. ஆட்சி பல மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அந்த வாக்கியத்தில் அடிக்கடி மூன்று வார்த்தைகள் மட்டும் விடுபட்டுவிடுகின்றன. அது, 'மத்திய அரசின் ஒத்துழைப்போடு'! மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், தமிழக அரசால் இவ்வளவு மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றியிருக்க முடியாது. சில சமயம் மத்திய அரசின் திட்டங்கள்கூடத் தமிழக அரசின் திட்டங்களைப்போலத் தவறாக விளம்பரப்படுத்தப்படுகின்றன என்ற மனக் குறையும் உண்டு. தி.மு.க. ஆட்சியின் குறைகள் என்று பார்த்தால் மின்தடையைச் சொல்லலாம். மேலும், இந்த ஆட்சியின் பயன் பொதுமக்களுக்குச் சென்று சேராமல், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில 'மக்களுக்கே' சென்று சேர்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள். தி.மு.க-வை நான் மட்டும்தான் காங்கிரஸில் கடுமையாக விமர்சிக்கிறேன் என்று எனக்கு ஏற்கெனவே பெயர் இருக்கிறது. ஆனால், எனக்கு யார் மீதும் எந்தக் காழ்ப்பு உணர்வும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உருவாகக் காரணமானவனே நான்தான்!"

"கோவை ஆர்ப்பாட்டத்தில், 'நீங்கள் விரும்பும் கூட்டணி கண்டிப்பாகத் தேர்தலின்போது அமையும்' என்று ஜெயலலிதா கோடி காட்டியிருக்கிறாரே! அது அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிதானா?"

"நியாயமாக இந்தக் கேள்வியை நீங்கள் ஜெயலலிதாவிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், 'காங்கிரஸோடு கூட்டணி அமைக்க வேண்டும்' என்பது ஜெயலலிதாவின் விருப்பம் என்பது மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது!"

"ராஜபக்ஷே முற்றிலுமாகப் புலிகள் இயக்கத்தை ஒழித்து விட்டார் என்கிறீர்கள். அப்படியானால், இல்லாத புலிகள் இயக்கத்துக்கு ஏன் மத்திய அரசு தடை விதிக்கிறது?"

"இன்னும் சில தீய சக்திகள், 'புலிகள் இருக்கிறார்கள்', 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே. புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் மட்டும் ஏற்றுக்கொண்டால் போதாது. அனைத்துத் தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்!"

"ஒருபுறம் நீங்கள் 'புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட வேண்டிய இயக்கம்' என்கிறீர்கள். ஆனால், மறுபுறம் உங்கள் கூட்டணியில் உள்ள கருணாநிதியோ செம்மொழி மாநாட்டை ஒட்டி வெளியான புலிகளின் அறிக்கையைக் காட்டி, 'புலிகளே செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்' என்றாரே, உங்கள் பார்வையில் பயங்கரவாத இயக்கமாக இருக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவை முதல்வர் எப்படி அங்கீகரிக்கலாம்?"

"காங்கிரஸ் கட்சிக்குத்தான் இலங்கைப் பிரச்னையில் உறுதியான நிலைப்பாடு உண்டு. ஜெயலலிதாகூட தேர்தல் நேரத்தில் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதைப் போல- பேசினார். ஆனால், சமீப அறிக்கையில், 'நான் புலிகள் இயக்கம் இலங்கை அரசால் அழிக்கப்பட்டதை எதிர்க்கவில்லை!' என்கிறார். சிலர் சில காலம் விடுதலைப் புலிகளை விமர்சிப்பார்கள். பிறகு, 'அன்புத் தம்பி பிரபாகரன்' என்று கொஞ்சுவார்கள். ஆனால், இந்தத் தடுமாற்றம், குழப்பம், மயக்கம் எதுவும் காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது!"

"ஒருபுறம், ராமேஸ்வரம் மீனவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சீமான் போன்றவர்களைத் தமிழக அரசு கைது செய்கிறது. இன்னொருபுறம், இலங்கைக் கடற்படை மீனவர்களைச் சுட்டுக்கொல்வதை மத்திய அரசு தடுப்பதும் இல்லை. தமிழக மீனவர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?"

"அண்டை நாடுகளோடு பிரச்னை ஏற்படும்போது சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்முறையைத் தூண்டக் கூடாது. சமயங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் சில சோதனைகளைச் சந்திப்பார்கள். ஒரு வெளிநாட்டுப் பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். ஒரு ஆஸ்திரேலியப் பாதிரியார் உயிரோடு கொளுத்தப்பட்டார். இதனால், இந்தியா மீது கோபம் கொண்டு, 'இந்தியர்களை அடித்துத் துரத்த வேண்டும்!' என்று வெளிநாட்டில் ஆவேசப்பட்டால் என்ன நடக்கும்? ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்னை என்பது இன்று, நேற்று ஏற்பட்ட பிரச்னை இல்லை. அதைப் பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்க்க வேண்டும். ஆனால், சீமானோ 'மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிக்க வேண்டும்!' என்று இனவிரோதத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார். அவர் கூட்டங்களில் நன்றாகப் பேசுகிறார் என்கிறார்கள். சமூக சீர்திருத்தம் போன்ற அவரது ஒரு சில கருத்துக்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. இப்போது சிறையில் அவருக்குச் சிந்திப்பதற்கு அதிக நேரம் இருக்கிறது. எந்தவிதத் தொல்லைகளும் இல்லாமல் சிறைச்சாலையில் முதல் வகுப்பில் இருக்கும் அவர், நிதானமாக யோசிக்க வேண்டும். இனிமேலாவது தன்னை நம்பி இருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உருப்படியான திசை காட்ட வேண்டும்!"

ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!

"எதிர்வரும் தேர்தலிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிதானா? அப்படியானால், எப்போதுதான் அமையும் காமராஜர் ஆட்சி?"

"இப்போதைக்கு தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், காமராஜர் ஆட்சிதான் எங்கள் இலக்கு. கூடிய விரைவில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் கடுமையாக உழைத்துவருகிறோம். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் அல்லது காங்கிரஸ் ஆதரிக்கும் கட்சியின் தலைமையில் அமையும் ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு தர வேண்டும். இதுதான் இப்போதைய எங்கள் விருப்பம்!"

ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!
ஜெயலலிதாவின் விருப்பம் புரிகிறது!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு