பிரீமியம் ஸ்டோரி

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
ஆசிரியர்
தலையங்கம்

வினையான விளையாட்டு!

தலையங்கம்

சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்பார்களே... அந்தக் கேடுகெட்ட நிலைமைதான் உருவாகி இருக்கிறது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளில்!

இந்த தேசத்தின் மானம், மரியாதைக்குச் சூனியம் வைத்துவிட்டு, அதில் இருந்து கோடிகளை கமிஷன் அடித்துவிட்டார்களா என்ற கேள்வி எல்லா இதயங்களிலும் கொதிப்பைக் கூட்டுகிறது.

விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், தங்கும் இடங்கள் ஆகியவற்றை அமைப்பதற்கான டெண்டர் விடுவதில் இருந்தே அரசியல் பெரிய மனிதர்களின் 'வேட்டை விளையாட்டு' தொடங்கிவிட்டது என்று குற்றச்சாட்டுகள். சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் களத்தில் இறங்கி விசாரிக்கத் துவங்கிவிட்டாலும், உண்மைகள் எத்தனை தூரம் முழுமையாக வெளியில் வரும் என்பது சந்தேகமே!

முறைகேடுகள்பற்றி முதன்முதலில் புலம்பித்தள்ள ஆரம்பித்தது எதிர்க் கட்சிகள் அல்ல. இதே விளையாட்டுத் துறைக்கு, இதே காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்பு அமைச்சராகப் பதவி வகித்த மணிசங்கர ஐயர். இதில் இருந்தே, நிலைமையின் விபரீதத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

35 ஆயிரம் கோடி ரூபாயை வாரியிறைத்து டெல்லியில் நடக்கப்போகும் காமன்வெல்த் போட்டிகள், நவீன இந்தியாவின் பொலிவான முகத்தை உலக நாடுகளுக்குக் கம்பீரமாகக் காட்ட வேண்டும். ஆனால், இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால்... திசை எட்டிலும் இருந்து வரப்போகும் பல்வேறு நாட்டு அணிகளையும் நம் தேசத்தின் இருட்டான ஊழல் முகம்தான் பல்லிளித்து வரவேற்கும்போல் இருக்கிறது!

உரிய அவகாசத்துக்குள் வேலையை முடிக்க இயலவில்லை... நடந்து முடிந்த வேலையிலும் தரம் இல்லை என்பதெல்லாம், அக்டோபர் மாதம் வரப்போகிற வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் எப்படிப் பார்க்கப்படும்?

கோடி கோடியாகக் கொட்டி, அலங்கார வண்டியில் அமர்த்தி, அசிங்கத்தை அல்லவா உலகறிய ஊர்வலம்விடப் போகிறோம்!

தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு