Published:Updated:

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?

பிரீமியம் ஸ்டோரி

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?
புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?
புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?
ப.திருமாவேலன்
புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?

கார்ட்டூனிஸ்ட் மதி சமீபத்தில் ஒரு கருத்துப் படம் வரைந்திருந்தார். ஈழப் பிரச்னை

தொடர்பாக கருணாநிதி அனுப்பிய கடிதத்துக்கு மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியதைக் கேலி செய்த படம். 'போற போக்கைப் பார்த்தால், இலங்கைப் பிரச்னை தீர்ந்திரும்போல இருக்கே' என்று அப்பாவி ஒருவன் சொல்வதாக அது அமைந்திருந்தது.

பிரதமர் இந்திரா காலத்தில் அனுப்பப்பட்ட பார்த்தசாரதி முதல், நாளை மன்மோகன் சிங் அனுப்பக் காத்திருக்கும் வெளியுறவுத் துறை அதிகாரி வரை இதுவரை டெல்லிக்கும் கொழும்புக்குமாகப் பறந்தவர்களை வரிசையாக நிறுத்தினாலே, அவர்கள் கழுத்தைப் பிடித்துக்கொண்டே கடலைக் கடந்துவிடலாம். அத்தனை பேர் போய் வந்துவிட்டார்கள். அடுத்ததாகப் போகவும் ஒருவர் காத்திருக்கிறார்.

கிராமத்தில் சொல்வார்கள், 'கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?' என்று. இலங்கையில் என்ன நடக்கிறது, என்னதான் நடக்கும் என்பதைப் போய்ப் பார்த்தால்தான் தெரியுமா என்ன?

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?

சமீபத்தில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனத்துக்கு ஈழத்து நிலைமையைச் சொன்ன அதன் நிருபர், 'இங்கு இரவு நேரத்தில் தனித்திருக்கும் ஆண்களும் பெண்களும் ஊளையிடுகிறார்கள். அவர்கள் அனை வருமே ஏதாவது ஒரு வகையில் மனரீதியாகப் பாதிக் கப்பட்டுள்ளார்கள்" என்று சொன்னார். அந்த அள வுக்கு மனநலம் குன்றியவர்களால், விதவைகளால், தாய்-தந்தையர் இழந்த அநாதைகளால் ஆனதாக ஈழ தேசம் ஈனஸ்வரத்தில் அழிவில், இழிவில் துடிக் கிறது.

'இலங்கை மக்களுக்கு என்ன செய்யலாம்?' என்று இப்போதுதான் அக்கறை வந்தவர்போல தமிழக முதல்வர் கருணாநிதியைக் கேட்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். "அரசியல் தீர்வு ஒன்றுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு. எந்த வாக்குறுதியை எல்லாம் இலங்கை வழங்கியதோ, அதில் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே, அதைப் பார்வையிட ஒரு சிறப்புத் தூதரை அனுப்பிவையுங்கள்" என்று கருணாநிதியும் பதில் தர... இப்போது வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் அனுப்பிவைக்கப்பட இருக்கிறார்.

புதிய தூதர் என்ன செய்வார்?

கொழும்பில் இறங்குவார். மகிந்த ராஜபக்ஷேவைச் சந்திப்பார், வடகிழக்கு மாகாணத்தில் செய்யப்பட்டு வரும் நிர்மாணப் பணிகள் தொடர்பாக பசில் ராஜபக்ஷேவிடம் பேசுவார், ஒருவேளை தமிழர் வாழும் பகுதிகளுக்குப் போக ஆசைப்பட்டால், பத்துப் பதினைந்து குடும்பங்களைக் கொண்டுவந்து காட்டி, புகைப்படம் எடுத்து அனுப்பிவைத்துவிடுவார்கள். இதைத் தவிர எதுவும் நடக்காது. ஆனால், இப்படி வரவிருக்கும் அதிகாரியைப்பற்றி இலங்கை அடித்த கமென்ட்தான் இந்த இடத்தில் முக்கியமானது.

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?

"இந்திய அதிகாரி இலங்கைக்கு வரலாம். இடம் பெயர்ந்தோர் நிலைமை தொடர்பாக ஆராயலாம். இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் பேச்சுக் களை நடத்தலாம். ஆனால், இரு நாடுகளுக்கும் இடையில் அது சுமுக உறவின் அடிப்படையில் இடம்பெற வேண்டும். அதனை விடுத்து, இலங்கைக்குப் பலவந்தமாகப் பருப்பு போட்டதைப்போன்றதாக அது இருக்கக் கூடாது" என்று இலங்கை ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவித்திருப்பது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்கமான மிரட்டல்.

பிரதமர் ராஜீவ் காலத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு விமானத்தில் எடுத்துச் சென்று உணவுப் பொட்டலத்தைப் போட்டதைத்தான் கெஹெலிய இப்படிக் கிண்டல் செய்கிறார். மன் மோகன் சிங்கால் இதுவரை அனுப்பிவைக்கப்பட்ட எந்தத் தூதரும் உண்மையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போகக்கூட முயற்சிக்கவில்லை என் பதை உணர்ந்தாலும், இந்தியாவை இலங்கை எவ்வளவு தூரம் ஏளனமாகப் பார்க்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "மக்களின் விடிவுக்காகப் போராடிய எம்மைப் பயங்கரவாதிகளாக ஆக்கிய இலங்கை, தற்போது ஐ.நா-வின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை இனவெறிகொண்ட இலங்கையிடம் நாம் பட்ட துன்பத்தைத் தற்போது சர்வதேசம் அனுபவிக்கிறது" என்று சொல்லியிருக்கிறார்கள். ஐ.நா. சபை அலுவலகத்தையே இலங்கையில் அனு மதிக்காமல், இந்தியா அனுப்பிவைக்கும் தூதர் வருவதற்கு முன்னால் மிரட்டலை விடுத்து, தெற்காசியப் பிராந்தியத்தில் 'பேட்டை தாதா'வாக வலம் வரும் ஒரு நாட்டிடம் இந்தியத் தூதர் கேட்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?

1. ஈழத்தின் நான்காவதுகட்டப் போர் தொடங்கிய 2005-ம் ஆண்டுக்கு முன் இருந்த வட கிழக்கு மாகாணத்தின் மக்கள் தொகை எவ்வளவு? இன்றைய மக்கள் தொகை எவ்வளவு? போர் நடந்த காலத்தில் இறந்தவர் எத்தனை? இப்போது இருப் பவர் எத்தனை பேர் என்ற கணக்குதான் இலங்கைப் பிரச்னையின் இன்றைய அடிப்படை அளவுகோலாக இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் அவர்களது வாழ்வாதாரங்களை அமைக்க முடியும்!

2. இன்னமும் முள்வேலி முகாமில் இருப்பவர் களின் எண்ணிக்கையை இலங்கை அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் மாற்றி மாற்றிச் சொல்கி றார்கள். டெல்லி வந்த ராஜபக்ஷே இன்னமும் 56 ஆயிரம் பேர் இருப்பதாகச் சொல்கிறார். 40 ஆயிரம் பேர் இருப்பதாக மன்மோகன் சிங் எழுதிய கடிதம் சொல்கிறது. கடந்த வாரத்தில் இலங்கை அமைச்சர் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரை மீள்குடியேற்றம் செய்ததாக அறிவிக்கிறார். மீதி இருப்பவர் கள் எத்தனை பேர் என்பதைச் சொல்லவில்லை!

3. மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களில் குடியேறியிருக்கிறார்கள் என்றால், அவர்கள் வாழும் வசதியுள்ளதாக அந்த வீடுகள் இருக்கின்றனவா? மொத்தமாக இடித்துத் தகர்க்கப்பட்ட வீடுகளில் எப்படி அவர்களால் வாழ முடியும்? அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள அவர்களுக்கு வசதி வாய்ப்புகள் செய்து தரப்பட்டுள்ளனவா? பட்டினிச் சாவுகள் அங்கு அதிகம் நடப்பதாகத் தொண்டு நிறுவனங்கள் சொல் கின்றன!

4. விவசாயம், மீன்பிடித்தல் ஆகிய இரண்டும்தான் அந்தப் பகுதி மக்களின் மிக முக்கியமான தொழில்களாக இருந்தன. ஆனால், இன்று விவசாயம் செய்ய நிலங் கள் தரப்படவில்லை, மீன் பிடிக் கக் கடல் பகுதிக்கு அனுமதிக்கப்படுவது இல்லை என்கிறார்கள். அதற்கான வழிவகைகள் எப்போதுதான் செய்து தரப்படும்?

5. சுமார் 11,000 எண்ணிக்கை யில் புலிப் போராளிகள் தங்களி டம் சரணடைந்து இருப்பதாக வும், பெண் போராளிகள் 3,000 பேர் வந்திருப்பதாகவும் அர சாங்கம் பகிரங்கமாக அறிவித் தது. அவர்கள் எங்கு தங்கவைக் கப்பட்டு உள்ளார்கள்? அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்? வழக்குகள் அவர்கள் மீது பதிவா கும் என்றால், தனியாக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை!

6. புலிகள் அமைப்பின் மிக முக்கியப் பொறுப்பாளர்களாக இருந்த பாலகுமார், பேபி சுப்பிரமணியன், புதுவை ரத்தினதுரை, யோகி... உள்ளிட்டவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது சிறைவைக்கப்பட்டு உள்ளார்களா என்பது குறித்து முழு விவரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த நிலையில் இருந்த தளபதிகள், கர்னல்கள் என ஏராளமானவர்கள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை!

7. தமிழர்களின் பூர்வீக பூமியாகச் சொல்லப்படும் வட கிழக்கு மாகாணத்தில் இன்று சிங்களவர்கள் அதிகம் குடியேற் றப்படுவதும், புத்தக் கோயில்கள் அதிக அளவில் நிர்மாணிக்கப்படுவதுமான தகவல்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் பரவி வருகிறது. இதைப் பகிரங்கமாக இலங்கை அரசாங்கம் மறுக்கவில்லை. யார் சொல்வது உண்மை என்பது விளக்கப்பட வேண்டும்!

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?

8. தனியார் தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதே தெரியவில்லை. இதுபோன்ற அமைப்புகளைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்!

9. கொழும்பு, யாழ்ப்பாணம், வட கிழக்கு மாகாணங்கள் ஆகிய தமிழர் வாழும் பகுதிகள் அனைத்திலும் மக்கள் குறை கேட்புக் கூட்டங்களை நடத்தி, உண்மை நிலைமையை அறிய வேண்டும்!

10. அனைத்துக்கும் மேலாக, இதுவரை இந்தியா கொடுத்த 500 கோடி ரூபாய் எப்படி, எதற்காகச் செலவழிக்கப்பட்டது என்ற கணக்கை வாங்க வேண்டும். இனி நாம் தர இருக்கிற 1,000 கோடியை என்ன விஷயங்களுக்காகச் செலவழிக்கக் காத்திருக்கிறார்கள் என்பதையும் அறிவிக்க வேண்டும்.

தமிழர்கள் மனதில் உள்ள இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இன்றைய தேவை. இவை எதுவும் இலங்கை அரசாங்கத்தின் ராணுவ ரகசியங்களோ, அதன் இறையாண்மைக்கு எதிரான விஷயங்களோ அல்ல. கருணாநிதி ஆலோசனைப்படி மன்மோகன் சிங் அனுப்பிவைக்கும் அதிகாரி இந்தத் தகவல்களை எல்லாம் வாங்கி வந்தால், அவர் தூதர்.

இல்லையென்றால் ஓரங்க நாடகத்தில் அவரும் ஒரு நடிகர்!

புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?
புதிய தூதர் என்ன செய்ய வேண்டும்?
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு