Published:Updated:

ராசா கைது கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.

ராசா கைது கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.

சென்னை, டிச.20,2010

முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கைது செய்ய வலியுறுத்தி, புதுச்சேரியில் அதிமுக சார்பில் இம்மாதம் 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயல்லிதா அறிவித்துள்ளார். ##~~##

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ராசா மூலம் இமாலய ஊழல் புரிந்து இரண்டாயிரம் தலைமுறைக்கு சொத்துக்களை குவித்து, வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி.

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத ஊழல் நடைபெற்று இருக்கிறது.  இவ்வளவு பெரிய தொகையை ராசா மட்டும் ஊழல் செய்திருக்க முடியாது என்று கருணாநிதியே கூறி இருக்கிறார். இதில் இருந்து, ராசா மட்டும் இந்த ஊழலில் ஈடுபடவில்லை என்பதும், ராசாவுக்குப் பின்னால் மிகப் பெரிய ஊழல் பெருச்சாளிகள் மறைந்து இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

இந்தச் சூழ்நிலையில், அரசியல் தரகர் என கூறப்படும் நீரா ராடியாவுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி, கருணாநிதியின் மனைவி ராசாத்தி ஆகியோர் பேசிய ஒலி நாடாக்கள் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்தப் பேச்சுக்கள் எல்லாம் வருமான வரித் துறையினரால் பதிவு செய்யப்பட்டவை. இந்தப் பேச்சுக்களைப் பார்க்கும் போது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு மட்டுமல்லாமல், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெளிவாகிறது.

இது மட்டுமல்லாமல், வருமான வரித் துறையினரால் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களில் கருணாநிதியின் மகனும், துணை முதலமைச்சருமான ஸ்டாலின், கருணாநிதியின் மனைவி தயாளு ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.  இதிலிருந்து நாட்டின் சொத்தைக் கொள்ளையடிக்க ஒரு மிகப் பெரிய சதித் திட்டம் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களால் தீட்டப்பட்டு, அது வெற்றிகரமாக முடிந்திருப்பது தெளிவாகிறது.

கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ள தொடர்புகள் குறித்தும், இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது குறித்தும் விசாரித்து உண்மைக் குற்றவாளிகள் வெளிக் கொணரப்பட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரடை மட்டும் தான். இந்த நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரடைக்கு ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நின்று போராடியும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை.

கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதால் தான், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரடைக்கு உத்தரவிடக் கூடாது என மத்திய அரசை தி.மு.க. தொடர்ந்து மறைமுகமாக வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

திமுக-வின் வற்புறுத்தலுக்கு, மிரட்டலுக்குப் பணிந்து மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரடைக்கு உட்படுத்த தொடர்ந்து மறுத்து வருகிறது. இதன் விளைவாக, இந்திய வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத அளவிற்கு 23 நாட்கள் நாடாளுமன்றப் பணிகள் முடங்கிப் போயின.      

எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உண்மைக் குற்றவாளிகளை வெளிக் கொணரும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியும்;

நீரா ராடியாவுடன் தொலைபேசியில் உரையாடிய மற்றும் அந்தத் தொலைபேசி உரையாடலில் இடம்பெற்றுள்ள கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்த வலியுறுத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநிலக் கழகத்தின் சார்பில், 22.12.2010 புதன்கிழமை அன்று காலை 9.30 மணி அளவில், புதுச்சேரி பழைய பஸ் நிலையம் - பேரறிஞர் அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தலைமை தபால் நிலையம் அருகில் வந்தடைந்து, அங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன், இந்த ஊழலில் ஈடுபட்டுள்ள ராசா உள்ளிட்ட  இதர நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, மேதகு குடியரசுத் தலைவருக்கு முகவரியிடப்பட்ட கோரிக்கை மனு, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநரிடம் அளிக்கப்படும். 

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு