Published:Updated:

மக்கள் பயன்பெறும் அனைத்து திட்டங்களுக்கும் நேரடி மானியம்: மோடி

Vikatan Correspondent
மக்கள் பயன்பெறும் அனைத்து திட்டங்களுக்கும் நேரடி மானியம்: மோடி
மக்கள் பயன்பெறும் அனைத்து திட்டங்களுக்கும் நேரடி மானியம்: மோடி
மக்கள் பயன்பெறும் அனைத்து திட்டங்களுக்கும் நேரடி மானியம்: மோடி

புதுடெல்லி: சமையல் சிலிண்டருக்கு வழங்குவது போல் மக்கள் பயன்பெறும் மற்ற திட்டங்களுக்கும் நேரடி மானியம் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசும்போது, ''நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், வரி விதிப்பு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ளவும் அரசு தீர்மானித்து உள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை எட்ட முடியும்.

இதற்காக விதிமுறைகளிலும், நடைமுறைகளிலும் தேவையான மாற்றங்களை அரசு செய்து வருகிறது. நிலக்கரி சுரங்கங்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது போல், அனைவருக்கும் நாள் முழுவதும் மின்சாரம் வழங்கும் வகையில் மின்சக்தி துறையிலும் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா விளங்குகிறது. காப்பீடு, ரியல் எஸ்டேட், பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு இருந்து வந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தம் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவும், அடிப்படை கட்டுமான வசதி, உற்பத்தி ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு உந்து சக்தியை ஏற்படுத்தவும் உதவும் என நம்புகிறேன்.

சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு மானிய தொகையை நேரடியாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நேரடி மானிய திட்டம் இதுதான். இந்த திட்டத்தை போல், மக்கள் பயன்பெறும் மற்ற திட்டங்களிலும் மானியத்தை நேரடியாக வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது.

மானியங்கள் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்திய உணவு கழக கிடங்கிகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கும், நுகர்வோருக்கும் உணவுப்பொருட்கள் சரியாக சென்று அடைவதை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவில் பொதுவினியோக திட்டம் கணினி மயமாக்கப்படும். வீணான செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நிதி பற்றாக்குறையை சமாளிக்க முடியும்" என்றார்.