Published:Updated:

மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா!

Vikatan Correspondent
மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா!
மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா!
மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா!

புதுடெல்லி: மும்பையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவர் பதவியை லீலா சாம்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தற்போது மேலும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

மத்திய மத்திய திரைப்பட தணிக்கை குழு மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது தவிர மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு, புதுடெல்லி, கட்டாக், கவுகாத்தி ஆகிய 9 நகரங்களில் பிராந்திய திரைப்பட தணிக்கை குழு செயல்படுகிறது. திரைப்படங்களுக்கு தணிக்கை குழு அமைப்பு சான்றிதழ் அளித்த பின்பே திரையிட முடியும்.

மேலும், திரைப்பட தணிக்கை குழு மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. திரைப்பட தணிக்கை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அதிகாரிகள் அல்லாத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள். பல்வேறு மாநில மொழி படங்களுக்கு பிராந்திய திரைப்பட தணிக்கை குழு தணிக்கை சான்றிதழ் வழங்கும். இங்கு திரைப்படங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டால், மத்திய திரைப்பட தணிக்கை குழுவிலும், அதன் பிறகு தீர்ப்பாயத்திலும் சென்று தணிக்கை சான்றிதழ் பெறும் வழிமுறை உள்ளது.

மும்பையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கை குழு தலைவராக லீலா சாம்சனும், 23 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னரும் இவர்கள் அந்த பதவியில் நீடித்து வந்தனர். இந்நிலையில், ''மெசஞ்சர் ஆப் காட்'' (கடவுளின் தூதர்) என்ற படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் லீலா சாம்சன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

மத்திய திரைப்பட தணிக்கை குழு இந்த படத்துக்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால், தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக லீலா சாம்சன் திரைப்பட தணிக்கை குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோருக்கு அனுப்பினார்.

அதில், சினிமா படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அரசியல் தலையிடும், ஊழலும் தலை விரித்தாடுவதாக குற்றம் சாட்டி இருந்தார். திரைப்பட தணிக்கை குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் ஊழல் வாதிகளாக உள்ளனர். அவர்களால் எங்களது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுகிறது என்று பரபரப்பு குற்றச்சாட்டுகள் தெரிவித்து இருந்தார்.

தற்போது, லீலா சாம்சனைத் தொடர்ந்து மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் மேலும் 8 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது சினிமா மற்றும் மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.